வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (26/09/2018)

கடைசி தொடர்பு:14:38 (26/09/2018)

`எல்லா சாதியினரும் கும்பிடும் தெய்வம் பரியேறும் பெருமாள்!' - இயக்குநர் மாரி செல்வராஜ் 

`தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் தனி அடையாளத்தைப் பெற்றவர் மாரி செல்வராஜ். ஆனந்த விகடனில் அவர் எழுதிய `மறக்கவே நினைக்கிறேன்’ தொடர், வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராகப் பல வருடங்கள் பணியாற்றிய பின்னர், தற்போது `பரியேறும் பெருமாள்’ படத்தின்மூலம் இயக்குநராக உயர்ந்துள்ளார். இப்படம், நாளை மறுநாள் வெளியாகிறது. `பரியேறும் பெருமாள் என சாமி பெயரை படத்துக்கு தலைப்பாக வைக்கக் காரணம் என்ன?’ என்று அவரிடம் கேட்டோம். 

இயக்குநர் மாரி செல்வராஜ்

“திருநெல்வேலி மாவட்டத்துல பரியேறும் பெருமாள் முக்கியமான தெய்வம். இந்தத் தெய்வத்துக்கு, `சாஸ்தா வழிபாடு’ன்னு ஒண்ணு இருக்கு. அதாவது, குலதெய்வ வழிபாடு. அதில் எல்லா சாதியினரும் பாகுபாடு பார்க்காமல் சேர்ந்து பூஜை செய்வாங்க. அதுதான் இந்த சாமியுடைய விசேஷம். எங்க குடும்பத்துக்கும் பரியேறும் பெருமாளுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. எங்களுடைய குலசாமி அவர்தான். என்னுடைய அப்பாவுடைய ஜாதகப் பேரும் அதுதான். அதனால்தான் அப்பா, என் அண்ணனுடைய பேரை பரியேறும் பெருமாள்னு வைச்சாரு. எனக்கும் அந்தப் பேரு மேல பெரிய ஈர்ப்பு உண்டு. அதையே என்னுடைய பேரா வைச்சிக்கணும்னு ஆசையும் இருந்துச்சு. 

`பரியேறும் பெருமாள் சாமி குதிரை மேல் வருவாருடா. கையில் பெரிய சாட்டை வைச்சிருப்பாரு. தப்பு செய்றவங்களை அந்த சாட்டையாலதான் அடிப்பாரு’ன்னு சின்ன வயசிலேயே எங்கம்மாகிட்ட கதை கேட்டு வளர்ந்திருக்கேன். ரொம்பவும் உக்கிரமான தெய்வம். இப்போதும் அந்தப் பகுதியில வழக்குமொழி கதையா இது உலவிக்கிட்டுதான் இருக்கு. அதனாலதான், என்னோட முதல் படத்தின் கதையை எழுதினப்போ, கதாநாயகனோட பேரை பரியேறும் பெருமாள்னு வைச்சேன். ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்துல இருந்து முதல் தலைமுறையா கல்வி, பொருளாதாரத்துல முன்னோக்கி வர்ற ஒரு இளைஞன் சந்திக்கிற சவால்கள்தான், பரியேறும் பெருமாள்” என்கிறார் மாரி செல்வராஜ்