``நாத்திகவாதியான நான் ஜோதிடத்தை நம்பியது ஏன்?'' நடிகர் ராஜேஷ் | 'The 50 true events that transformed my mind to like Astrology' - Actor Rajesh

வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (02/11/2018)

கடைசி தொடர்பு:16:23 (02/11/2018)

``நாத்திகவாதியான நான் ஜோதிடத்தை நம்பியது ஏன்?'' நடிகர் ராஜேஷ்

நாத்திகவாதியாக இருந்த நான் ஜோதிட ஆர்வலராக மாறியது இப்படித்தான்.

``நாத்திகவாதியான நான் ஜோதிடத்தை நம்பியது ஏன்?'' நடிகர் ராஜேஷ்

டிகர் ராஜேஷ் `கன்னிப் பருவத்திலே' படம் தொடங்கி, 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஆகச் சிறந்த குணச்சித்திர நடிகர் எனப் பலராலும் போற்றப்படுபவர். உலக சினிமா, தத்துவம், கம்யூனிசம், நாத்திகம், ஆன்மிகம், ஜோதிடம் எனப் பல துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான நூல்களை வாசிக்கும் பழக்கமுள்ளவர். அவர் கடவுள் மறுப்பாளராக இருந்து, இப்போது ஜோதிட நம்பிக்கையுள்ளவராகவும் ஜோதிடத்தில் ஆழ்ந்த புலமையுள்ளவராகவும் மாறி இருக்கிறார். இந்த மாற்றம் அவருக்குள் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி அவரிடம் கேட்டோம்.

``ஜோதிடத்தை ஏதோ சுயலாபத்தின் அடிப்படையிலோ குருட்டு நம்பிக்கையின் காரணமாகவோ நான் ஏற்கவில்லை. நானே பல முறை என் ஜாதகத்தையும், என் உறவினர்கள், நண்பர்கள், திரையுலக நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரது ஜாதகத்தையும் சோதித்துப் பார்த்துக் கேட்டறிந்த பிறகுதான் இதை ஏற்றுக்கொண்டேன்.

ராஜேஷ்

இத்தனைக்கும் நான் தந்தை பெரியாரை நன்றாகப் படித்திருக்கிறேன். வெளிநாட்டு அறிஞர்கள், கடவுள் மறுப்பாளர்கள், நாத்திகர்கள், தத்துவ மேதைகள், விஞ்ஞானிகள், புரட்சியாளர்களின் வாழ்க்கை சரித்திரங்கள் எனப் பலவற்றையும் நான் வாசித்திருக்கிறேன். 
குறிப்பாக, பெட்ரண்ட் ரஸ்ஸல், இங்கர்சால், ஹெச்.ஜி.வெல்ஸ், ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங், நாஸ்டர்டாம்ஸ், டாக்டர் கோவூர் எனப் பலரின் நூல்களை வாசித்திருக்கிறேன். ஆனால், இவர்கள் எல்லோரையும்விட என்னை அதிகம் வியப்புக்கு உள்ளாக்கியது நமது ஜோதிட சாஸ்திரம்தான். 

ராஜேஷ்

ஒரு மனிதனின் மூன்று காலங்களையும் ஜோதிடம் படம் பிடித்துக்காட்டி விடுகிறது. தொலைநோக்கி, நுண்ணோக்கி போன்ற விஞ்ஞான சாதனங்களையெல்லாம்விட, ஜோதிட சாஸ்திரம் துல்லியமானதாக இருப்பதுதான் எனக்கு பெரும் ஆச்சர்யமாக இருக்கிறது.
அப்போது எனக்கு 11 வயது இருக்கும். 

மதுரையிலுள்ள ஒரு மருத்துவமனையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் அத்தையைச் சேர்த்திருந்தார்கள். என் அம்மாவும், தாத்தாவும் அவரைப் பார்க்கப் போயிருந்தார்கள். அப்போது நானும் உடன் போயிருந்தேன். அத்தை ``நான் இன்னும் சிலநாள்கள்தான் இருப்பேன்'' என்று கூறினார். அவர் கூறியபடியே சில நாள்களில் இறந்தும் போனார். அவருக்கு வயது 48. அம்மாவும் தாத்தாவும் பேசிக்கொண்டார்கள். 

அத்தை பிறந்தபோதே பக்கத்து ஊரில் இருந்துவந்த ஜோதிடர், குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்து விட்டு, ``இந்தக் குழந்தை பிறப்பது ஒரு நாடு. வளர்வது ஒரு நாடு, பிறகு தன் சொந்த ஊருக்கு வந்து தனது 48 வது வயதில் புற்றுநோய் கண்டு இறந்து போகும்''என்றும் சொல்லியிருக்கிறார்.

ராஜேஷ்

அதைப்போலவே அத்தை பிறந்தது இங்கே, ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும்போதே சிங்கப்பூர் போய்விட்டார். 17-வது வயதில் திருமணம் முடிந்து, பர்மாவின் தலைநகர் ரங்கூன் போய்விட்டார். பிறகு அங்கிருந்து இந்தியா வந்தார். இங்கு வந்து சில வியாபாரங்களில் அவரும் அவரது கணவரும் ஈடுபட்டனர். ஆனால், அவை அவ்வளவு சரியாக வரவில்லை. அந்த நிலையில்தான் புற்றுநோய்கண்டு இறந்து போனார். இந்தச் சம்பவம் என் மனதில் ஜோதிடத்தின் மீது ஒரு ஆச்சர்ய உணர்வை ஏற்படுத்தியது. என்னுடைய இந்த ஆச்சர்ய உணர்வும் இயல்பாகவே உண்மையைக் கண்டறிவதில் எனக்கு இருக்கும் ஆவலும்தான் என்னை இதை நோக்கிப் பயணிக்க வைத்தன.

1968-ல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்தேன். என் தாய் மாமா பெரியாரிஸ்ட். அவர்தான் எனக்கு பெரியாரைப் பற்றிக்கூறி, 'பெரியார் வாழ்க்கை வரலாறு' புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவரின் உண்மைத் தன்மை என் மனதின் பல கதவுகளைத் திறந்தது. பெரியாரின் படைப்புகள் முழுவதையும் 4 ஆண்டுகளில் படித்துமுடித்தேன்.
ஒரு நாள், எங்கள் வீட்டுத் திண்ணையில் நான் உட்கார்ந்து இருந்தேன். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது மதிக்கத்தக்க இளைஞன், ``ஜோசியம் பாக்குறீங்களா சுவாமி? எனக் கேட்டான். அவன் தோற்றத்துக்கும் பார்க்கும் வேலைக்கும் தொடர்பற்று இருந்தான். 
`சரி, இன்றைக்கு இந்தப் பையனிடம் கொஞ்சம் விளையாடுவோம்' என்று, `நாலணாதான் தருவேன்' எனச் சொல்லி என் கையை நீட்டினேன்,

`உங்களுடைய 11 வது வயதில் நெருப்பில் கண்டம், 12 வது வயதில் நீரில் கண்டம்' என மிகச் சரியாகச் சொன்னான்.
சாய்ந்து படுத்திருந்தவன் எழுந்து உட்கார்ந்தேன். 

ராஜேஷ்

``29வது வயதில் உங்களுக்கு வாழ்க்கை மாற்றமும் வித்தியாசமான வேலையும் அமையும்'' என்று கூறிவிட்டுப் போனான்.
அதேபோல் `கன்னிப் பருவத்திலே' படத்தில் நடித்தேன். அதைத்தொடர்ந்து `அந்த 7 நாட்கள்', `அச்சமில்லை அச்சமில்லை' என்று தொடர்ந்து படங்களில் நடித்தேன். திரையுலகில் கால்தடம் பதித்து வேறு பாதையில் பயணிக்கத்தொடங்கினேன்.

என்னுடைய ஜோதிட ஆய்வை நான் 1985-ல் தொடங்கினேன். இந்த ஆய்வில், சாதாரண வாழ்க்கையிலிருந்து விலகி வித்தியாசமான வாழ்க்கையை வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட பலரைச் சந்தித்து அவர்களின் ஜாதகங்களைப் பெற்று ஆராய்ச்சி செய்தேன். இதில், சிறை சென்றவர்கள், பயங்கரவாதிகள், கொலையாளிகள், விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள், மனைவியை இழந்தவர்கள், காலம் கடந்து திருமணம் செய்துகொண்டவர்கள், பல தார மணமுடையவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், கொலையானவர்கள், விபத்தில் இறந்தவர்கள், இறந்தே பிறந்தவர்கள் எனப் பல்வேறுபட்ட ஜாதகங்களைச் சேகரித்து ஜோதிடர்களிடம் காண்பித்து, ஆய்வு செய்தேன்.

இப்படி நான் பெற்ற அனுபவங்களை வார இதழ் ஒன்றில் ஜோதிடப்படி நடந்த 50 உண்மை நிகழ்ச்சிகளைத் தொடராக ஆதாரங்களுடன் எழுதினேன். அவை வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. `ஜோதிடம் ஒரு புரியாத புதிர்' என்னும் நூலாக வெளிவந்துள்ளது. இதில் இருப்பவையெல்லாம் சத்தியமான வார்த்தைகள். நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் இஷ்டம். இத்தனைக்கும் நான் தொழில்முறை ஜோதிடரும் கிடையாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று கூறி நம்மை ஆச்சர்யப்படுத்தினார்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்