வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (25/10/2018)

கடைசி தொடர்பு:21:13 (25/10/2018)

சமணத்திலிருந்து சைவம் தழுவிய பாண்டிய மன்னன்... நின்றசீர் நெடுமாற நாயனார் குருபூஜை பகிர்வு

`நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்’ என்று திருத்தொண்டர் தொகைக் குறிப்பிடும் நின்றசீர் நெடுமாற நாயனாரின்  குருபூஜை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று அனைத்து சிவாலயங்களிலும் நின்றசீர் நெடுமாற நாயனார் திருவுருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற உள்ளன.

நெடுமாற நாயனார்

நின்றசீர் நெடுமாறன், பாண்டிய நாட்டின் அரசர். அவர் சமண மதத்தைச் சார்ந்திருந்தார். அதனால், பாண்டி நாட்டில் சைவம் நலிவுற்றது. இந்த நிலையில், நெல்வேலி என்னுமிடத்தில் சோழர்களுடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற நெடுமாற பாண்டியன், சோழ இளவரசி மானியை மணந்துகொண்டார். (இவரே பின்னாளில் மங்கையர்க்கரசியார் என்ற பெயரில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகும் பேறு பெற்றார்.) நெடுமாறன் சமண சமயச் சார்புள்ளவர். மங்கையர்க்கரசியோ சைவத்தைப் பின்பற்றுகிறவர். 

இந்த நிலையில், பாண்டிய மன்னர் நெடுமாறன் தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். பாண்டிய மன்னரின் தீராப் பிணியைப் போக்க சமண சமய குருமார்கள் பல வகைகளிலும் முயற்சி செய்தனர். யாராலும் குணப்படுத்த முடியவில்லை. இறுதியாக, மங்கையர்க்கரசியாரின் வேண்டுகோளின்படி திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்து, 'திருநீற்றுப் பதிகம்' பாடி, மன்னரின் நெற்றியில் திருநீறு பூச, மன்னரின் வெப்பு நோய் நீங்கியது. அதையடுத்து சமணம் விட்டு விலகி சைவம் சார்ந்த நெடுமாற பாண்டியன், சைவத்துக்கும் சிவனடியார்களுக்கும் பெருந்தொண்டு செய்து சிவபதம் அடைந்தார்.

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம், பரணி நட்சத்திர நாளில் நெடுமாற நாயனார் குருபூஜை கொண்டாடப்படுகிறது. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் மற்றும் திருவேடகம் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோயிலில் உள்ள நெடுமாற நாயனாரின் திருவுருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகிறது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு சிவத் தலங்களிலும் பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க