வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (08/10/2018)

கடைசி தொடர்பு:15:50 (08/10/2018)

`எங்களின் கனவு சதயவிழாவில் நிறைவேறிவிட்டது'- தஞ்சை பெரிய கோயிலில் உருகிய பக்தர்கள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1033-வது சதய விழாவுக்காக பந்தக்கால் ஊன்றப்படும் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள், ``ஒவ்வொரு ஆண்டு சதயவிழாவின்போது குஜராத் மியூசியத்தில் உள்ள ராஜராஜன் சோழன் சிலையை மீட்டுக் கொண்டுவந்து விழாவை நடத்த வேண்டும். அப்போதுதான் விழா சிறக்கும் என்றோம். எங்களின் அந்தக் கனவு ஆசை இந்த சதய விழாவில் நிறைவேறி விட்டது'' என்று மகிழ்ச்சி பொங்க கூறுகின்றனர்.

சதய விழா

தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1033-வது சதய விழா வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக இன்று காலை பந்தக்கால் நடும் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். கோயிலின் உள் வளாகத்தில் தெற்குப் புறத்தில் கொடி மரத்துக்கு மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து தீபம் ஏற்றப்பட்டு பந்தக்கால் ஊன்றப்பட்டது.

இது குறித்து கோயில் வட்டாரத்தில் பேசினோம். ``ராஜராஜ சோழன் ஐப்பசி மாதத்தில் பிறந்தார். இந்த நாளே சதயவிழாவாக கொண்டாடப்படுகிறது. ராஜராஜ சோழன் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால் அதைக் குறிப்பிடும் வகையிலும் சதய விழா என்கிற பெயரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1033-வது சதய விழாவைக் கொண்டாடுகிறோம். இதற்காக கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். அன்றைய தினத்தில் ராஜராஜன் சிலைக்கு அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். இதற்காக இன்று பெருவுடையார் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பந்தக்கால் ஊன்றப்பட்டது'' என்றனர்.

பக்தர்கள் சிலரிடம் பேசினோம். ``இதுவரை இல்லாத சிறப்பு இந்த சதயவிழாவுக்கு ஏற்பட்டுள்ளது. குஜராத் மியூசியத்தில் இருந்த ராஜராஜசோழன் மற்றும் உலகமாதேவி சிலைகள் மீட்டுக் கொண்டுவரப்பட வேண்டும் என பல ஆண்டுகளாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்தாண்டு சிலைகளை மீட்டுக் கொண்டு வந்து பெருவுடையார் சந்நிதிக்கு எதிரே வைத்துள்ளனர். பக்தர்கள் மெய்சிலிர்க்க மாமன்னின் சிலையைப் பார்த்து வணங்கிச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், ராஜராஜ சோழன் சிலையோடு 1033-வது சதய விழா கொண்டாடப்படுவது மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. சென்ற ஆண்டுகளைவிட இன்னும் பிரமாண்டமாக சதய விழா கொண்டாடப்பட வேண்டும். எங்களின் அந்தக் கனவு ஆசை. இந்த சதய விழாவில் நிறைவேறிவிட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க கூறுகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க