வெளியிடப்பட்ட நேரம்: 09:18 (14/10/2018)

கடைசி தொடர்பு:09:21 (14/10/2018)

ஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கும்

கடகராசி அன்பர்களுக்கு பணவரவு கணிசமாக உயரும்; ஆடை, ஆபரணங்கள் சேரும்; மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

ஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கும்

 


மேஷம்மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், சுக்கிரன்; 7, 8-ல் புதன்; 8-ல் குரு; 9-ல் சனி; 10-ல் செவ்வாய், கேது; 4-ல் ராகு உள்ளனர்.

செவ்வாய், மாத மத்தியில் புதன் ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு நற்பலன்களைத் தருவார்கள். காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடவும். குருபகவானின் 7-ம் இடத்துப் பார்வை ஓரளவு சிறப்பான பலன்களைத் தரும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

ஆனால், பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கேது 8-ல் இருப்பதால் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

தொழில், வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். போட்டிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆனாலும்,. சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். வீண் அலைச்சலும் அதனால் மனச் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகளைப் பெறுவதற்குக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். பெண் கலைஞர்கள் விஷயங்களில் தலையிடவேண்டாம். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

மாணவ - மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். கஷ்டப்பட்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர் களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். 

அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 18, 19, 20, 21,24, 25, 26, 29, 30 நவம்பர்:4, 5, 6, 7, 8, 13, 14, 15, 16

சந்திராஷ்டம நாள்கள்: நவ: 9, 10 

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் அபிராமி அம்மை பதிகம் பாராயணம் செய்வது மிகவும் நன்மை தரும்.

பரிகாரம்: ஞாயிறு அன்று சூரியனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவதும், வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு அர்ச்சனை செய்வதும் நல்லது.

 

ரிஷபம்ரிஷபராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு  6 -ல் சூரியன், சுக்கிரன்; 6, 7-ல் புதன்; 7-ல் குரு; 8-ல் சனி; 9-ல் செவ்வாய், கேது; 3-ல் ராகு உள்ளனர்.

மாதமுழுவதும்  சூரியன், குரு, ராகு ஆகியோரும்  மாத முற்பகுதியில் புதனும் நன்மை செய்வார்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். கேது சாதகமாக இல்லாத காரணத்தினால் கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

அலுவலகத்தில் சக ஊழியர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும். 

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். படைப்புகள் பெரும் வரவேற்பு பெறும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். பெண் கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மாணவ மாணவியர்க்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும்

பெற்றோர்களின் பாராட்டுகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். பணிக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். 

அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 20,  21, 22, 23, 27, 28, 31 நவம்பர்:1, 6, 7, 8, 9, 10, 16

சந்திராஷ்டம நாள்கள்: நவ: 11, 12 

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: திருஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தை தினமும் பாராயணம் செய்வதன் மூலம் சிவபெருமான் அருளால் சிரமங்கள் குறையும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசிமாலை அணிவித்து அர்ச்சனை செய்வதும், செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலத்தில் துர்காதேவியை வழிபடுவதும் நல்லது.



மிதுனம்மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 5 -ல் சூரியன், சுக்கிரன்; 5, 6-ல் புதன்; 6-ல் குரு; 7-ல் சனி; 8-ல் செவ்வாய், கேது; 2-ல் ராகு உள்ளனர்.

மாதம் முழுவதும் சுக்கிரன், இரண்டாவது வாரத்திலிருந்து புதன் ஆகியோர் மட்டுமே நன்மைகளைத் தருவார்கள். குருவின் 9-ம் இடத்துப் பார்வை மிகவும் சாதகமாக உள்ளது. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.  ஆனால், சூரியன் 5-ல் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கூடுமானவரை அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

அலுவலகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். உயர் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு திடீர் இடமாற்றம்,. பணிமாற்றம் ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் இருக்காது.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசி வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆண் கலைஞர்களுக்கு பெண் கலைஞர்களாலும், பெண் கலைஞர்களுக்கு ஆண் கலைஞர்களாலும் நன்மைகள் ஏற்பட சாத்தியம் உள்ளது.

மாணவ மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். சிலருக்கு வெளியூர் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 22, 23, 24, 25, 26, 29, 30 நவம்பர்:2, 3, 9, 10, 11, 12

சந்திராஷ்டம நாள்கள்: அக்: 18, 19 நவ: 13, 14, 15 

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: 'குலம் தரும் செல்வம் தந்திடும்' என்று தொடங்கும் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களை பாராயணம் செய்வது அளவற்ற நன்மைகளைத் தரும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுவதும், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபடுவதும் நன்மை தரும்.
 


கடகம்கடகராசி அன்பர்களே! 

உங்கள் ராசிக்கு 4 -ல் சூரியன், சுக்கிரன்; 4, 5 -ல் புதன்; 5-ல் குரு; 6-ல் சனி; 7-ல் செவ்வாய், கேது; 1-ல் ராகு உள்ளனர்.

மாதம் முழுவதும் குரு, சுக்கிரன், சனி,மாத முற்பகுதியில் புதன் ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும். சூரியன் 4-ல் இருப்பதால் தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும்.

அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். மாதப் பிற்பகுதியில் ராணுவம், காவல், தீயணைப்புத் துறை போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம். அரசாங்க வகையில் கிடைக்கவேண்டிய அனுமதிகள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 18, 19, 24, 25, 26, 27, 28, 31 நவம்பர்:1, 4, 5, 11, 12, 14, 15

சந்திராஷ்டம நாள்கள்: அக்:21, 22 நவ: 16 

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: 'ஆலம்தான் உகந்து அமுது செய்தானை' என்று தொடங்கும் சுந்தரரின் பதிகத்தைப் பாராயணம் செய்வது அளவற்ற நன்மைகளைத் தரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் நாகதேவைதை வழிபாடும், பிரதோஷத்தன்று நந்திதேவருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்து வழிபடுவதும் நன்மை தரும்.


சிம்மம்சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 3 -ல் சூரியன், சுக்கிரன்; 3, 4 -ல் புதன்; 4-ல் குரு; 5-ல் சனி; 6-ல் செவ்வாய், கேது; 12-ல் ராகு உள்ளனர்.

மாதம் முழுவதும் சூரியன், சுக்கிரன், செவ்வாய், கேது, மாத முற்பகுதியில் புதன் ஆகியோரால் நன்மைகள் ஏற்படும்.வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.  இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். 

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். ரசிகர்களிடம் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். 

மாணவ மாணவியர்க்கு, படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆனாலும் உடனே சுதாரித்துக்கொண்டு பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச்  செல்லும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.

அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 18, 19, 20, 21, 27, 28, 29, 30 நவம்பர்: 2, 3, 6, 7, 8, 14, 15, 16

சந்திராஷ்டம நாள்கள்: அக்:22, 23 

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் அல்லது கந்தகுரு கவசம் பாராயணம் செய்வது நன்மை தரும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி,அர்ச்சனை செய்வதும், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபடுவதும் நல்லது. 



கன்னிகன்னிராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 2 -ல் சூரியன், சுக்கிரன்; 2, 3 -ல் புதன்; 3-ல் குரு; 4-ல் சனி; 5-ல் செவ்வாய், கேது; 11-ல் ராகு உள்ளனர்.

சுக்கிரன் மற்றும் ராகு ஆகியோர் மட்டுமே நன்மை செய்வார்கள். புதனால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். இந்த மாதம்அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதியை பாதிக்கக்கூடும். கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது.

எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். ஆனால், புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  ஆனால்உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.

தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். சிலருக்கு விருதுகளும் பட்டங்களும் கிடைக்கும்.

மாணவ - மாணவியர்க்கு படிப்பில் இருந்த தேக்க நிலை மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். ஆனாலும், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்:  20, 21, 22, 23, 29, 30, 31 நவம்பர்:1, 4, 5, 9, 10, 16

சந்திராஷ்டம நாள்கள்: அக்:24, 25, 26

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் விநாயகர் அகவல் பாராயணம் செய்வது நன்மை தரும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

 

அடுத்த ஆறு ராசிகளுக்கான பலன்களைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 
 


டிரெண்டிங் @ விகடன்