வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (05/10/2018)

கடைசி தொடர்பு:13:20 (05/10/2018)

`குரு எங்களுக்கு எல்லாம் தருவார்' - வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள் நெகிழ்ச்சி

தஞ்சாவூர் அருகே குரு பரிகாரத் தலமான வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு  சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டதோடு மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் தங்களது பெயரில் சிறப்பு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். குருவைப் பார்த்தால் கோடி நன்மை தருவார் என்பார்கள். அதன்படி குரு எங்களுக்கு எல்லாம் தருவார் என கோஷங்கள் முழங்க பக்தர்கள் வழிபட்டனர். 

குருப்பெயர்ச்சி

தஞ்சாவூர்  அருகே திட்டையில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற வசிஷ்டேஸ்வரர் கோயில். இக்கோயிலில் தனிச் சந்நிதியில் குரு பகவான் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு குருப்பெயர்ச்சியின்போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து குருபகவான் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில், குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு நேற்று இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனால் இக்கோயிலில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். குருப்பெயர்ச்சி நடைபெற்ற நேரத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். மேலும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு காலையிலிருந்தே லட்சார்ச்சனை நடைபெற்றதோடு குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து குரு பகவானுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. கோயில்

மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் தங்களது பெயரில் சிறப்பு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக குருப்பெயர்ச்சியையொட்டி பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக வரும் 10-ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. மேலும், அக்.12 முதல் 15-ம் தேதி வரை தொடர்ந்து பரிகார ஹோமங்கள்  நடைபெறும்.

பக்தர் ஒருவரிடம் பேசினோம். ``குருவைப் பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். அதுவும் குருப்பெயர்ச்சி தினத்தில் குருபகவானை வழிபட்டால் நம்மை துன்பங்களில் இருந்து காப்பதோடு எந்தச் சிக்கல்கள் இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ வைப்பார். மேலும், குருப்பெயர்ச்சிக்காக பரிகார பூஜை செய்து குருவை வழிபட்டேன். உலக மக்கள் அனைவரும் எந்தத் துன்பங்கள் வராமல் வாழ வேண்டும். இயற்கையால் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் எப்பவுமே அமைதியுடன் காணப்பட்டு காலத்துக்கேற்ப மக்களுக்கு தர வேண்டிய மழை உள்ளிட்ட அனைத்துச் செல்வங்களையும் அளவோடு எந்தப் பாதிப்பு இல்லாமல் தர வேண்டும் என மனமுருகி வேண்டிக் கொண்டேன். இந்தக் குருப்பெயர்ச்சி மக்களுக்கு பல நன்மைகள் தரும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க