வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (24/10/2018)

கடைசி தொடர்பு:19:15 (24/10/2018)

`மரா, மரா' ராமநாம ஜபமாக மாறிய விந்தை! வால்மீகி ஜயந்தி தினப் பகிர்வு

ந்தியாவின் இணையற்ற பக்திக் காவியம் ராமாயணம். பல மொழிகளில் பல வகை ராமாயணங்கள் வழக்கத்திலிருந்தாலும் இவை அனைத்துக்கும் மூலமாக இருப்பது வால்மீகி எழுதிய ராமாயணம்தான். ராமாயணத்தை இயற்றிய வால்மீகியின் பிறந்த தினம் ‘பர்கத் திவாஸ்’ எனும் பெயரில் இன்று கொண்டாடப்படுகிறது. வால்மீகி ஜயந்தி தினத்தில் மாகவி வால்மீகியை நினைவுகூர்வோம்...

வால்மீகி

வால்மீகியின் இயற்பெயர் ரத்னாகர். வழிப்பறிக் கொள்ளையனாகத் தனது இளமைக் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தார். ஒருமுறை வனத்தில் நாரத மகரிஷி சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்தார் ரத்னாகர். மகரிஷியை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்த உடைமைகளைக் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது அந்த முனிவர், ``யாருக்காக இப்படி வழிப்பறி செய்கிறாய்?” என வினவினார். ``என் குடும்பத்துக்காகத்தான்” எனப் பதில் அளித்தார் ரத்னாகர்.  

``உனது செல்வத்தில் பங்கு போட்டுக்கொள்ளும் குடும்பத்தினர் உனது பாவத்தில் பங்கு போட்டுக்கொள்வார்களா?” என வினவினார் மகரிஷி. 

ரத்னாகர் குழப்பத்துடன் தனது வீட்டுக்குச் சென்று அனைவரிடமும் கேட்டார். யாரும் அவரது பாவத்தை ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக உலக வாழ்க்கையை வெறுத்த ரத்னாகர், திரும்பவும் நாரத மகரிஷியிடம் வந்து தாம் பாவங்களிலிருந்து விடுபட அருள்புரியும்படி பிரார்த்தித்துக்கொண்டார்.

நாரதர், அவரை ராம நாமத்தை ஜபிக்கும்படிக் கூறினார். ஆனால், ரத்னாகருக்கு நாரதர் கூறிய ராம மந்திரத்தை உச்சரிக்கத் தெரியவில்லை. எனவே, நாரதர் அருகிலிருந்த ஒரு மரத்தைக் காட்டி, அந்த மரத்தின் பெயரைக் கூறும்படிக் கேட்டார். ரத்னாகர் அந்த மரத்தின் பெயர் 'மரா' என்று கூறினார். அந்தப் பெயரையே ஜபிக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றார் நாரதர். ரத்னாகரும், 'மரா, மரா' என்று தொடர்ந்து உச்சரிக்க, அதுவே ராமநாம ஜபமாகிவிட்டது. காலப்போக்கில் அவர் மீது புற்று வளர்ந்துவிட்டது. அதன் காரணமாக அவருக்கு 'வால்மீகி' என்ற பெயர் ஏற்பட்டது. அவருடைய ராமநாம ஜபத்தின் பலனாக அவருக்குக் காட்சி தந்த பிரம்மதேவர், ``உன்னுடைய ராமநாம ஜபத்தின் பயனாக நாம் உனக்கு தரிசனம் தந்ததுடன், கவிபாடும் திறமையும் அருள்புரிந்தோம். ஏற்கெனவே நாரத மகரிஷியிடம் ராம சரிதத்தைக் கேட்ட நீ, ராமனின் சரிதத்தைக் காவியமாகப் படைப்பாய்' என்று அருளினார். 
ராம காவியம் பிறந்தது.

கொள்ளையனாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினாலும், மனம் திருந்தி ராம காவியத்தைப் படைத்த வால்மீகியை, அவர் பிறந்த தினத்தில் நினைவுகூர்வோம்.

photo courtesy : Wikipedia

நீங்க எப்படி பீல் பண்றீங்க