சிறப்பு தரிசன சலுகைகள் ரத்து! - திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் வரலாறு | History of tirumala tirupati Bramotsavam

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (10/10/2018)

கடைசி தொடர்பு:17:30 (10/10/2018)

சிறப்பு தரிசன சலுகைகள் ரத்து! - திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் வரலாறு

இந்த வருடம் திருமலை வேங்கடவனுக்கு இரண்டாவது முறையாக பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இப்படி ஒரே வருடத்தில் இரண்டு முறை பிரம்மோற்சவம் நடைபெறும் நிகழ்ச்சி 3 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. ஒரே வருடத்தில் இரண்டு முறை பிரம்மோற்சவம் நடைபெறுவதால், பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் மலையப்ப சுவாமியின் பிரம்மோற்சவத்தை தரிசித்து மகிழ முடியும்.

திருப்பதி

பிரம்மோற்சவத்தின் வரலாறு

கி.பி 614-ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான வரலாற்று ரீதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பல்லவ நாட்டை ஆண்ட பெருந்தேவி என்றழைக்கப்பட்ட சமவை என்பவர்தான் முதன்முதலில் இந்த பிரம்மோற்சவத்தை நடத்தியுள்ளார். அப்போது அவர் வெள்ளியினால் வடிவமைக்கப்பட்ட  மணவாளப் பெருமாள் என்னும் சிலையை திருப்பதி கோயிலுக்கு வழங்கினார். அந்தச் சிலைதான்,  'போக சீனிவாசமூர்த்தி' என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.

விஜயகண்டா கோபாலா தேவுடு 1254-ம்  ஆண்டிலும், யாதவராயலு 1329 -ம் ஆண்டிலும் வீர பிரதாப ராயலு 1429-ம்  ஆண்டிலும் ஹரிஹர ராயலு 1446-ம் ஆண்டிலும் அச்சுதராயலு 1530-ம் ஆண்டிலும் பிரம்மோற்சவ விழாவை நடத்தியுள்ளனர். 1583-ம் ஆண்டு வரை இந்த விழாவை நடத்தியுள்ளதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. திருமலையின் முதல் பிரம்மோற்சவத்தை பிரம்மாவே முன்னின்று நடத்தியதாக ஐதீகம். பிரம்மோற்சவம் 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. மன்னர்களும் பேரரசர்களும் தாங்கள் பெற்ற வெற்றியின் அடையாளமாக இந்த விழாவை நடத்தினர்.

இந்த வருடம் முதல் பிரம்மோற்சவம் கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது பிரம்மோற்சவம் இன்று (10-ம் தேதி) தொடங்கி 9 நாள்கள் நடைபெறுகிறது. செப்டம்பர் மாத பிரம்மோற்சவத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் இதில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்யலாம். 

 

கருடசேவா

இரண்டாவது முறையாக இந்த ஆண்டிலேயே நடப்பதால், இதில் ஓரளவு கூட்ட நெரிசல் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யலாம். இந்த விழாவிலும் மலையப்பசுவாமி காலை மாலை இரண்டு வேளைகளிலும் திருமலையிலிருக்கும் நான்குமாட வீதிகளில் உலா வருவார்.
 இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று (10-ம் தேதி) தொடங்கி, 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.  பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று (9-ம் தேதி) அங்குரார்ப்பன நிகழ்ச்சி நடைபெற்றது. வருகிற 14-ம் தேதி காலை 9 மணிக்கு மோகிணி அவதாரத்தில் சுவாமி வீதி உலா  நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு கருட சேவையும் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு தரிசன சலுகைகள் ரத்து!

பிரம்மோற்சவத்தை தரிசிக்க பக்தர்கள் பெரும்திரளாக வருவார்கள் என்று எதிர்பார்ப்பதால், பிரம்மோற்சவம் நடைபெறும் நாள்களில் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள், மூத்தக் குடிமக்கள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு தரிசன சலுகைகள் அனைத்தையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close