வெளியிடப்பட்ட நேரம்: 20:07 (19/10/2018)

கடைசி தொடர்பு:20:43 (19/10/2018)

திருமுறை திருவீதி, 48 பொருள்களால் பேரபிஷேகம், 108 கலச பூஜை... சதய விழாவால் களைகட்டியது தஞ்சாவூர்!

திருமுறை திருவீதி, 48 பொருள்களால் பேரபிஷேகம், 108 கலச பூஜை... சதய விழாவால் களைகட்டியது தஞ்சாவூர்!

ந்தாவது படிக்கும்போது தஞ்சாவூருக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். வாழ்வில், வெளியூர் சென்ற முதல் பயணம் அதுதான். நாங்கள் சென்ற பேருந்து தஞ்சாவூர் எல்லையை அடைந்தபோது தொலைவில் தெரிந்த கோயில் விமானத்தைச் சுட்டிக்காட்டி, ‘இதுதான் பெரியகோயில் விமானம்’ என்று யாரோ குரல் கொடுக்க ஒரே நேரத்தில் பேருந்தில் பயணித்த அனைவருமே ஜன்னல் வழியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தோம். மனதுக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தஞ்சை எல்லையிலிருந்து கோயில் நுழைவாயிலை அடையும் வரை பார்வை கோயில் விமானத்தைவிட்டு அகலவில்லை. பேருந்திலிருந்து இறங்கியதுமே நாங்கள் அனைவரும் ‘ஓ’வென்று கத்திக்கொண்டு கோயிலுக்குள் ஒரே நேரத்தில் ஓடினோம். கேரளாந்தகன் நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்று கோயிலைப் பார்த்தபோது மனதுக்குள் பிரமிப்பு ஏற்பட்டது. அதுவரை பிரமாண்டம் என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருந்தோமேயொழிய, அந்தச் சொல்லுக்கான பொருளை உணர்ந்ததில்லை. தஞ்சை பெரிய கோயிலை முதன்முதலில் கண்டபோதுதான் அந்தச் சொல்லின் பொருளை உளப்பூர்வமாக உணர்ந்தோம்.  

சதய விழா

வானளாவ உயர்ந்து நின்ற கோயிலையும், அதில் காணப்பட்ட தேன் கூடுகளையும் கண்டு அதிசயித்துக்கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த எங்கள் ஆசிரியர், ‘இதுதான் பெரிய கோயில், இதைக் கட்டியவர், சோழப் பேரரசர் ராஜராஜ சோழன்’ என்று தெரிவித்து கோயிலைப் பற்றியும் ராஜராஜனைப் பற்றியும் விவரிக்கத் தொடங்கினார். ராஜராஜன் மீதும், தஞ்சை பெரிய கோயில் மீதும் அப்போது ஏற்பட்ட வியப்பு, பிரமிப்பு இன்று வரைத் தொடர்கிறது. 

முதல் முறை செல்லும்போது மட்டுமல்ல; எத்தனை முறை சென்றாலும் ‘இறைவன் மிகப் பெரியவன், அவன் நமது எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவன், பிரமாண்டமானவன்’ எனும் உணர்வை நமக்கு வரவழைத்துவிடும் தஞ்சை பெரிய கோயில். அந்நியர்களான மாலிக்குகள், நவாப்கள், சுல்தான்கள் ஆகியோர் பலமுறை படையெடுத்து கோயிலைச் சூறையாடியிருக்கிறார்கள். பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் பீரங்கிகளைக் கொண்டு தகர்க்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆயிரம் வருடங்களாக எத்தனையோ இயற்கைச் சீற்றங்களைக் கடந்திருக்கிறது பெரிய கோயில். இத்தனை இடர்களையும் கடந்து அன்று எப்படிப் பிரமிப்பூட்டியதோ அதேமாதிரி இன்றும் நிற்கிறது தஞ்சை பெருவுடையார் கோயில். இந்தக் கோயிலை எழுப்பிய ராஜராஜன் பிறந்த சதய விழா இன்றும் நாளையும் (அக்டோபர் 19, 20) கொண்டாடப்படுகிறது. 

பெரியகோயில்

ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தான் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் ஐப்பசியில் வரும் சதய நட்சத்திர நாள் ராஜராஜன் அவதரித்த நாளாகவே கருதப்பட்டு கொண்டாடப்படுகிறது. தஞ்சை மாவட்ட நிர்வாகம் ராஜராஜனின் பிறந்த நட்சத்திர தினத்தை `சதய விழா’ எனும் பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடுகிறது. 

பெரிய கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், இன்று காலை மங்கள இசை முழங்க விழா தொடங்கியது. பிறகு, மாமன்னன் 'ராஜராஜன் கண்ட திருமுறை', 'ராஜராஜன் ஆட்சிக்காலம்' போன்ற தலைப்புகளில் கருத்தரங்கமும், 'திருமுறை பன்னிசை' என்கிற பெயரில் பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடந்தது. 

நாளை காலை 7.30 மணிக்கு சதய விழாவின் முக்கிய நிகழ்வாக ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். கோயிலில் பணிபுரியும் சிப்பந்திகள் அனைவருக்கும் வஸ்திர தானம் வழங்கப்படுகிறது. அதன் பிறகு பெருவுடையார், பெரியநாயகி திருமேனிக்கு 48 வகையான பொருள்களால் பேரபிஷேகம் நடக்கும். அபிஷேகம் முடிந்த பிறகு 108 கலச பூஜை நடைபெறுகிறது. அதன் பிறகு தேவாரம், திருவாசகம் ஆகியவற்றுக்குப் பூஜை செய்யப்பட்டு நான்கு ராஜ வீதிகளிலும் ‘தேவார வீதி உலா’ நடைபெறும். 

கோயில்கள்

ராஜராஜன் எடுப்பித்த மற்றும் திருப்பணி செய்த ஆலயங்கள் குறித்து அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்...

மாலையில், நாத இசை சங்கமம், திருமுறை பண்ணிசையரங்கம், வில்லுப்பாட்டு, பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் கருத்தரங்கமும் பட்டிமன்றமும் நடைபெறும். இறுதியாக, பெருவுடையார் மற்றும் பெரிய நாயகி உற்சவ சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்து நகரம் முழுமையும் வீதி உலா நடைபெறும்.

ராஜராஜன் உயிருடன் இருக்கும் காலத்தில் செய்யப்பட்ட அவரது சிலையும் பட்டத்து இளவரசி உலகமாதேவி சிலையும் காணாமல் போய் குஜராத்தில் உள்ள தனியார் மியூசியத்தில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தச் சிலைகளை மீட்டுக்கொண்டுவந்து கோயிலுக்குள் வைக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் சுமார் 60 ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், அந்தச் சிலைகளை மீட்டுப் பலத்த பாதுகாப்போடு கோயிலுக்குள் கொண்டு வந்து வைத்துள்ளனர். இந்தச் சிலைகளைக் கொண்டுவரும்போதே மக்கள் திரண்டு பெரிய விழா எடுத்து வரவேற்பு கொடுத்தனர். சதய விழாவுக்குத் தமிழகம் முழுதும் இருந்து வரும் பக்தர்கள் ராஜராஜ சோழன் சிலை முன்பு நின்று உருகி வேண்டிக்கொண்டு செல்கின்றனர். மேலும் ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் செய்யப்பட்டன. 

நெடுங்காலமாக, தஞ்சையில் இருக்கும் ‘ராஜராஜன் சமய சங்கம்’தான் வருடாவருடம் சதய விழாவைக் கொண்டாடி வந்தது. அதன் பிறகு, திருவாவடுதுறை ஆதீனமும் திருவேற்காடு ஐயப்ப சுவாமிகளும் இந்த விழாவைக் கையிலெடுத்து நடத்தினார்கள். இடைப்பட்ட காலத்தில் பல வருடங்கள் சதய விழா நடைபெறவில்லை. 1997-ல் பெரிய கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த பிறகு, தஞ்சை அரண்மனை தேவஸ்தானமும் இந்து சமய அறநிலையத் துறையினரும் சதய விழாவைக் கொண்டாடத் தொடங்கினர். கடந்த 20 வருடங்களாக அரசு விழாவாக உள்ளூர் விடுமுறை விடப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்