வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (08/10/2018)

கடைசி தொடர்பு:14:05 (08/10/2018)

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் அந்திம புஷ்கர விழா இன்று தொடக்கம்!

ஒவ்வொரு வருடமும் குருப்பெயர்ச்சியின்போது குருபகவான் செல்லும் ராசிக்கு உரிய நதியில் `புஷ்கரம்' என்ற பெயரில் விழா நடைபெறுவது வழக்கம். இந்த புஷ்கரம் தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும். இந்நாள்களில் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் அந்த நதிக்கு உரிய குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்பட்டு பக்தர்கள் புனித நீராடுவர். புஷ்கரம் நடைபெறும் வேளையில் அந்த நதியானது காசிக்கு இணையான தீர்த்தமாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த நாள்களில் கங்கை, யமுனை போன்ற மற்ற நதிகளும் இதில் நீராடி தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்கின்றன என்பது ஐதீகம்.

புஷ்கர விழா

இதேபோல் சென்ற வருடம் குருப் பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவான் பெயர்ச்சி அடைந்து சென்ற துலாம் ராசிக்கு உரிய காவிரியில் புஷ்கரம் நடைபெற்றது. தலைக்காவிரி தொடங்கி கடலுடன் இணையும் நெடிய பாதையில், `காவிரி துலாக்கட்டம்' மிகவும் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. இது நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. இங்கு சென்ற வருடம் காவிரி மகா புஷ்கர விழா 12 நாள்கள் விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், ஆதீன குருமார்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். தற்போது குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்கிறார். அதனால், விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணியில் (திருநெல்வேலி குறுக்குத்துறை) வருகின்ற 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தாமிரபரணி புஷ்கர விழா நடைபெறவுள்ளது.

அம்மன்

இந்த நிலையில், காவிரி புஷ்கரம் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் 'அந்திம புஷ்கர விழா'வானது இன்று தொடங்குகிறது. குருபகவான் காவிரியிலிருந்து செல்வதால் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இன்றும், நாளையும் காவிரி துலாக்கட்டத்தில் வேத பாராயண வேள்வி யாகத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளன.

தற்போது காவிரியில் நீர்வரத்து உள்ளதால் காவிரி துலாக்கட்டம் காவிரி நீரால் நிரம்பிக் காணப்படுகிறது. இதனால் இந்த அந்திம புஷ்கர விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த விழாவில் தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.