வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (09/10/2018)

கடைசி தொடர்பு:18:10 (09/10/2018)

`எனக்கு விஐபி வழி வேண்டாம்!' - வரிசையில் நின்று தரிசனம் செய்த பொன்.மாணிக்கவேல்

குரு பரிகார ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்குச் சென்ற சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,பொன்.மாணிக்கவேல், பொதுமக்களோடு வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தார். இதைப் பார்த்த பக்தர்கள், அவரின் இந்தச் செயலைப் பாராட்டியதோடு வாழ்த்துகளும் தெரிவித்தனர். மேலும், இதுபோல எல்லா அதிகாரிகளும் எளிமையாக இருந்து தமிழகத்துக்கு மேலும் பெருமைசேர்க்க வேண்டும் எனக் கூறினர்.

ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

கும்பகோணம் அருகே உள்ள குரு பரிகார ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு நேற்று வந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,பொன்.மாணிக்கவேல், சுவாமி தரிசனம் செய்யச் சென்றவர், பொது வரிசையில் பொதுமக்களோடு சேர்ந்து வரிசையில் சென்றார். இதைப் பார்த்த ஊழியர்கள் சிலர் ஓடி வந்து, சார் நீங்க ஏன் பொது வழியில் வர்றீங்க. வாங்க சார் விஐபி-க்கு என சிறப்பு வழி உள்ளது. அதில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என அழைத்தனர். அதற்கு பொன்.மாணிக்கவேல், நோ நோ... நான் இப்ப சுவாமி தரிசனம் செய்ய வந்திருக்கேன். அதை முடித்துவிட்டு, பணி சார்ந்த விஷயத்தில் ஈடுபட உள்ளேன். நான் இதிலேயே வருகிறேன். நீங்கள் எனக்காக எந்த சிறப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டாம்'' என்று கூறி, அவர்களை அனுப்பிவைத்ததோடு, மக்களோடு மக்களாக வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயிலின் பாதுகாப்பு, அதில் இருக்கும் சிலைகளின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்திக் கேட்டறிந்தவர், கோயிலைச் சுற்றி வலம் வந்து பார்வையிட்டார். அப்போது அறநிலையத்துறை அதிகாரிகளிடம், 'சோமாஸ்கந்தர் சிலை இருக்கும் இடத்தில் சிறிய அளவிலான பூட்டு போடப்பட்டிருக்கிறது. அதை மாற்றிவிட்டு, பெரிய பூட்டாகப் போட்டு பூட்டுங்கள்' என்றதோடு, கோயில் பாதுகாப்பு குறித்தும் சில ஆலோசனைகள் கூறிவிட்டு கிளம்பினார்.

பொன்.மாணிக்கவேல்

இதுகுறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், ``சில தினங்களுக்கு முன் தான் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதற்காக ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எனப் பலர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். தற்போதும் வந்த வண்ணம் உள்ளனர். எல்லோருமே கோயிலுக்கு வரும்போதே தகவல் கொடுத்துவிட்டு வருவதோடு, சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துவைக்கச் சொல்லி விட்டு வருவார்கள். எவ்வளவு மக்கள் வரிசையில் காத்திருந்தாலும் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல், நேராக மூலவர் சந்நிதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வார்கள். ஆனால், உயர் பதவியில் இருப்பதோடு, கோயில்களின் பாதுகாப்பு அதிகாரியாகவும் இருக்கும் பொன்.மாணிக்கவேல், எந்த பந்தாவும் செய்யாமல், மக்களோடு மக்களாக நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு, பிறகு பணி சார்ந்த விஷயங்களைக் கவனித்தார். அவரின் இந்தச் செயல், எங்களை பெருமையும் பெருமிதமும் கொள்ளவைத்தது. அதோடு, அவரை மனதார பாராட்டவும் செய்தோம்'' என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க