வெளியிடப்பட்ட நேரம்: 12:07 (16/10/2018)

கடைசி தொடர்பு:12:07 (16/10/2018)

41 நாள் விரதமிருந்து, கருங்காளி வேஷங்கட்டி, கும்பம் எடுப்போம்... குலசை அனுபவம் பகிரும் திருநங்கை ராணி!

"பொதுவா முத்தாரம்மன் கோயிலுக்கு வர்றவங்க விரதமிருந்து மாலை போட்டுப் போவாங்க. நான் 41 நாளு விரதமிருந்து வேடம் கட்டிகிட்டு இருக்கேன். திருநங்கைகள்னு இல்லாம ஆண்களும் மாலை போட்டு பெண்காளி, கருங்காளி வேடம் கட்டுவாங்க. விரதமிருந்து வேஷம் கட்டற அத்தனை நாளும் காதுல கம்மல், காலுல கொலுசு, மூக்குத்தி, கை நெறைய வளையல், கழுத்துல தாலி அணிஞ்சு, மஞ்சள் தேய்ச்சித்தான் குளிப்போம்."

41 நாள் விரதமிருந்து, கருங்காளி வேஷங்கட்டி, கும்பம் எடுப்போம்... குலசை அனுபவம் பகிரும் திருநங்கை ராணி!

``அம்மா... முத்தாரம்மா... நான் ஒரு திருநங்கை. என்னோட குடும்பத்தார் என்னை ஒதுக்கி வெச்சிட்டாங்க. நான் குடும்பத்தோட மீண்டும் ஒண்ணு சேரணும். அதுக்கு நீதான் தாயி அருள்புரியணும். இந்த வாட்டி நான் மட்டும்தான் உன்னைப் பார்க்க வந்துருக்கேன். அடுத்த வாட்டி  குடும்பத்தோட வந்து உன்னைப் பார்க்க வரம் தா...’ன்னு தான் முதல் முறையாகக் காளி வேடம் போட்டுக்கிட்டு வேண்டிகிட்டேன்” என்று குலசை முத்தாரம்மனுடன் தனக்கு ஏற்பட்ட இறை அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார் திருநங்கை ராணி.

முத்தாரம்மன் கோயில்

தூத்துக்குடி மாவட்டம்,  குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி  மாதத்தில் தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி முடிந்த அடுத்த நாள் `சூரசம்ஹாரம்'  நடைபெறும். அப்போது பக்தர்களும், திருநங்கைகளும் காளியைப் போன்று வேடமணிந்து தேவியுடன் செல்வது வழக்கம். அப்படி 15 வருடங்களாக விரதமிருந்து, காளி வேடமணிந்து முத்தாரம்மனை வழிபட்டுவருபவர் திருநங்கை ராணியக்கா. தனது அனுபவத்தை நினைவு கூர்கிறார் அவர் ...

திருநங்கை ராணி``15 வருசமா நான் மாலை போட்டு, 41 நாளு விரதம் இருந்து குலசைக்குப் போயி காளி வேடம் கட்டி முத்தாரம்மனை வணங்கிட்டு வாரேன். இந்த 15 வருசத்துல பல அற்புதங்கள முத்தாரம்மா நிகழ்த்தியிருக்கா...தெய்வங்கள் எல்லாமே பக்தர்களுக்கு வரம் கொடுக்கும். ஆனா, நாம கேட்ட வரத்த உடனே கொடுக்கறவ முத்தாரம்மா ஒருத்திதான். நாம எத நெனச்சிக்கிட்டு அங்க போய் வேண்டிகிட்டு வர்றோமோ, அந்த வரத்த உடனே கொடுத்து நம்மள திக்குமுக்காட செஞ்சிடுவா குலசையாளும் முத்தாரம்மா. 

பொதுவா முத்தாரம்மன் கோயிலுக்கு வர்றவங்க விரதமிருந்து மாலை போட்டுப் போவாங்க. நான் 41 நாளு விரதமிருந்து வேடம் கட்டிகிட்டு இருக்கேன். திருநங்கைகள்னு இல்லாம ஆண்களும் மாலை போட்டு பெண்காளி, கருங்காளி வேடம் கட்டுவாங்க. விரதமிருந்து வேஷம் கட்டற அத்தனை நாளும் காதுல கம்மல், காலுல கொலுசு, மூக்குத்தி, கை நெறைய வளையல், கழுத்துல தாலி அணிஞ்சு, மஞ்சள் தேய்ச்சித்தான் குளிப்போம். நெத்தி நெறைய குங்குமம் வெச்சிப்போம். மல்லிகைப்பூ வைக்காம இருக்கமாட்டோம். விரதமிருக்கற ஆண்கள் ஒவ்வொரு நாளும் தன்னை ஒரு பெண்ணாவே நெனச்சிக்கிட்டு, அவங்க போலவே நடந்துக்கணும். வேஷம் கட்டாதவங்க சாதாரணமா விரதம் மட்டும் இருக்கலாம். அம்மனுக்கு விரதம் இருக்கறவங்களுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்ல. அவுங்களாள எப்படி முடியுதோ, அப்படி விரதம் இருக்கலாம். பசிச்சா அம்மனை மனசுல நெனச்சிகிட்டுச் சாப்பிடலாம். அவள மனசுல நெனச்சிருந்தா மட்டும் போதும், கேட்ட வரத்த உடனே கொடுத்து நம்மள சந்தோசப்படுத்துற கருணையுள்ளம் கொண்டவ முத்தாரம்மா. 

முத்தாரம்மனுக்கு மாலை போட்டுருக்கறப்போ வீட்டுலேயே காளித்திரை போட்டிருப்போம். இந்தத் திரைக்குள்ள காளி, முத்தாரம்மன்னு நெறைய தெய்வங்களோட படத்த வெச்சி வழிபடுவோம். விரதமிருக்கற அத்தனை நாளும் எங்களுக்கு இதுதான் கோயில். சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடியே எழுந்திரிச்சி, குளிச்சிட்டு விளக்கேத்தி, ஊதுவத்தி காட்டிட்டு அம்மனோட நெனப்புலதான் அந்த நாளைத்  தொடங்குவோம். 

காளி வேடம்

ராத்திரி நைவேத்தியம் காட்டி, தேங்கா ஒடச்சி வழிபடுவோம். நவராத்திரி நாளு ஆரம்பிக்கறப்ப முத்தாரம்மன் கோயில்ல கொடியேற்றம் நடக்கும். அன்னைக்குதான் காப்புக் கட்டிக்குவோம். காளி, அம்மன் வேஷம் கட்டற நாங்க எங்க இருந்தாலும் கொடியேற்றம் நடக்கிறப்போ குலசைக்குப் போயி கடற்கரைல நீராடி, குடத்துல கடல் நீர எடுத்து வந்து கும்பம் வளப்போம். அதுல வேப்பிலைய அழகா சொருகி ஜோடிச்சி காளித்திரை போட்டிருக்கற எடத்துல வச்சி வணங்குவோம். கும்பம் எடுத்துகிட்டு வந்ததுக்கு அப்புறமாத்தான் நாங்க வேஷம் கட்டுவோம். அதுவரைக்கும் கட்டமாட்டோம். அம்மன மனசில நெனச்சிக்கிட்டுதான் இருப்போம். 

கும்பம் எடுத்துட்டு வந்து, கொடியேறுனதுக்கு அப்புறமா, வேஷம் கட்டிகிட்டுப் படியெடுக்கப் போவோம். ஒவ்வொரு வீட்டுக்கும் போயி காணிக்கை வசூல் செஞ்சி, பூஜைக்குத் தேவையான பொருள வாங்கிக்குவோம். வசூல் செஞ்ச காணிக்கை மிச்சமிருந்தா அம்மன் உண்டியல்ல போட்டுடுவோம். ஒத்த ரூபாய கூட எங்க சொந்தச் செலவுக்குப் பயன்படுத்த மாட்டோம். அப்படிப் பயன்படுத்துனா 1000 மடங்கு செலவு வந்துடும். அவ அள்ளிக்கொடுக்கறதுல வள்ளல். ஆனா, தண்டிக்கறதுல அவள மிஞ்ச முடியாது. நவராத்திரி முடிஞ்ச அடுத்த நாளான 10வது திருநாள்தான் சூரசம்ஹாரம் நடக்கும். காளித்திரை அமைச்சி வேடம் கட்டுன எல்லாரும் அன்னைக்கு குலசை வந்துடுவோம். சூரசம்ஹாரம் முடிஞ்சதும் கைல கட்டியிருந்த காப்ப அறுத்துடுவாங்க. அப்போ எல்லோரும் அவுங்களோட காளித் திரைக்குப் போயி கருவாடு, பூ வெச்சி அம்மனுக்குப் படச்சி திரைய மூடிடுவோம். அதுக்கு அப்பறமா 8வது நாளு கடல்ல நீராடி முத்தாரம்மன தரிசிச்சிட்டு காளித்திரைக்கு வந்து பொங்கல் வெச்சிக் கும்பத்தக் கலைப்போம். பொதுவா கடல் நீர எடுத்து வெச்சா 17 நாளைக்கு அப்புறமா வாடை அடிக்க ஆரம்பிச்சிடும். ஆனா, 17 நாளைக்கு அப்புறமா அந்தக் கும்ப நீரு `கமகம'ன்னு மணக்க ஆரம்பிச்சிடும். இப்படிக் கடல் தண்ணி மணம் வீசுனா கும்பத்துக்குச் சொந்தக்காரவங்களோட குடும்பமே நல்லாயிருக்கும்னு ஐதீகம். பொதுவா நோய் தீர மருத்துவர் வேஷம்; நல்லாப் படிக்க ஆசிரியர் வேஷம் எனப் பல வேஷம் கட்டுவோம். ஆனா, அம்மனுக்கு உகந்த வேஷம் பிச்சைக்காரன், குறத்தி. அதனால காளி, அம்மன் வேஷத்தோட பிச்சைக்காரன், குறத்தி வேஷத்தையும் நெறையபேரு கட்டுவாங்க. 

காளித்திரை

15 வருசமா நான் காளி வேஷம் கட்டிக்கிட்டு இருக்கேன். இதனால எனக்கு அம்மன் கொடுத்தது ஏராளம். திருநங்கையா மாறிட்ட என்னை என்னோட குடும்பத்துல இருக்கறவங்க ஒதுக்கி வெச்சிக்கிட்டாங்க. `என்னோட குடும்பத்துல இருக்கறவங்க என்னை ஏத்துக்கணும்னு’தான் முதல்வாட்டி முத்தாரம்மனுக்கு விரதமிருந்து வேஷம் கட்டுனேன். அப்படிக் கொஞ்ச நாளுளேயே என்னோட ஆசைய நிறைவேத்தி வரம் கொடுத்துட்டா என் முத்தாரம்மா. எனக்கு இப்ப எல்லாமே என் தாயி முத்தாரம்மன்தான். ஒரு திருநங்கையா எனக்கு வேற என்ன வரம் வேண்டி இருக்கப் போகுது? என் குடும்பத்துல இருக்கறவங்க என்னைய ஏத்துக்கிட்டாங்க. அதுவே போதும். முதல்வாட்டி நான் மட்டும்தான் முத்தாரம்மன் கோயிலுக்குப் போனேன். ஆனா இப்ப... நான்  எந்தக் கோயிலுக்குப் போனாலும் என் குடும்பத்தோடதான் போயிட்டு வரேன். எந்தக் கோயில் திருவிழாவத் தவறவிட்டாலும், என் தாயி முத்தாரம்மன் கோயில் திருவிழாவ நான் தவறவிடமாட்டேன். எந்தத் திருநங்கையைக் கேட்டாலும் சொல்வாங்க...” என்று நெகிழ்ச்சியுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் திருநங்கை ராணி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க