வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (15/10/2018)

கடைசி தொடர்பு:13:10 (15/10/2018)

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3000 கலைஞர்களின் நவராத்திரி நாட்டியத் திருவிழா!

சிதம்பரம் ஸ்ரீ சிவகாமி ஸமேத ஸ்ரீநடராஜ பெருமான் கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த புதன்கிழமை தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சாரதா நவராத்திரி விழாவில், பொதுமக்கள் வழங்கிய 2500 கொலு பொம்மைகள் 21 படிக்கட்டுகளில் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் பெருந்திரளாக வந்து கொலுவைப் பார்வையிட்டு வணங்கிச் செல்கின்றனர்.

நவராத்திரி நாட்டிய விழா

இந்த விழாவுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் முதல் முறையாக ஸ்ரீ ஸபாபதி சங்கீத கானசபா டிரஸ்ட் நடத்தும் 3000 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்குபெற்ற ஸ்ரீ நவராத்திரி நாட்டிய சமர்ப்பண வைபவம் சனிக்கிழமையன்று (13.10.18) இரவு நடைபெற்றது. 3000 நாட்டியக் கலைஞர்கள், முக்கியமாக மாணவர்கள் ஒரே நேரத்தில் பங்குபெற்று ஆடியதால் இது பாரம்பர்ய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள பல பரத நடனப் பள்ளிகளிலிருந்து மாணவர்களும் அவர்களது குருமார்களும் இதற்காகத் தயாராக வந்தனர். இந்தப் பெரும் நிகழ்ச்சியைக் காண பெற்றோர்கள், பக்தர்கள், இசை மற்றும் நாட்டிய ரசிகர்கள் பலர் அலைகடலென திரண்டு வந்திருந்தனர்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த நடன நிகழ்ச்சி வரும் புதன்கிழமை வரை நீடிக்கும். இறுதியாக, பங்குபெற்ற அனைத்து நடனப் பள்ளிகளுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்படும்.