சபரிமலையில் பெண்கள் வழிபடத் தடைவிதிக்கப்பட்டது எப்போது?#Timeline | When was the ban on women in Sabarimala?

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (23/10/2018)

கடைசி தொடர்பு:18:15 (23/10/2018)

சபரிமலையில் பெண்கள் வழிபடத் தடைவிதிக்கப்பட்டது எப்போது?#Timeline

கலெக்டராகவே இருந்தாலும் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, ஐயப்ப சேவா சங்கம், சாஸ்தா கோயில் தலைமை குருக்கள் ஆகியோர் போராட்டத்தில் குதித்தனர். 

சபரிமலையில் பெண்கள் வழிபடத் தடைவிதிக்கப்பட்டது எப்போது?#Timeline

`சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கவேண்டும்' என்று செப்டம்பர் 28- ம் தேதி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். 
1972 - ம் ஆண்டுக்கு முன்புவரை பெண்கள் சபரிமலைக்குச் சென்று வழிபடுவதில் எந்தத் தடையும் இல்லை. 1972 -ம் ஆண்டுதான் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்குச் செல்லக் கூடாது என முதன்முதலில் தடை விதிக்கப்பட்டது. 1991-ம் ஆண்டு அந்தத் தடைக்கு எதிராக, `சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என்று எஸ்.மஹாதேவன் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கே சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட முதல் வழக்கு. ஆனால், அந்த வழக்கானது அதே ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. `இந்து மதத்தின் நம்பிக்கையின்படியும், கேரளக் கோயில்களில் கடைப்பிடிக்கப்படும் ஆகம விதியின்படியும், சபரிமலை தேவஸ்தான விதியின்படியும் பெண்களை அனுமதிப்பது தவறானது' என்று தீர்ப்பில் கூறப்பட்டது. 

சபரிமலை

1995, டிசம்பர் மாதம் சபரிமலையை ஒரு சர்ச்சை சூழ்ந்தது. பக்தர்கள் புனிதமாகக் கருதி வழிபடும் பம்பா நதியிலும், குடிநீரிலும் மல அணுக்கள் கலந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மண்டலப் பூஜைக்காலத்தில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தக் கேரள அரசு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்தது. அவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பு, அப்போது  பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியராக இருந்த கே.பி.வல்சலகுமாரியிடம் (வயது 40) ஒப்படைக்கப்பட்டது. பணிகளைக் கண்காணிக்க சபரிமலைக்குச் சென்றார் வல்சலகுமாரி. ஆனால், 50 வயதுக்குட்பட்ட பெண்ணை, கலெக்டராகவே இருந்தாலும் அனுமதிக்கமாட்டோம் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, ஐயப்ப சேவா சங்கம், சாஸ்தா கோயில் தலைமைக் குருக்கள் ஆகியோர் போராட்டத்தில் குதித்தனர். 

2006-ம் ஆண்டு சபரிமலையைக் குறிவைத்து மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்தது. பிரபல கன்னட நடிகை ஜெயமாலா, `தனக்கு 28 வயதாக இருக்கும்போது (1987) படப்பிடிப்புக்காகச் சபரிமலை கோயிலுக்குள் சென்றதாக'க் கூறிப் பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஒரு சில மாதங்களிலேயே அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த சர்ச்சைக்குப்பின் அதே ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கம், `சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. பின், நவம்பர் மாதம் கேரளாவில் ஆட்சி செய்த இடதுசாரி ஜனநாயக முன்னணி, இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஆதரித்து நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2008, மார்ச் 7-ம் தேதி இந்த வழக்கானது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. ஆனால், 7 வருடங்களாக விசாரிக்கப்படாமல் வழக்கு நிலுவையில் இருந்தது. அதன்பின்  2016, ஜனவரி 11-ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால், பிப்ரவரி 6-ம் தேதி `பக்தர்களின் மத உணர்வு நடைமுறைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்' என, கேரளாவில் புதிதாக ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து இந்த விவகாரத்தில் குழப்பங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்தன. இதற்கிடையில், `இந்து நவோத்தனா பிரதிஷ்டான்' மற்றும் `நாராயணசர்மா தபோவனம்' சார்பில், `அனைத்து வயதுப் பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

சபரிமலை

இந்த மனுக்கள் அனைத்துக்கும் சேர்த்து விசாரிக்கும் வகையில், 2017 அக்டோபர் 13-ம் தேதி ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றியது உச்ச நீதிமன்றம். இதன்பின், 2018 ஜூலை 17-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகிய ஐந்து நீதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது.  ஜூலை 19-ம் தேதி, `பெண்களுக்குக் கோயிலில் நுழைய அடிப்படை உரிமை உள்ளது' என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. கோயில் தந்திரிகளும், கோயிலோடு தொடர்புடைய பந்தள அரச குடும்பத்தினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், உச்சநீதிமன்றம், சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது என்பது அரசியல் சாசனப் பிரிவு 14-க்கு எதிரானது என்று தெரிவித்ததோடு வழக்கின் இறுதி விசாரணையைத் துரிதப்படுத்தினர். 

செப்டம்பர் 28-ம் தேதி நடைபெற்ற அமர்வில், `சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களை இதுநாள் வரை அனுமதிக்காமல் இருந்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமான செயல். வயது வித்தியாசமின்றி அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குள் செல்லலாம்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கேரளா போராட்டக் களமானது. இந்தச் சூழலில், மாதந்தோறும் நடைபெறும் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை கடந்தவாரம் புதன் கிழமை திறக்கப்பட்டது.  அப்போது கோயிலுக்குள் செல்ல முயன்ற சில பெண்களைப் பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். பலரை 500 மீட்டர் தொலைவில் வரும்போதே திருப்பியனுப்பியுள்ளனர். சபரிமலை மற்றும் அதன் அண்மைப் பகுதிகள் மிகுந்த பதற்றத்துக்குள்ளானது. 

சபரிமலை

தற்போது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில், வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா உள்ளிட்டசிலர், உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மனுக்களை சீராய்வுக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், சபரிமலை விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களும் நவம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இன்று தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களாகவே பதற்றமும், பரபரப்பும் நிலவிய சபரிமலையில்  நேற்று நடை சாத்தப்பட்டது. மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் (நவம்பர்) மீண்டும் நடை திறக்கப்பட இருக்கிறது, 'அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆய்வுக் கூட்டம் விரைவில் நடத்தப்படும்' என  மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகரா தெரிவித்திருக்கிறார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்