வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (06/10/2018)

கடைசி தொடர்பு:18:53 (06/10/2018)

இடிந்துவிழும் நிலையில் வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய் தலம்! - விழித்துக்கொள்ளுமா நிர்வாகம்?

"கோபுர மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் உள்ளதால், பக்தர்கள் இவ்வழியாக பிரவேசிக்க வேண்டாம்" என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது.

"கொடுமை, கொடுமைனு கோவிலுக்கு போனா, அங்கே இரண்டு கொடுமை தலையை விரிச்சுப்போட்டு ஆடுச்சாம்" என்ற கதையாகத்தான் இருக்கிறது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் நவக்கிரக ஸ்தலங்களில் செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோயிலின் நிலைமை.

செவ்வாய் தலம்

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில், தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில், நவக்கிரக ஸ்தலங்களில் செவ்வாய்க்குரிய ஸ்தலமாக விளங்கும் இங்கு, வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக் குமாரசுவாமி, அங்காரகன் (செவ்வாய்), தன்வந்திரியுடன் அருள் பாவித்துவருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு ஊர்களில் இருந்தும், நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்கள்.  முகூர்த்த தேதிகளில் திருமணம், காது குத்து, வளையல்காப்பு போன்ற பல நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில், பல்வேறு தரப்பட்ட பக்தர்கள் தினம் வருகைதரும் வைத்தீஸ்வரன்கோயிலின் உள்ளே, பக்தர்கள் சென்றுவரும் வழியில் கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகை பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. "கோபுர மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் உள்ளதால், பக்தர்கள் இந்த வழியாகப் பிரவேசிக்க வேண்டாம்" என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. 

செவ்வாய்

கோயிலுக்குள் சென்றுவரும் பிரதான வழியில் உள்ள சண்முக விலாஸ் பிரசார மண்டபம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அன்றைய தினம் இந்து சைவக் கோயில்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் பாலசுப்பிரமனியம் கூறுகையில், "தமிழகத்தின் பழைமையான கோயில்களில் ஒன்று வைத்தீஸ்வரன் கோயில். கோயிலின் மேற்கு கோபுரவாசல் வழியில் உள்ள மேற்கூரைகள், பல ஆண்டுகளாகச் சிதிலமடைந்து, அவ்வப்போது இடிந்துவிழுகிறது. எனவே கோயில் நிர்வாகம், மேற்குக் கோபுரவாசல் பகுதியில் உள்ள சிதிலமடைந்த பகுதிகளை அகற்றிவிட்டு புதிய மேற்கூரை அமைக்க வேண்டும்" என்றார். ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்தக் கோபுர மேற்கூரை சரி செய்யாமல் இருப்பது பக்தர்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

இடிந்துவிழும் நிலையில் மேற்கூரை இருப்பதால், அறிவிப்புப் பலகை கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருந்தாலும், கோயிலுக்குள் செல்லும் பிரதான வழி மேற்குக் கோபுர வாசல் என்பதால், பக்தர்கள் அந்த ஆபத்தான வழியைப் பயன்படுத்திவருகின்றனர். எந்த நேரம் வேண்டுமானாலும் மேற்கூரை இடிந்துவிழும் என்ற அச்சம் இருந்தும் வேறு வழியின்றி,  மேற்குக் கோபுர வாசலைப் பயன்படுத்திவரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

செவ்வாய் ஸ்தலம் தூய்மையான முறையில் பராமரிப்பு இன்றியும், கோயில் திருக்குளத்தின் படிகள் பாசி பிடித்து, தீர்த்தம் எடுக்க இறங்கும் பக்தர்களைக் குலத்துக்குள் வழுக்கி விழவைக்கும் நிலை, பக்தர்களுக்குத் தங்கும் வசதி, குடிநீர் வசதி என அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருந்த நிலையைத் தாண்டி, இன்று உயிர்ப்பலி வாங்கக் காத்திருக்கிறது வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய் ஸ்தலம்.

"12 வருடங்களுக்கு ஒரு முறை கோயில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என சட்டம் ஏதும் இல்லை. கோயில் பணிகளுக்கு ஆட்கள் இல்லை என்று சொல்லும் வைத்தீஸ்வரன் கோயில் நிர்வாகம், 20 வருடங்களுக்கு மேலாகியும் கும்பாபிஷேகம் செய்வதற்கான சிறு முயற்சியைக்கூட மேற்கொள்ளவில்லை. கட்டளை மடம், ஆர்.சி.சி மண்டபம், பணியாளர் குடியிருப்பு தொடர்பான பணிகள் எல்லாமே அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் டெண்டர் விடப்பட்டு, அரை குறையாக நிற்கிறது. மேலும், கோயிலுக்குள்ளேயே சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி, மடப்பள்ளி, வசந்த மண்டபம் என்று பல இடங்கள் சிதிலமடைந்திருக்கின்றன. வங்கி இருப்பில் போதிய பணம் இருந்தும், கோயிலைப் புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்யாமல் இருக்கிறது.

இதைச் சரிசெய்ய, தருமை ஆதீனம் நடவடிக்கை எடுக்குமா, இல்லை இந்து சைவக் கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சரிசெய்ய முனைப்பு காட்டுமா என்று பக்தர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மேற்கூரை இடிந்து, பக்தர்களுக்கு சேதம் ஏற்பட்ட பிறகுதான் மாற்றம் பிறக்குமா என்ற கேள்விதான் தரிசனத்துக்குப் பிறகு உதயமாகிறது.