`அன்பே தவம்!’ ஆனந்த விகடனில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் எழுதும் புதிய தொடர்..! | kundrakudi adigalar writing series in vikatan

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (24/10/2018)

கடைசி தொடர்பு:19:04 (24/10/2018)

`அன்பே தவம்!’ ஆனந்த விகடனில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் எழுதும் புதிய தொடர்..!

*கோயில், இறைவன் எழுந்து அருள்பாலிக்கும் இடம் மட்டுமா... இறைவன், `இப்படி ஓர் இடம் எனக்கு வேண்டும்’ என்று நம்மிடம் கேட்டுப் பெற்றானா... வானமே அவன் எல்லை. பிரபஞ்சமே அவன் ஆளுகை. அப்படியிருக்க, ஒரு சின்னஞ்சிறிய இடத்தில் அவன் தன்னை சுருக்கிக்கொள்வது எதற்காக?

குன்றக்குடி அடிகளார்

* இறைவனிடம் நிறைய கோரிக்கைகளைக் கொண்டுபோய்க் கொட்டுகிறோம். அதற்காக அந்த மகாதேவனை எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறோம். எங்கு தேடினாலும் அவர் நமக்குத் தென்பட மறுக்கிறார். இறைவன் நமக்கு எப்போது தென்படுவார்? 

* நண்பர்கள் தினம் கொண்டாடுகிறோம். எல்லாவற்றுக்கும் தினம். கால வெள்ளத்தில் கரைந்துபோகாமல், நிலைத்து நிற்க வேண்டிய உறவை நீர்க்குமிழிகள்போல் தினம் தினம் கொண்டாடித் தீர்த்துவிடுகிறோம். தேநீர்க்கடைச் சந்திப்புகள், மாலை நேரத்தில் மதி மயங்குகிற சந்திப்புகள்... இவற்றிலெல்லாம் லாப நோக்கம் மட்டுமே. ஆனால், கால வெள்ளத்தில் கரைந்துபோகாமல் கல்வெட்டுப்போல் நிலைத்து நின்ற உறவாகவும் நட்பு இருந்திருக்கிறது.

* திருக்கோயில்கள், உறவை, நட்பை, காதலை வளர்க்கும் இடமாக இருந்தன. இன்றைக்கெல்லாம் ஒருவரைப் பார்த்தால் சிரித்துப் பேசுகிறோம்; நலம் விசாரிக்கிறோம்; கைகுலுக்குகிறோம். கைகுலுக்கும்போதே உள்ளுக்குள் `எப்போது இவனைத் தொலைக்கலாம்?’ என்று ஓர் எண்ணம். உதட்டில் சிரிப்பு, உள்ளத்தில் வெறுப்பு. இப்படித்தான் இரு வேறு நிலைகளில் இன்றைக்கு நட்புலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. 

குன்றக்குடி அடிகளார்

* `உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு’ என்கிறது திருக்குறள். தலைவனும் தலைவியும் கலந்து வாழ வேண்டிய காதல் வாழ்க்கை உடல் சார்ந்த வாழ்க்கையாக இருக்கலாம். ஆனால், அது உயிர் சார்ந்த வாழ்க்கையாக இருக்க வேண்டும். இன்பம், துன்பம், சுகம், துக்கம், நன்மை, தீமை, வாழ்வு, தாழ்வு, ஏற்றம், இறக்கம்... எல்லா நிலைகளிலும் பின்னி, பிணைந்து, கனிந்து, நெகிழ்ந்து, மகிழ்ந்து வாழ்வதுதான் தோழமை வாழ்க்கை. அதுதான் தூய வாழ்க்கையாக இருக்கும். 

தமிழ்ச் சமயம், சடங்குகள், பண்பாடு குறித்து ஆழங்கால் பட்ட ஆன்மிக ஞானி தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல  அடிகளார்.  இலக்கியங்களிலும் வரலாற்றிலும் தீவிரப் புலமை கொண்டுள்ள இவர், ஆனந்த விகடனில் 'அன்பே தவம்' என்ற பெயரில் புதிய தொடர் ஒன்றை எழுதுகிறார். இலக்கியமும் ஆன்மிகமும் அற வாழ்வும் அழகுதமிழில் கலந்துறவாடும் அந்தத் தொடர்,  நாளை (31.10.18) வெளிவரும் ஆனந்தவிகடன் இதழில் தொடங்குகிறது. வாசிக்கத் தவறாதீர்கள்!