வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (21/10/2018)

கடைசி தொடர்பு:09:20 (21/10/2018)

"விழித்திருக்கும் பணியாளரே பேறுபெற்றவராவார்!"- பைபிளின் செய்தி #Bible

விழித்திருக்கும் பணியாளருக்கு இறைவன் தகுந்த கைம்மாறு தருவார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தன்னுடைய சீடர்களிடம் விழிப்பாக இருக்குமாறு போதிக்கிறார். `உங்கள் இடையை வரிந்து கட்டிக்கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போன தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாக இருங்கள்' என்கிறார்.  

ஆண்டவருடைய இரண்டாம் வருகைக்கு ஒவ்வொருவரும் எப்படி இருக்கவேண்டும், எவ்வாறெல்லாம் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பதுபற்றி போதிக்கும் இயேசு, அதற்காகக் கையாளும் ஓர்  உவமைதான் தலைவர், பணியாளர் உவமையாகும். ஆண்டவருடைய வருகை எந்த நேரத்திலும் நடக்கலாம். இரவிலோ, பகலிலோ, சேவல் கூவும் வேளையிலோ அல்லது சாம வேளையிலோ எந்த நேரத்திலும் நடக்கலாம்; அதற்காக நாம் ஒவ்வொருவரும் விழிப்பாகவும் ஆயத்தமாகவும்  இருக்கவேண்டும். இதை உணர்த்துவதற்காகவே இயேசு, திருமண விருந்துக்குச் சென்று, திரும்பி வரும் தலைவர், அவருக்காகக் காத்திருக்கும் பணியாளர் உவமை பற்றிப் பேசுகிறார்.

இயேசு

அந்த காலத்தில் இப்போது இருப்பதுபோன்று போக்குவரத்து வசதிகள் கிடையாது. ஆகவே, வெளியே செல்லும் ஒருவர் நினைத்த நேரத்துக்குத் திரும்பி வரமுடியாது. இரவு நெடுநேரமாகலாம். ஆகவே, அந்நேரம்வரை அந்த மனிதருக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர் காத்திருக்கவேண்டும். அவ்வாறு தலைவர் வரும்போது அந்தத் தலைவருக்குக் கீழ் பணிசெய்யும் பணியாளர் காத்திருந்தார் என்றால், அவர் பேறுபெற்றவர் ஆவார். அது மட்டுமல்லாமல் தலைவர் அவருக்குப் பணிவிடை செய்வார் என்கிறார் இயேசு.

இயேசு சொல்லும் இந்த உவமையை ஆண்டவருடைய இரண்டாம் வருகையோடு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், நாம் இரண்டு உண்மைகளை அறிந்துகொள்ளலாம். ஒன்று விழித்திருக்கும் பணியாளர் பேறுபெற்ற பணியாளராவார் என்பதும், இரண்டாவதாக விழித்திருக்கும் பணியாளருக்கு இறைவன் தகுந்த கைம்மாறு தருவார் என்பதுமாகும். இந்த இரண்டையும் சிறிது ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு

முதலாவதாக விழித்திருக்கும் பணியாளர் எந்த வகையில் பேறுபெற்ற பணியாளராவார் என்று பார்க்கும்போது, அந்தப் பணியாளர்மீது தலைவருக்கு உயர்வான மதிப்பு ஏற்படும். அதனால் அவரை, `நன்று நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளனே, நீ சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராக இருந்தாய். எனவே, பெரிய பொறுப்புகளில் உன்னை நான் அமர்த்துவேன்' என்று சொல்லி அவரைப் பெரிய பொறுப்புகளில் அமர்த்துவார். இரண்டாவதாக, விழித்திருக்கும் பணியாளருக்குத் தலைவர் வந்து பணிவிடை செய்வார் என்பது மிக உயர்ந்த பேறு. பணியாளர்களை விலங்கினும் கீழாக நடத்தும் சூழலில், ஒரு தலைவர் அவரிடம் பணிபுரியும் பணியாளருக்குப் பணிவிடை செய்வார் என்றால், அதனை வார்த்தைகளில் எப்படிச் சொல்வது? ஆனாலும் எவர் ஒருவர் தன் கடமைகளில் மிகவும் பொறுப்போடும் விழிப்போடும் இருக்கின்றாரோ, அப்படிப்பட்டவருக்கு இறைவன் மறு உலக வாழ்வில் தக்க கைம்மாறு தருவார் என்பது உறுதி. 

ஆண்டவருடைய இரண்டாம் வருகை பற்றி சிந்திக்கும் நாம், ஆண்டவருடைய வருகைக்காக நாம் விழிப்போடும் ஆயத்தமாகவும் இருக்கிறோமா? அல்லது வெந்ததைத் தின்று, விதி வந்தால் சாவோம் என்ற மனநிலையில் இருக்கிறோமா? சிந்திப்போம்.

தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்களே பேறுபெற்றவர்கள் ஆகின்றனர். ஆகவே, நாம் ஆண்டவருடைய வருகைக்காக விழிப்புடனும் ஆயத்தமாகவும் காத்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். 

 

 


டிரெண்டிங் @ விகடன்