திருமலை திருப்பதியில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் தடை! | Ban on plastic usage in Tirumala from Nov 1 Onwards

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (25/10/2018)

கடைசி தொடர்பு:16:49 (25/10/2018)

திருமலை திருப்பதியில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் தடை!

திருமலை திருப்பதிக்குத் தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்காக சுவாமி தரிசனம், தங்குவதற்கு அறை வசதி, உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஆகியவற்றுக்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பான முறையில் பல ஏற்பாடுகளைச் செய்து தருகிறது.

திருப்பதி

அரசு விடுமுறை நாள்கள், பிரம்மோற்சவம் போன்ற விழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடுகின்றனர். இதனால் அங்கு டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றன. அவற்றை அப்புறப்படுத்துவதிலும் சிரமங்கள் உள்ளன. மேலும் சுற்றுசூழலுக்கும் அவை தீங்கு விளைவிக்கின்றன.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தேவஸ்தானம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 'திருமலையில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தலாமா கூடாதா?' என்கிற விவாதம் 4 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்றது. இறுதியாக வருகிற நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் திருமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. 

கடந்த அக்டோபர் 1 -ம் தேதியிலிருந்தே கீழ்திருப்பதியில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றி, திருமலையில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கும், ஓட்டல் உரிமையாளர்களுக்கும் முறைப்படி தெரிவிக்கப்படும். இந்தத் தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே திருமலையில் சிகரெட், மது, இறைச்சி உணவு போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க