வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (12/10/2018)

கடைசி தொடர்பு:18:50 (12/10/2018)

`பாரம்பர்யத்துக்கு எதிரானது!' - சபரிமலை விவகாரத்தில் களமிறங்கிய பந்தளம் அரச குடும்பம்

`சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்’ என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நாளிலிருந்தே கேரளாவில் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று பந்தளம் அரச குடும்பத்தினர் கேரளா தலைமைச் செயலகம் அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி ஹிந்து அமைப்புகள், பெண்கள், பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கேரளாவின் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசும், கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டும் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்யாததைக் கண்டித்து தேவசம் போர்டின் அமைச்சர் வீட்டு முன்பு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. கண்ணீர் புகைக் குண்டு வீசியும் தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிரம் பெற்று வரும்  நிலையில் பந்தளம் அரச குடும்பத்தினர், ``கோயிலுக்குள் அனைத்து பெண்களையும் அனுமதிப்பதென்பது பாரம்பர்யத்துக்கு எதிரானது’ என்று கூறி உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் அரச குடும்ப பெண்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க