வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (17/10/2018)

கடைசி தொடர்பு:14:50 (17/10/2018)

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு! - அசத்திய நெல்லை சிவா

நவராத்திரி விழாவையொட்டி திருநெல்வேலியில் ஆண்டுதோறும் நெல்லை சிவா என்பவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் நவராத்திரி கொலு பலராலும் பேசப்படக் கூடியதாக இருக்கும். இந்த ஆண்டு அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் கொலுவில் என்ன உள்ளது என அறியச் சென்றோம்.

கொலு

அவரின் வீட்டில் உள்ள 9 அறைகளில் 5000 சிலைகளுடன் கொலு வைக்கப்பட்டிருந்தது. முதலில் விநாயகர் சிலை வரவேற்கிறது.முதல் அறையில் மட்டும் அந்தந்த வருடச் சிறப்பு நிகழ்வைக் காட்சிப்படுத்துவது அவர்களின் வழக்கம். கடந்த ஆண்டு ராமானுஜர் பற்றிய நிகழ்வுகளைக் கொலுவில் வைத்திருந்தார்கள். இந்த ஆண்டு,144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் `தாமிரபரணி மகாபுஷ்கர' நிகழ்வைக் கொலுவுக்காக வடிவமைத்துள்ளார்கள். 

இரண்டாவது அறையில் வழக்கமாக `நவராத்திரி தேவி'யாக துர்க்கை சிலையையே பிரதிஷ்டை செய்வார்களாம். ஆனால், இந்த வருடம் தாமிரபரணி மகாபுஷ்கர நிகழ்வை முன்னிட்டு தாமிரபரணி தேவியை `அன்னபூரணி'யாக அலங்கரித்து வைத்திருக்கிறார்கள். 

நவராத்திரி தேவி

மூன்றாவது அறையில் உலக வெப்பமயமாதலின் விளைவுகள், அதிலிருந்து மீள என்ன வழிகள் என்பதை விளக்கி கொலு பொம்மைகளை அமைத்திருக்கிறார்கள். 

அடுத்தடுத்த அறைகளில் சப்த மாதாக்கள், ராமர் வனவாசம், ராமனுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தது, ராமர் பட்டாபிஷேகம், குகனுடன் சேர்ந்து `நாம் இனி ஐவர்' என ராமர் கூறியது, அம்புப் படுக்கையில் பீஷ்மர் கிடந்தது ஆகிய பல காட்சிகளைப் பொம்மைகள் உதவியோடு வடிவமைத்திருக்கிறார்கள். 

நவராத்திரி

குழந்தைகளுக்கு என்றே ஓர் அறை முழுவதும் அவர்களுக்குப் பிடித்த கார்ட்டூன்கள், பொம்மைகள் ஆகியவற்றால் கொலு அமைத்து இருக்கிறார்கள். `அப்துல்கலாமுடன் மாணவர்கள் உரையாடுவது' போன்ற காட்சியையும் வடிவமைத்திருக்கிறார்கள். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ``எம்மதமும் சம்மதம்” என்ற தலைப்புடன் பொம்மைகளை அடுக்கி வைத்திருக்கிறார்கள். இதுதவிர இயேசுவின் பிறப்பு, கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.