வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (01/10/2018)

கடைசி தொடர்பு:18:53 (01/10/2018)

தாமிரபரணி மகா புஷ்கர விழா தொடக்கமாக கங்கா பூஜை, அபிஷேக ஆராதனை!

வ்வொரு வருடமும் ஒரு நதியில் புஷ்கர விழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். குரு பகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ, அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா நடைபெறும். ஒரு நதியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மகத்தான வைபவம் இது. 144 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது மகா புஷ்கரம் என்று சிறப்பிக்கப்படுகிறது. 

தாமிரபரணி புஷ்கர விழா

இந்த வருடம் விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணியில் மகா புஷ்கர விழா வரும் 11-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 12 நாள்கள் நடைபெற உள்ளது. விழாவின் தொடக்கமாக, தாமிரபரணி நதியைத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. தற்போது விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. தாமிரபரணி நதிக்கரையில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் வரை 143 படித்துறைகள் அமைந்திருக்கின்றன. தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் நீராடி, வழிபாடு செய்ய விரும்பும் அன்பர்கள், அவர்களுடைய வசதிக்கேற்ப இந்தப் படித்துறைகள் ஒன்றில் நீராடி வழிபடலாம். இதன் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். 

தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, தாமிரபரணியின் பெருமைகளைப் போற்றும் ஒரு பாடல் இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் வெளியிடப்பட்டிருக்கிறது. மகா புஷ்கர விழாவின் தொடக்கமாக, இன்று காலை திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்ரமணியர் கோயிலில் கங்கா பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுப்ரமணியருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.