வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (26/10/2018)

கடைசி தொடர்பு:21:30 (26/10/2018)

மாடுகளைக் கட்டும் கல்லாய் பயன்படும் புத்தர் சிலை - பாதுகாக்க வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை!

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே இருக்கிறது உலகிய நல்லூர் கிராமம். இந்தக் கிராமத்தில் பெருமாள் கோயிலுக்கு அருகே பராமரிப்பின்றி காணப்படும் பழைமையான 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை ஆடு, மாடுகள் கட்டும் கல்லாகப் பயன்படும் பரிதாப நிலையில் காணப்படுகிறது. புத்தர் சிலையை மீட்டு  அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

புத்தரது பரிதாப நிலை

புத்தர் சிலையைப் பற்றியும், அது சுமந்துகொண்டிருக்கும் வரலாற்றைப் பற்றியும் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆறகழூர் பொன்.வெங்கடேசன் கூறியதாவது, ``கி.பி 12-ம் நூற்றாண்டில் பொன்பரப்பின வாணகோவரையன் என்ற குறுநில மன்னன் ஆறகழூரைத் தலைநகராகக் கொண்டு, மகதை நாட்டை ஆண்டு வந்தான். இவன் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனின் படைத் தளபதியாகவும் விளங்கியவன். சைவம், வைணவம், சமணம், பெளத்தம் ஆகிய எல்லா மதங்களையும், இவன் ஆதரித்து வந்துள்ளான். உலகிய நல்லூரில் பொன்பரப்பின ஈஸ்வரமுடைய நாயனார் என்ற சிவாலயத்தையும், பெருமாள் கோயிலையும், புத்தர் கோயிலையும் இவன் கட்டியுள்ளான். கல்வெட்டுகள் இந்த ஊரை `உலகில் வலிய நல்லூர்’ என குறிப்பிடுகின்றன. பெருமாள் கோயில் முற்றிலும் சிதிலமடைந்து, வழிபாடின்றி கிடக்கிறது. இங்கிருந்த சிற்பங்களில் ஒன்றுகூட இப்போது இல்லை. அனைத்தும் திருடப்பட்டு விட்டது. வாணகோவரையன் எழுப்பிய புத்தர் கோயில் மறைந்து புத்தர் சிலை மட்டும் இப்போது வயல் வெளியில் கிடக்கிறது. 

புத்தர்

சுமார் 4 அடி உயரமுள்ள இந்த புத்தர் சிலை இடுப்பு வரை மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது. பத்மாசன நிலையில் அமர்ந்துள்ளார் புத்தர். தலையின் மேற்பகுதியில் ஞானச் சுடர் உடைந்த நிலையிலும், தலையில் சுருள் முடியும் காணப்படுகிறது. நீண்ட காதுகள் உள்ளன. மூக்கானது சிதைக்கப்பட்டுள்ளது. போரின்போதோ அல்லது சமயப் பூசலின் போதோ மூக்கு சிதைக்கப்பட்டிருக்கலாம். அழகிய புன்னகையுடன் காட்சியளிக்கிறார் இந்த புத்தர். மார்பில் ஆடையும், ஆடை விளிம்பும் காட்டப்பட்டுள்ளது. போற்றிப் பாதுகாக்க வேண்டிய இந்த புத்தர் சிலை இப்போது பராமரிப்பும், வழிபாடும் இன்றி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இங்குள்ளவர்கள் வயலில் மாடுகளை மேய்க்கும்போது மாட்டைக் கட்டும் கல்லாய் இதைப் பயன்படுத்துகிறார்கள். புத்தரின் கழுத்தில் சுருக்குக் கயிற்றைப்போல் கட்டி மறு முனையில் மாட்டைக் கட்டியுள்ளது நெஞ்சைப் பதற வைக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் ஏற்படுத்தி இதுபோன்ற பழைமையான சிற்பங்களைப் பாதுகாக்க அரசு முன் வர வேண்டும்” என்று தெரிவித்தார். உலகத்துக்கே ஞான மார்க்கத்தைக் காட்டிய புத்தரின் நிலை பரிதாபமாக இருக்கிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க