குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா ஆலங்குடியில் நாளை தொடக்கம்! | gurupeyarchi special Archanas starts Tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (26/09/2018)

கடைசி தொடர்பு:15:20 (26/09/2018)

குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா ஆலங்குடியில் நாளை தொடக்கம்!

குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது, குருப்பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி, அக்டோபர் 4-ம் தேதி வருகிறது. துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார். இதனால், ஒவ்வொரு ராசிக்காரருக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். அந்த நாளில்,  குருபகவானுக்கு பரிகாரம் செய்து வழிபட்டால் சிறப்பு என்பது பலரின் நம்பிக்கை. நவகிரகத் தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயர் ஆலயம், குரு ஸ்தலமாக விளங்குகிறது.

குருப்பெயர்ச்சி

தேவாரப் பாடல் பாடப்பட்ட இந்த ஆலயத்தில், குருப்பெயர்ச்சிக்கான லட்சார்ச்சனை விழா வியாழக்கிழமை (செப்டம்பர் 27) தொடங்குகிறது. முதல்கட்டமாக, 27-ம் தேதி தொடங்கி 1-ம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் கட்டமாக  அக்டோபர் 5-ம் தேதி  முதல் 15-ம் தேதி வரை நடைபெறும். தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும்,  மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும்  நடைபெறும். 

பக்தர்கள் வசதிக்காக சிறப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  சிறப்பு பூஜைகளும் நடந்துவருகின்றன. இக்கோயிலுக்குச் சென்று, அனைத்து ராசிக்காரர்களும் பரிகாரம் செய்துகொள்ளலாம். விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.  அதற்காக போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  லட்சார்ச்சனையில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள், குறிப்பிட்ட கட்டணம் செலுத்தினால் அவர்களுக்கு தபாலில் குருபகவான் உருவம் பதித்த டாலர் மற்றும் பிரசாதம் அனுப்பிவைக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.