திருப்பதி கருடசேவை - கொட்டும் மழையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்! | Devotees gathered in Tirupati for Garuda seva celebration

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (15/10/2018)

கடைசி தொடர்பு:15:50 (15/10/2018)

திருப்பதி கருடசேவை - கொட்டும் மழையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்!

திருமலை திருப்பதியில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. தெலுங்கு வருட பஞ்சாங்கத்தைப் பொறுத்தவரை  அமாவாசைக்கு மறுநாள் தெலுங்கு மாதப் பிறப்பு தொடங்குகிறது. இப்படி அமாவாசைக்கு மறுநாள் வருடப்பிறப்பு நிகழ்வதால், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆண்டுக்கு 12 மாதங்களும், கூடுதலாக 21 நாள்களும் வருகின்றன.

இதை அவர்கள் `அதிக மாசம்' என அழைக்கின்றனர். வைகாநச ஆகம முறைப்படி 12 மாதங்களுக்கு ஒருமுறை பிரம்மோற்சவம் கொண்டாடப்பட வேண்டும். இதனால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 12 மாதங்களைக் காட்டிலும் அதிக நாள்கள் வருவதால், அப்போது 2 பிரம்மோற்சவங்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்துகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவங்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வருகின்றன. 

திருப்பதி

இதையொட்டி, இந்த ஆண்டின் இரண்டாவது பிரம்மோற்சவமான நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 10-ம் தேதி தொடங்கி, ஆறு நாள்களாக நடைபெற்று வருகிறது. 

தினமும் காலை، மாலை இரண்டு வேளைகளிலும் திருமலையிலிருக்கும் நான்குமாட வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மோகினி அவதாரத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும்,  இரவு 7 மணிக்கு கருட சேவையும் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக கருடசேவை கருதப்படுவதால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டனர். திருப்பதி வேங்கடேசப் பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 

சேவகர்கள்

முன்னதாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த நடனம் மற்றும் கூத்துக் கலைஞர்கள் விழாவில் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்தி விழாவை வண்ணமயமாக்கினர்.  வண்ண விளக்குகளால் திருமலை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு பூலோக சொர்க்கமாகக் காட்சி அளித்தது.

கருட சேவையையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. பக்தர்கள் அனைவருக்கும் உணவுப்பொட்டலங்கள் மற்றும் குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் தேவஸ்தான ஊழியர்கள் மட்டுமல்லாமல் 2000 பக்தர்கள் சேவகர்களாகக் கலந்துகொண்டு இறைப்பணி ஆற்றினர். விழா ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்திருந்தது.

படங்கள்: திருமலை திருப்பதி தேவஸ்தானம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க