ஆயிரம் ஆண்டு விருட்சம் முறிந்து விழுந்தது - வைத்தீஸ்வரன் கோயில் அதிர்ச்சி! | thousand years old tree fallen down

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (01/11/2018)

கடைசி தொடர்பு:20:30 (01/11/2018)

ஆயிரம் ஆண்டு விருட்சம் முறிந்து விழுந்தது - வைத்தீஸ்வரன் கோயில் அதிர்ச்சி!

வைத்தீஸ்வரன்கோயில் செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு உரிய பரிகாரத் தலமாக உள்ளது. இந்த ஆலயத்தின் தலவிருட்சமான வேம்பு மரம், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 

தல விருட்சம்

நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில் தமிழகத்தின் பிரார்த்தனைத் தலங்களில் ஒன்றாகப் பிரசித்தி பெற்ற தலம். ஆதிகாலத்தில் இந்தத் தலத்துக்கு புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வழங்கப்பட்டது. காவிரியின் வடகரை தலங்களில் 16 வது தலமாகத் திகழும் வைத்தீஸ்வரன்கோயில் பாடல் பெற்ற தலமும் ஆகும். இந்தக் கோயிலில் கிழக்கு கோபுர வாசலில் வேம்பு மரம் அமைந்திருந்தது.

வைத்தீஸ்வரன்கோயில் பகுதி கிருதயுகத்தில் கதம்ப வனமாகவும்; திரேதாயுகத்தில் வில்வ வனமாகவும்; துவாபர யுகத்தில் வகுள (மகிழ) வனமாகவும்; கலியுகத்தில் வேம்பு வனமாகவும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.  

வைத்தீஸ்வரன் கோயில்

கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் அமைந்திருந்த தலவிருட்சமான வேம்பு மரம், இன்று பிற்பகல் மழையின் காரணமாக முறிந்து விழுந்தது. வேருடன் பெயர்ந்து விழுந்த மரத்தின் ஒரு பகுதி திருக்கோயில் சுற்றுச்சுவர் மீதும், மற்றொரு பெரும் பகுதி திருக்கோயில் அலுவலகத்தின் மீதும் விழுந்தது. பிற்பகல் நேரம் கோயில் நடை சாத்தப்பட்டிருந்ததால் பக்தர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. 

மரம் முறிந்து விழுந்த உடன், மரத்தின் வேர் பகுதியில் இருந்து விஷ வண்டுகள், பூச்சிகள் வெளியே வந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் அச்சத்தில் தவித்தனர். உடனடியாக சீர்காழி தீயணைப்புத் துறைக்கு தகவல் அனுப்பப் பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீப்பந்தம் கொளுத்தி பூச்சிகளை விரட்டினர்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த தல விருட்சம் வேம்பு மரம் முறிந்து விழுந்ததால் இன்று பிற்பகல் முதல் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் அடைக்கப்பட்டிருக்கிறது. பக்தர்களும் ஊர் பொதுமக்களும் பழைமை வாய்ந்த மிகப்பெரிய தல விருட்சம் முறிந்து விழுந்ததால் அதிர்ச்சியுடன் வேதனையும் அடைந்துள்ளனர்.