சனி தோஷம் நீக்கும் பழநி திருஆவினன்குடி சனீஸ்வரன் கோயில்! | Remedies to Remove Sani Dosha Temple in Palani

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (26/09/2018)

கடைசி தொடர்பு:22:00 (26/09/2018)

சனி தோஷம் நீக்கும் பழநி திருஆவினன்குடி சனீஸ்வரன் கோயில்!

திருநள்ளாறுக்கும் குச்சனூருக்கும் போக முடியலியா? கவலையை விடுங்கள் பழநியில் இருக்கிறார் சனீஸ்வரன்!

வகிரகங்களில் ஒருவர், சனிபகவான். சனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பலரும் பரிகாரம் செய்வதற்குத் திருநள்ளாறு, குச்சனூர் ஆகிய தலங்களுக்குச் செல்வது வழக்கம். அங்கு சென்றிட இயலாதவர்கள் முருகனின் மூன்றாம் படைவீடான பழநி திருஆவினன்குடியில் உள்ள சனீஸ்வரனை வழிபட்டு திருநள்ளாறு, குச்சனூருக்கு நிகரான பலனைப் பெறலாம்.

பழனி

தமிழ்நாட்டிலேயே, ஒற்றைச் சனிக்கான தனிக்கோயில் பழநியில் மட்டுமே  உள்ளது. சனீஸ்வரனின் திருவுருவச் சிலையானது, புடைப்புச் சிற்பமாக இல்லாமல் முழுவுருவச் சிலையாக உள்ளது. காக்கை வாகனத்துடன், நின்றகோலத்தில், கிழக்குநோக்கி முருகனுக்கு எதிர்திசையில் அமைந்துள்ள சிறப்பு உடையது இத்தலம்.

இந்திரன் ஒருமுறை...' எல்லோரையும்விட, தான்தான் உயர்ந்தவன்' என்ற ஆணவத்தில் திளைத்திருக்க, கோபம்கொண்ட சனீஸ்வரர், தனது உக்கிரப் பார்வையை இந்திரன்மீது செலுத்தினார். எனவே இந்திரன் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகியதுடன், தன் பதவியையும் இழந்து தவித்து, சிவபெருமானைச் சரணடைந்தார். சிவனோ, சனீஸ்வரன் எங்கு கிழக்குநோக்கி அமைந்துள்ளாரோ அங்கு சென்று அவரை வழிபட்டால் சுபம் உண்டாகும் என்றுரைக்க, அதன்படி இந்திரன் இங்கு வந்து சனீஸ்வரனை வழிபட்டு தனது பிரச்னைகளிலிருந்து விடுபட்டதோடு, மீண்டும் தனது பதவியைப் பெற்றார் என்பது இத்தலத்துக்கான புராணக்கதை.

பழனி சனீஸ்வரன் கோயில்

திருநள்ளாறு, குச்சனூர் சனீஸ்வரன் தலங்களுக்கு இணையாகப் பழநி ஆவினன்குடி தலமும் சிறப்புடையது என்பதால் தென்மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு வருபவர்கள் முதலில் முருகனை வழிபட்டு, பின்னர் சனீஸ்வரனைத் தரிசிக்க வேண்டும். வடைமாலை சாத்தியும், எள் சாதம் படைத்தும், எள் முடிச்சுகளைத் தலையைச் சுற்றி நெருப்பில் இட்டும், விளக்கேற்றியும் இங்கு வழிபடுகிறார்கள். சனீஸ்வரனுக்கு உகந்த நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. புரட்டாசி சனிக்கிழமைகள் மிகவும் சிறப்புக்குரியன. சிறப்பு நாள்களில் சனீஸ்வர பகவானுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

இத்தலத்துக்கு வந்துசெல்லும் பலருக்கும் இங்கு அமைந்துள்ள சனீஸ்வரனின் சிறப்புகள் தெரியாதிருப்பது, வருத்தத்துக்குரியது. சங்கடங்கள் நீக்கி சகல வளங்களையும் பெறுவதற்கு, பழநி சனீஸ்வரனை வழிபடுங்கள்.