வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (25/09/2018)

கடைசி தொடர்பு:11:33 (26/09/2018)

மேஷ ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள்! - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

மேஷ ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள்! - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

மேஷ ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள்!

(4.10.2018 முதல் 28.10.2019 வரை) 

குரு
 

மேஷ ராசிமேஷம்: உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் இருந்த குரு பகவான், கணவன் - மனைவி  அந்நியோன்யம், குடும்பத்தில் மகிழ்ச்சி, சொத்துச் சேர்க்கை, வசதி வாய்ப்புகளைத் தந்தார். உங்களின் பாக்கியாதிபதியாகிய குரு பகவான் 4.10.18 முதல் 28.10.19 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து ஓர் ஆண்டுக்கு உங்களை வழி நடத்தப் போகிறார். பிறகு இடையில் கொஞ்ச காலம் வக்ரமாகி ஒன்பதாம் வீட்டுக்குப் போய் மீண்டும் 8 -ம் வீட்டுக்கே வருகிறார். இதனால் வருமானம் கொஞ்சம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. 8-ம் வீட்டில் மறைந்தாலும் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும், மனப்பக்குவத்தையும் தருவார்.

செலவினங்கள் அதிகமாகி கடன் வாங்க வேண்டிய நிலைமையும் வர வாய்ப்பு உள்ளது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. அதே நேரம் வெளிநாடுகளுக்கு, வெளிமாநிலங்களுக்குச் சென்று பொருள் ஈட்டுவதற்கு உரிய சாமர்த்தியத்தையும் வழங்குவார். 

ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரையுள்ள இரண்டு மாத காலத்தில் வருமானம் பெருகும். திடீர் பண வரவு, செல்வாக்கு, அதிர்ஷ்ட யோகங்கள் உண்டு. அலைச்சலுடன் ஆதாயமும் கிடைக்கும். பயணங்களும் ஏற்படும். தவிர்க்க முடியாத செலவுகளும் இருக்கும். ஆனால், வருமானத்துக்குக் குறைவிருக்காது.  

குருப்பெயர்ச்சி

குரு பகவான் 8-ம் வீட்டில் மறைந்திருக்கிற காலகட்டத்தில் உங்களுக்கு ஞாபக மறதி சற்று அதிகமாக இருக்கும். பணம், பொருள்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும். வாகனங்களைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை. குரு பகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால், வீடு கட்டுவது, திருமணம் போன்ற சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

குருபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவலாகி வரும்.

கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி சின்னச் சின்ன சலசலப்புகள் வந்து போகும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குரு பகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் சீரடையும். ஒரு சிலர் வீடு மாறுவதற்கு வாய்ப்பு உண்டு.
உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு இடமாற்றமும், வேலைச்சுமையும்  அதிகமாக இருக்கும். மேல் அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலை எதாவது மாறுவதாக இருந்தால், மார்ச் மாதம் தொடங்கி மே மாதத்துக்குள் மாறுவது நல்லது. 

மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பாடங்கள் அடிக்கடி மறந்துபோக வாய்ப்புள்ளது என்பதால், ஒருமுறைக்கு இரண்டு முறை எதையும் எழுதிப் பார்ப்பது நல்லது. பெண்கள் இந்த ஒரு வருட காலத்துக்குப் பண விஷயத்தில் சிக்கனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் கேட்கும் பொருள்களையெல்லாம் உடனுக்குடன் வாங்கித் தராமல், அவை அவசியம் தேவைதானா என்பதை ஆராய்ந்து வாங்கிக் கொடுப்பது நல்லது. கலைஞர்களுக்கு புதிய பட வாய்ப்புகள், சம்பள பாக்கி போன்றவை வந்து சேரும்.  

பரிகாரம்: பரிகாரமாகக் கரூர் மாவட்டம் வெண்ணெய் மலை என்னும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்று வணங்கி வந்தால், நல்ல  யோகப்பலன்கள் கிடைக்கும். 


Also Read: மற்ற ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்