வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (30/09/2018)

கடைசி தொடர்பு:11:08 (30/09/2018)

நிபந்தனையில்லாத அன்பு நிலைவாழ்வைப் பெற்றுத்தரும்! - பைபிள் #Bible

நிபந்தனை இல்லாத அன்பு கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை!

நிபந்தனையில்லாத அன்பு நிலைவாழ்வைப் பெற்றுத்தரும்! - பைபிள் #Bible

மெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் ராக்பெல்லர். திடீரென ஒருநாள் அவர் நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். கோடீஸ்வரர் என்பதால் அவருக்கு மருத்துவம் பார்க்க, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைசிறந்த மருத்துவர்கள் அழைத்துவரப்பட்டார்கள். சிறப்பான சிகிச்சைகள் அளித்தும் அவரைப் பாதித்த நோய் நீங்கவே இல்லை. 

பைபிள்

இந்நிலையில் அவரைப் பார்ப்பதற்காக அவரது நெருங்கிய நண்பரும் உளவியலாளருமான ஒருவர் வந்திருந்தார். அவர் ராக்பெல்லரிடம், “நண்பா! உனக்கு ஏழைகளுக்கு உதவி செய்யும் பழக்கம் இருக்கின்றதா?” என்று கேட்டார். அதற்கு அவர், “அதுவெல்லாம் எனக்குக் கிடையவே கிடையாது” என்றார். உடனே அவருடைய நண்பர், “இன்றிலிருந்து நீ ஏழைகளுக்குத் தாராளமாக உதவி செய். அதற்குப் பின் ஏற்படும் மாற்றத்தைப் பார்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

நண்பர் சொன்னதை ஏற்றுக்கொண்ட ராக்பெல்லர் ஏழை எளிய மக்களுக்கு தாராளமாக உதவி செய்யத் தொடங்கினார். அவர் அவ்வாறு உதவி செய்யத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. ஆம், அவரால் எழுந்து உட்கார முடிந்தது; முன்புபோல் பணிகளை இலகுவாகச் செய்ய முடிந்தது. ஏழைகளுக்கு உதவுவதன் மூலம் வாழ்நாளைக் கூட்ட முடியும் என்ற உண்மை அப்போதுதான் அவருக்குப் புரிந்தது. இதையடுத்து அவர் தொடங்கியதுதான் ‘ராக்பெல்லர் பவுண்டேசன்’. இந்த அமைப்பு இன்றைக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், மருத்துவம் தொடர்பாக பல நல்ல காரியங்களை ஏழை எளிய மக்களுக்குத் தொடர்ந்து செய்துவருகிறது.

ஏழை எளிய மக்களுக்கு உள்ளன்போடு உதவி செய்வதால், வாழ்நாளைக் கூட்ட முடியும் என்ற உண்மையை உணர்த்திய, ராக்பெல்லரின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு நமது கவனத்துக்கும் உரியதாக இருக்கிறது.

பைபிள் வழிபாடு

விவிலியத்தில் கூறியுள்ளபடி திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, அவரைச் சோதனை செய்து பார்க்கும் நோக்கத்துடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்கிறார். திருச்சட்ட அறிஞருக்கு நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்பது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் இயேசுவின் வாயிலிருந்து என்ன வருகிறது என்பதற்காகக் கேட்கிறார். இயேசுவோ அவரிடம் ‘திருச்சட்ட நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது? அதில் என்ன வாசிக்கிறீர்?’ என்று பதில் கேள்வி கேட்டு, அவருடைய வாயாலே அதற்குப் பதிலையும் சொல்ல வைக்கிறார்.

திருச்சட்ட அறிஞர், “உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்று சொன்னதும் இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்கிறார். ஆம், நிலைவாழ்வினைப் பெற்றுக்கொள்ள இறைவனையும் தன்னோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளையும் அன்பு செய்யவேண்டும். அப்படி ஒருவர் அன்பு செய்யும்போது அவர் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வது உறுதி.

இயேசு

இறைவனையும் தன்னோடு வாழக்கூடிய சகோதர சகோதரியையும் எப்படி அன்பு செய்யவேண்டும் என்பதற்கு இயேசு தொடர்ந்து சொல்லும் உவமைதான் நல்ல சமாரியன் உவமை. நல்ல சமாரியன் உவமை வெறும் உவமை மட்டுமல்ல, எருசலேமிலிருந்து எரிக்கோ வரை அன்றாடம் நடைபெறக்கூடிய நிகழ்வுதான். அப்பகுதி இன்றைக்கும் கொலை மற்றும் கொள்ளைக்கும் பேர் போன இடமாக இருக்கிறது. அப்படிப்பட்ட இடத்தின் வழியாகச் செல்லக்கூடிய ஒரு யூதரைத்தான் கள்வர்கள் பிடித்து அடித்து அவரிடமிருந்ததை எல்லாம் கவர்ந்துகொண்டு அவரைக் குற்றுயிராகப் போட்டுவிட்டுப் போகிறார்கள். அப்போது அந்த வழியாக ஒரு குரு வருகிறார். அடிபட்டுக் கிடப்பவரைக் கண்டும் காணாமல் போகிறார். அவரைத் தொடர்ந்து ஒரு லேவியர் வருகிறார். அவரும் அடிபட்டுக் கிடப்பவரைக் கண்டும் காணாமல் போகிறார். ஆனால், கடைசியில் வரும் சமாரியரோ அவருக்குப் சிகிச்சை பார்த்து, அவரைச் சாவடிக்குக் தூக்கிக்கொண்டு போய் அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்கிறார். இவ்வாறு அந்த சமாரியர் அடிபட்டுக் கிடப்பது தன்னுடைய எதிராளியான யூதராக இருந்தாலும் அவருக்கு எல்லாம் செய்து, அவருடைய உயிரைக் காப்பாற்றுகிறார். இதன்மூலம் ஒருவரை எப்படி அன்பு செய்யவேண்டும் என்பதற்கு அவர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார். அதனால்தான் அவர் நல்ல சமாரியர் ஆகின்றார். 

நாமும்கூட நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளை நிபந்தனை இல்லாமல் அன்பு செய்யும் பொது நிலைவாழ்வினை ஏற்றுக்கொள்வோம் என்பது உறுதி. ஆகவே, ஒருவர் மற்றவரை எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் அன்புசெய்து, கடவுளையும் அன்பு செய்பவர்கள் ஆவோம். அதன்வழியாக நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம்.