வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (10/10/2018)

கடைசி தொடர்பு:15:47 (10/10/2018)

`சிலைகள் ஒரிஜினல்தானா?' தஞ்சை பெரிய கோயிலில் இரவில் களமிறங்கிய பொன்.மாணிக்கவேல் டீம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று இரவு 11 மணி வரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் கோயிலில் இருக்கும் புராதன சிலைகள் ஒரிஜினலாக உள்ளதா ஆரம்பத்தில் இருந்ததுபோல் எடை சரியான அளவில் அப்படியே இருக்கிறதா என மிகவும் ரகசியமாக ஆய்வு நடத்தினர். அப்போது பல கேள்விகளுக்கு கோயில் தரப்பில் பதில் சொல்ல முடியாமல் தவித்ததாகச் சொல்லப்படுகிறது.

தஞ்சை பெரிய கோயில்

சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் சிலைகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆய்வு நடத்தினர். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆய்வில் பெரிய கோயிலில் இருந்த புராதன சிலைகள் எதுவும் மாற்றபட்டுள்ளதா என்பது குறித்த கணக்கெடுப்பு நடத்தியதாகவும் இங்குள்ள எத்தனை சிலைகள் பழைமையானவை என்றும் கணக்கெடுப்பு நடத்தியதாகவும் தெரிவித்தனர். மேலும், இந்த ஆய்வில் ஒரு சில சிலைகளில் சமீபகால தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி சுந்தரம் தலைமையில் தஞ்சாவூர் எஸ்.பி செந்தில்குமார் மற்றும் காவலர்கள் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு இரவு 7 மணிக்கு வந்தனர். பிறகு, கோயிலில் இருக்கும் சிலைகள் ஒரிஜினல்தானா, அதன் எடை சரியாக உள்ளதா என எடைபோட்டு சரிபார்த்தனர். அப்போது தமிழில் பொறிக்கப்பட்ட சிலைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

பொன் மாணிக்கவேல் டீம்

இது குறித்து சிலரிடம் பேசினோம். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் இரவு 7 மணிக்கு வந்தவர்கள் 11 வரை விசாரணையில் ஈடுபட்டனர். அறநிலையத்துறை அதிகாரிகள்மற்றும் ஊழியர்களிடம் சிலைகள் குறித்து விசாரணை செய்யப்பட்டன.இந்த விசாரணையை ரகசியமாகவே செய்தனர்.இங்கு இருந்த சிலைகள் மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக வேறு சிலைகள் செய்து வைக்கப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினரின் பல கேள்விகளுக்கு கோயில் தரப்பில் பதில் சொல்ல முடியாமல் தவித்தனர். 60 ஆண்டுகளுக்குப் பிறகு, குஜராத்திலிருந்து ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகள் மீட்டுக் கொண்டுவரப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாக வாய்ப்புள்ளது'' என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க