வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (20/10/2018)

கடைசி தொடர்பு:20:44 (20/10/2018)

மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்!

ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரியில் ‘துலா ஸ்நான உற்சவம்’ சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதை முன்னிட்டு, இந்த வருடமும் துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடி மயூரநாதரை வழிபட்டுவருகிறார்கள்.

காவிரி துலாஸ்நானம்

மயிலாடுதுறையில், சிவபெருமான் ஐந்து வள்ளல்களாக ஐந்து இடங்களில் கோயில்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார். மயூரநாதர் கோயிலில் பக்தர்களுக்கு அனைத்தையும் அருளும் வள்ளலாகவும், வள்ளலார் கோயிலில் ஞானத்தை வழங்கும் வள்ளலாகவும், காவிரியில் எங்கே ஸ்நானம் செய்ய வேண்டும் என்று வழி காட்டியதால், விளநகரில் துறை காட்டும் வள்ளலாகவும், மூவலூரில் வழிகாட்டும் வள்ளலாகவும், பெருஞ்சேரியில் பொருள் தரும் வள்ளலாகவும் சிவபெருமான் கோயில் கொண்டிருப்பதால்தான் 'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்று பிரசித்திபெற்று விளங்குகிறது மயிலாடுதுறை.  

கங்கை, யமுனை, சரஸ்வதி, தேவர்கள், முனிவர்கள் ஆகியோர், மக்கள் தம்மிடம் இறக்கிவைக்கும் பாவத்தை மயிலாடுதுறை காவிரியில் உள்ள துலாக் கட்டத்தில் ஐப்பசி மாதத்தில் நீராடி, மயூரநாதரை வழிபடுபட்டு போக்கிக்கொள்வதாக ஐதீகம். அதனால், ஐப்பசி மாதத்தில் எல்லா நாள்களிலும் காவிரி துலாக் கட்டத்தில் நீராடி, இறைவனை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

ஐப்பசி மாதம் முதல்நாள் தொடங்கிய இந்தத் திருவிழாவில், முதல் 10 தினங்கள் சந்திரசேகரப் பெருமான் காவிரி தீர்த்தக் கட்டத்துக்கு எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டு தீர்த்தம் கொடுப்பது வழக்கம். அடுத்த 10 தினங்கள் காலையும் மாலையும் சுவாமி வீதி உலா நடைபெறும். கடைசி 10 நாள் விநாயகர், வள்ளி தேவயானை சமேத முருகர், மயூரநாதர், அபயாம்பிகை, சண்டிகேசர் என்று பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்று பிரசித்திபெற்ற மயிலாடுதுறையில், 'கங்கையினும் புனிதமாய காவிரி’ என்று பெரியாழ்வாரால் பாடப்பெற்ற காவிரி நதியில், ஐப்பசி மாதத்தில் மற்ற நாள்களில் நீராடாவிட்டாலும் துலாக் கட்ட வைபவத்தின் கடைசி நாளான ‘கடைமுழுக்கு வைபவம்’ அன்று நீராடி, மயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையையும் வழிபட்டால், அனைத்து பாவங்களும் விலகி, மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க