விஜயதசமியன்று வன்னிகாசுர வதத்துடன் நிறைவுபெற்ற பழநி நவராத்திரி விழா! | Vijayadashami festival at palani murugan temple

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (20/10/2018)

கடைசி தொடர்பு:16:00 (20/10/2018)

விஜயதசமியன்று வன்னிகாசுர வதத்துடன் நிறைவுபெற்ற பழநி நவராத்திரி விழா!

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான திருஆவினன்குடியெனும் பழநி திருத்தலத்தில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு நவராத்திரி விழா, கடந்த 9-ம் தேதி காலையில் பெரியநாயகி அம்மனுக்கும், உச்சிக்காலத்தில் மலைக்கோயில் மூலவர் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்புக்கட்டும் நிகழ்வோடு தொடங்கியது. விழா நாள்கள் முழுவதும் தெய்வ மூர்த்தங்களுக்குச் சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் நடைபெற்று வந்தன. 11 நாள்கள் நடைபெற்ற இந்தத் திருவிழாவின் நிறைவாக விஜயதசமி கொண்டாடப்பட்டது.

பரிவேட்டை

காலை 9 மணிக்குமேல் பெரியநாயகி அம்மன் கோயிலில் உள்ள பத்திரகாளியம்மன் சந்நிதி மண்டபத்தில் விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், 6 கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் போன்றவை நடத்தப்பட்டன. முத்துக்குமாரசுவாமி, வள்ளி தெய்வானைக்கும் பத்திரகாளியம்மனுக்கும் 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.

பழநி கோயிலில் நவராத்திரி விழா

மலைக்கோயிலில் அதிகாலை 5.50 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 6 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், காலை 6.40 மணிக்கு விளா பூஜையும், 8 மணிக்கு சிறுகாலசந்தியும், 9 மணிக்கு கால சந்தியும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும் நடைபெற்றன. பகல் 1.30 மணிக்குமேல் கோயில் யானைசாயரட்சை பூஜையைத் தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு மூலவரிடம் வில் அம்பு, கத்தி, கேடயம், குத்தீட்டி, சக்திவேல் ஆகியவற்றைப் பெறுகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சந்நிதி வலம் வந்து சிறப்புப் பூஜையும் நடத்தி நடை சாத்தப்பட்டது.

பின்னர் சுவாமி, மலைக்கோயிலில் இருந்து புறப்பாடாகிப் பெரியநாயகி அம்மன் கோயிலை வந்தடைந்தார். தொடர்ந்து, பாரவேல் மண்டபத்தில் வில், அம்பு உள்ளிட்ட ஆயுதங்களைப் புலிப்பாணி பாத்திரசுவாமிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்துக்குமாரசுவாமி, தங்கக்குதிரை வாகனத்தில் எழுத்தருளி சக்திவேலைப் பெற்றார். வன்னிகாசூர வதத்துக்காக, லட்சுமிநாராயணப்பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளினார். முத்துக்குமாரசுவாமி, லட்சுமிநாராயணப்பெருமாள், புலிப்பாணி பாத்திரசுவாமிகள் ஆகியோர் கோதைமங்கலம் கோதை ஈஸ்வரர் கோயிலுக்கு இரவு 7.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

கோதைமங்கலம் கோதை ஈஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளுக்குப் பின், கோயிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடையில் வன்னி மரமாகவும், வாழை மரமாகவும் காட்சி தந்த வன்னிகாசூரனை வில், அம்பு கொண்டு புலிப்பாணி பாத்திரசுவாமி வதம் செய்தார். முன்னதாக வில் அம்பு உள்ளிட்ட  ஆயுதங்கள் முத்துக்குமாரசுவாமி முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன் மீண்டும் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளினார். அங்கு உற்சவருக்குச் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர், சக்திவேல் மலைக்கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இரவு 11 மணிக்கு மேல் அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.