வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (08/10/2018)

கடைசி தொடர்பு:15:44 (08/10/2018)

மகர ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள்! - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

மகர ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள்! - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

கர ராசிக்காரர்களே... ​​​​​உங்கள் ராசிக்கு 10-ல் இருந்த குருபகவான், உங்களுக்குத் தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அநேக கஷ்டங்களைக் கொடுத்து வந்தார். உங்களுக்கு வந்த துன்பங்களை அடுத்தவர்களிடம் சொல்லவும் முடியாமல், சொல்லாமலும் இருக்க முடியாமல் நீங்கள் துன்பப்பட்டீர்கள். நன்றாக உழைத்தும் நல்ல பெயர் கிடைக்காமல் இருந்து வந்தது. இனி அந்த நிலைமை உங்களுக்கு இருக்காது.

குருப்பெயர்ச்சி

4.10.18 முதல் 28.10.19 வரை ராசிக்கு லாபஸ்தானத்துக்கு அதாவது 11-ம் வீட்டுக்கு வந்து விட்டார். பணவரவு அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.  பிள்ளைகளுக்கு உங்களுடைய சொத்துகளை முறையாகப் பிரித்துக்கொடுப்பீர்கள்.

தேங்கிக்கிடந்த வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக நடக்கத்தொடங்கி வெற்றிகரமாக முடியும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். மொத்தத்தில் உங்களுக்கு இருந்து வந்த பணப்பிரச்னைகள் தீரும். எல்லா வகையிலும் இந்த குருப்பெயர்ச்சி வெற்றிகரமாக அமையும்.  

மகரம்

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் மனோபலம் கூடும். தைரியமாகவும், தெளிவாகவும் சில முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள்.

பூர்வ புண்ணியஸ்தானமான  5-ம் வீட்டை குரு பார்ப்பதால், நீண்ட நாள்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

குரு ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த பிணக்குகள் தீர்ந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். 

13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 12-ல் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், திடீர்ப் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு: இதுநாள் வரை இருந்து வந்த கஷ்ட நஷ்டங்கள் தீரும். பற்று வரவு உயர்ந்து நல்ல லாபம் ஈட்டுவீர்கள்.  பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிணக்குகள் தீரும். புதிய பங்குதாரர்களும் உங்களுடன் வந்து இணைந்துகொள்வார்கள். அனுபவமிக்க வேலையாள்களைப் பணியில் அமர்த்துவீர்கள். புதிதாக ஏஜென்சி எடுத்தால், நல்ல லாபம் கிடைக்கும்.

 

 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு: இத்தனை நாள்களாகப் பத்திலிருந்த குரு உங்களைப் பாடாய்ப்படுத்தி இருப்பார். வேலை நிரந்தரமாக இருக்குமோ இருக்காதோ என்று பயந்துகொண்டுதான் இருப்பீர்கள். தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வேலைத் தொடர்பான வழக்குகள் தள்ளுபடியாகும்.

மாணவர்களுக்குப் படிப்பில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறும். உங்கள் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை அகலும். நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். 

கலைத்துறையினருக்கு: ரிலீசாகாமல் தடைப்பட்டுக்கிடந்த படங்கள் ரிலீஸாகி வசூலில் சாதனை புரியும். உங்கள் திறமைக்கு உரிய பாராட்டும், பரிசும் கிடைக்கும்.

பரிகாரம்: திருவண்ணாமலை ​​​​​​மாவட்டம், களம்பூர் எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீவீர ஆஞ்சநேயரை ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க