திருச்சானூர் பத்மாவதி சேவாக்களுக்கும் ஆன்லைன் புக்கிங்! திருப்பதி தேவஸ்தானம் புதிய வசதி | Like Tirupathi, Trichanur Padmavathi koyil Sevas started on online booking

வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (30/10/2018)

கடைசி தொடர்பு:18:23 (30/10/2018)

திருச்சானூர் பத்மாவதி சேவாக்களுக்கும் ஆன்லைன் புக்கிங்! திருப்பதி தேவஸ்தானம் புதிய வசதி

திருப்பதி வேங்கடவனுக்கு நாள்தோறும் பல சேவைகள் நடைபெற்றுவருகின்றன. இந்தச் சேவைகள் அனைத்துமே பகவத் ராமாநுஜரால் வரையறுக்கப்பட்டு, கடந்த 1000 ஆண்டுகளாக நடைபெற்றுவருவதாகும்.

ஒருநாளின் அதிகாலையில் சுப்ரபாத சேவை தொடங்கி, தோமாலை சேவை, கொலுவு (தர்பார்), சஹஸ்ரநாமார்ச்சனை, நித்திய கல்யாணோற்சவம், டோலோற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஆர்ஜித வசந்தோற்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவை, ஏகாந்த சேவை என தினமும் பல விதமான சேவைகள் பெருமாளுக்கு செய்யப்படுகின்றன. இந்தச் சேவைகளில் பங்கேற்பதற்கு ஆன்லைனிலும், திருமலை திருப்பதி தேவஸ்தான கிளை அலுவலகங்களிலும்  முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

 திருப்பதி திருச்சானூர்

திருமலைக்குச் செல்பவர்கள், கீழ்த் திருப்பதியிலிருக்கும் கோவிந்தராஜப் பெருமாளையும்,  திருப்பதியிலிருந்து 5 கி.மீ தொலைவில் திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாரையும் வணங்கிய பிறகுதான் செல்வார்கள். 

திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயார் சந்நிதியிலும், 'சுப்ரபாத சேவை', 'கல்யாணோற்சவ சேவை' ஆகிய சேவைகள் ஏற்கெனவே நடைபெற்றுவந்தன. அதற்கு முன்பெல்லாம் கோயிலுக்குச் சென்றுதான் பதிவுசெய்துகொள்ள வேண்டும். ஆனால், இப்போது அந்த சேவைக்கான முன்பதிவை  ஆன்லைனில் பதிவுசெய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.  சுப்ரபாத சேவைக்கான கட்டணம் 25 ரூபாயாகவும், கல்யாணோற்சவத்துக்கான கட்டணம் 500 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை, மாதத்தின் எல்லா நாள்களிலும் நடைபெறும்.

பத்மாவதி தாயார்

திங்கள்கிழமைதோறும் நடைபெறும் 'அஷ்டதள பாத பத்மாராதன சேவை'க்குரிய கட்டணம் 300 ரூபாய், வியாழக்கிழமைதோறும் நடைபெறும் 'திருப்பாவாடை சேவை'க்குரிய கட்டணம் 600 ரூபாய்.

வெள்ளிக்கிழமைகளில், திருச்சானூரில்  வழக்கமான சேவைகள் தவிர, மற்றொரு சேவையும் 'வஸ்திர அலங்கார சேவை' என்ற பெயரில் நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் 10,000 ரூபாய். 'அபிஷேக சேவை'க்குரிய கட்டணம் 400 ரூபாய். 'லட்சுமி பூஜை'க்குரிய கட்டணம் 116 ரூபாய். 

சனிக்கிழமைகளில், வழக்கமான சேவைகள் தவிர, 'புஷ்பாஞ்சலி சேவை'க்குரிய கட்டணம் 300 ரூபாய். மாதந்தோறும் புதன் கிழமைகளில் மட்டும் கலசாபிஷேக சேவை நடக்கிறது. இதற்குரிய கட்டணம் 1,000 ரூபாய் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க