வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (16/10/2018)

கடைசி தொடர்பு:16:57 (16/10/2018)

மும்மதங்களும் தாமிபரணியில் சங்கமம் - மகா புஷ்கரத்தில் நெகிழ்ச்சி...!

நெல்லை மாவட்டம் மேலச்செவல் கிராமத்தில் சமுதாய நல்லிணக்கத்துடன் மகாபுஷ்கரம் விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள நேசமாணிக்கம் தீர்த்தக் கட்டத்தில் 14-ம் தேதி அதிகாலை முதலாகவே கிராம மக்கள் ஆர்வத்துடன் கூடத் தொடங்கினார்கள்.

மும்மதங்களும் தாமிபரணியில் சங்கமம் - மகா புஷ்கரத்தில் நெகிழ்ச்சி...!

தாமிரபரணி மகாபுஷ்கரம் விழாவில் இந்துக்களுடன் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் கலந்துகொண்டு நதியை வழிபட்டுச் சிறப்புப் பிரார்த்தனைகளில் பங்கேற்றனர். இந்த புஷ்கர விழா மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. 

குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது, அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கரம் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிகம் ராசிக்குச் சென்றார். அதனால் விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி நதியில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 144-வது வருடம் என்பதால், தாமிரபரணி நதியில்  மகாபுஷ்கரமாகக் கொண்டாடப்படுவதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

தாமிபரணி மகாபுஷ்கரம் விழா

கடந்த 11-ம் தேதி இந்த விழாவை பாபநாசத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்ததுடன் நதியில் புனித நீராடினார். அதைத் தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், முக்கூடல், கோடகநல்லூர், சேரன்மகாதேவி, மேலச்செவல், சுத்தமல்லி, திருவேங்கடநாதபுரம், குறுக்குத்துறை, ஜடாயுதீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தக் கட்டங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த படித்துறைகளிலும் பக்தர்கள் நீராடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலுமிருந்து சாதுக்கள், துறவியர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் வந்துள்ளனர். ஆற்றில் உள்ள மண்டபங்கள், படித்துறைகளில் வேதவிற்பன்னர்கள் மூலம் வேதபாராயணம், ஹோமங்கள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். படித்துறைகளில் நடக்கும் வழிபாட்டு நிகழ்வுகளில் வயதானவர்கள் பங்கேற்க வசதியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஆங்காங்கே பேட்டரி கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் வயதானவர்கள் ஆற்றுக்கு அருகில் எளிதாகச் செல்ல முடிகிறது. 

11-ம் தேதி தொடங்கிய புஷ்கரம் விழாவில், தினமும் பக்தர்கள் பெருமளவில் திரண்டு வந்து ஆற்றுக்குத் தீபாராதனை உள்ளிட்டவை செய்து வந்தனர். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக 14-ம் தேதி (ஞாயிறு) மட்டும் நெல்லை மாநகரப் பகுதியில் ஒரு லட்சம் பேரும் மாவட்டம் முழுவதும் உள்ள தீர்த்தக் கட்டங்கள், மண்டபங்கள், படித்துறைகளில் 2 லட்சம் பேரும் என மொத்தம் 3 லட்சம் பேர் நீராடினார்கள். 

புஷ்கரம் விழா

தாமிரபரணி நதி பாயும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் கடந்த 5 நாள்களில் 5,55,000 பேர் புனித நீராடியுள்ளதாகக் காவல்துறை எடுத்துள்ள கணக்கெடுப்பின் மூலமாகத் தெரிய வந்துள்ளது. ஆயுதபூஜையை முன்னிட்டு வரும் 18-ம் தேதி முதல் 4 நாள்களுக்கு அரசு விடுமுறை இருப்பதால் கடைசி 4 நாள்களில் மட்டும் பல லட்சம் பேர் தாமிரபரணி நதியில் நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கெனவே நெல்லை, தூத்துக்குடி பகுதிகளுக்கு வரக்கூடிய ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. சிறப்பு ரயில்களிலும் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. அத்துடன், நெல்லை தூத்துக்குடியில் உள்ள லாட்ஜுகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. ஆயுதபூஜை விடுமுறையின்போது கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் அதைச் சமாளிக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகரித்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, நெல்லை மாவட்டம் மேலச்செவல் கிராமத்தில் சமுதாய நல்லிணக்கத்துடன் மகாபுஷ்கரம் விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள நேசமாணிக்கம் தீர்த்தக் கட்டத்தில் 14-ம் தேதி அதிகாலை முதலாகவே கிராம மக்கள் ஆர்வத்துடன் கூடத் தொடங்கினார்கள். மேலச்செவல் கிராமத்தின் அனைத்து ஜமா அத் நிர்வாகியான நைனாமுகமது தலைமையில் நூற்றுக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் திரண்டு வந்து சிறப்புப் பிரார்த்தனை செய்தார்கள். 

அதைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் அனைவரும், தங்களுக்குத் தடையற்ற மழைவளத்தையும் தாமிரபரணி நதியையும் கொடையாக அளித்த இறைவனுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கும் வகையில் சிறப்புப் பிரார்த்தனையுடன் நதியில் இறங்கி நீராடி மகிழ்ந்தனர். பின்னர், அந்தக் கிராமத்தில் உள்ள தூய யோவான் ஆலய சேகரக் கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 100-க்கும் அதிகமானோர் பங்கேற்ற அந்த நிகழ்வில், தாமிரபரணி நதியால் தொடர்ந்து கிடைத்து வரும் உதவிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் சிறப்பு பிரார்த்தனையை நடத்தினர். 

அதைத் தொடர்ந்து இந்துக்களும் கிறிஸ்துவர்களும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பொங்கலிட்டு வழிபட்டனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மதநல்லிணக்கத்துடன் நடைபெற்ற இந்த விழாவை அங்கு வழிபட வந்திருந்த வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். அனைவரும் இந்த நிகழ்வை வியப்புடன் பார்வையிட்டதைக் காணமுடிந்தது. 

தாமிபரணி புஷ்கரத்தில் கிறிஸ்துவர்கள் வழிபாடு

இந்த நிகழ்ச்சி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ-வான தர்மலிங்கம் கூறுகையில், ``மேலச்செவல் கிராமத்தில் சுமார் 2000-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்தக் கிராமத்தில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் வசித்து வந்த போதிலும், அனைவரும் அண்ணன், தம்பிகளாக வாழ்கிறோம். கடந்த 1992-ல் எங்கள் பகுதியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு கிறிஸ்துவ திருச்சபை சார்பாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சியை ஒட்டுமொத்த கிராமத்தினருமே வரவேற்றோம். இந்துக்கள் பலரும் ஆர்வத்துடன் நிதி உதவி செய்தார்கள். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிலர் கட்டடம் கட்டிக் கொடுத்தார்கள். 

அதைத் தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இப்பகுதி மக்கள் ஒருவருக்கொருவர் அன்பும் நேசமும் கொண்டு செயல்பட்டு வருகிறோம். தற்போது தாமிரபரணி நதிக்காக எடுக்கப்படும் விழாவிலும் அனைவரும் பங்கேற்க முடிவு செய்தோம். இந்த நதியானது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கிறது. அனைவருமே இந்த நதியால் பயன்பெறுகிறோம். அதனால்தான் நமக்கு உதவக்கூடிய நதிக்கு நன்றி செலுத்தும் வகையில் அனைத்து சமுதாயத்தினரும் அவரவர் வழிபாட்டு முறைப்படி நதியை வழிபட்டு அதற்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறோம்’’ என்றார். 

தாமிரபரணி மகாபுஷ்கரம் விழா, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. மனிதனுக்கு உதவும் நதிக்கு நன்றி செலுத்தும் வகையில் நடைபெற்றுவரும் இந்த விழா, மதநல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் மாறியிருப்பது மக்களிடம் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.