அமருவியப்பன் கோயிலில் ஆயிரம் குடவெண்ணெய் புஷ்பங்கி உற்சவம்! | Amaruviyappan Thousand Kudavayey Pushpangi Festival at Amaruvayappan Temple

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (15/10/2018)

கடைசி தொடர்பு:14:30 (15/10/2018)

அமருவியப்பன் கோயிலில் ஆயிரம் குடவெண்ணெய் புஷ்பங்கி உற்சவம்!

Amaruviyappan

தேரழந்தூரிலுள்ள அமருவியப்பன் கோயிலில் ஆயிரம் குடவெண்ணெய் புஷ்பங்கி உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அமருவியப்பன் கோயிலில் ஆயிரம் குடவெண்ணெய் புஷ்பங்கி உற்சவம்!

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே தேரழந்தூரில் 10-வது திவ்யதேசமான அமருவியப்பன் கோயில் உள்ளது.  கோமளவள்ளி தாயார், செங்கமல வள்ளித்தாயார் சமேத ஸ்ரீ தேவாதிராஜன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து உற்சவர் அமருவியப்பன் என்றழைக்கப்படுகிறார். அமருவியப்பன் என்றால் `பசுவை மேய்ப்பவன்' என்று பொருள். முன்னொரு காலத்தில் இத்தலத்து இறைவன் மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது உபரிஜரவசு என்ற தேவலோக மன்னன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். அந்தத் தேரின் நிழற்பட்டு பூமியில் மேய்ந்துகொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்படவே, இறைவன் அந்தத் தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார்.

குடவெண்ணெய் புஷ்பங்கி

இவ்வாறு தேர் பூமியில் அழுத்தியதால் இந்த ஊர் தேரழந்தூர் என்று அழைக்கப்படுகிறது. பசுக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தியதால் மன்னனுக்கு ஹோகத்தி தோஷம் உண்டாகியது. எனவே, மன்னன் இறைவனுக்கு ஆயிரம் குடங்கள் வெண்ணெய் சமர்ப்பித்து மனமுருகப் பிரார்த்தனை செய்து ஹோகத்தி சாபம் நீங்கப்பெற்றான் என்பது ஐதீகம்.  இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் தை அமாவாசை மற்றும் புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் மூலவருக்கு ஆயிரம் குடம் வெண்ணெய் புஷ்பங்கி உற்சவம் நடைபெறுகிறது.  

அந்த வகையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்றுமுன் தினம் ஸ்ரீ தேவாதிராஜன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.  அதைத் தொடர்ந்து ஆயிரம் குடங்களில் வெண்ணெய் கொண்டு நிரப்பி, வெண்ணெய் புஷ்பங்கி சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.