வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (03/11/2018)

கடைசி தொடர்பு:12:35 (03/11/2018)

திருப்பதி பயணத்தில் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில்கள்!

திருப்பதி பயணத்தில் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில்கள்!

திருப்பதி வேங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்வதில்தான் எத்தனை எத்தனை விதங்கள்... சிலர் காலையில் வீட்டிலிருந்து கிளம்பினால், தரிசனம் முடித்து, இரவே ஊருக்குத் திரும்பி மறுநாள் வழக்கம்போல் அலுவலகம் வந்து லட்டு பிரசாதம் கொடுத்து அலுவலக நண்பர்களை ஆச்சர்யப்படுத்துவார்கள். 

திருப்பதி

சிலர் திருமலையில் ஒரு நாள் இரவு தங்கி, மறுநாள் திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து இல்லம் திரும்புவார்கள். வேறு சிலர் நடைப்பயணமாகச் சென்று வழியில் உள்ள கோயில்களையெல்லாம் தரிசித்துவிட்டு பிறகு திருமலையில் இருக்கும் வேங்கடேசப் பெருமாளை தரிசித்து வருவார்கள்.

4 நாள்கள் சேர்ந்தாற் போல் விடுமுறை கிடைக்கும் நாள்களில், கீழ்த்திருப்பதியில் நாம் தங்கியிருந்து தரிசிக்கவேண்டிய கோயில்களைப் பற்றிப் பார்ப்போம்.

கோவிந்தராஜப் பெருமாள்கோயில்

இந்தத் திருக்கோயில் கீழ்த்திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து 200 அடி தொலைவில் இருக்கிறது. `பெரிய அண்ணா', `பெத்த பெருமாள்' என்றும் இவரை அழைப்பார்கள். திருமலையின் வரவு செலவுகளெல்லாம் இவரது மேற்பார்வையில் நடப்பதாக ஐதீகம். இங்குள்ள கோவிந்தராஜப் பெருமாளை, உடையவர் ஶ்ரீராமாநுஜரே பிரதிஷ்டை செய்தார். இங்கு பலநாள்கள் தங்கியிருந்து பகவத் கைங்கரியத்தில் அவர் ஈடுபட்டார். திருமலையில் நடப்பது போன்றே இங்கும் பிரம்மோற்சவம், தெப்போற்சவம் ஆகிய விழாக்கள் நடைபெறுகின்றன.

திருமலை

கோதண்டராமர் கோயில்

கீழ்த்திருப்பதி நகரில் நடுநாயகமாக இந்தக் கோயில் திகழ்கின்றது. மிகவும் பழைமை வாய்ந்த கோயில். ராமாவாதாரத்தில் ஶ்ரீராமன் அயோத்திக்குத் திரும்பிச்செல்லும் வழியில் இங்கு வந்து தங்கியிருந்து சென்றார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

சீனிவாசமங்காபுரம்

சீனிவாசமங்காபுரம் 

திருப்பதியிலிருந்து 12 கி.மீ தொலைவில் இருக்கிறது. புராணகாலத்தில் சந்திரகிரி பகுதியை ஆட்சி செய்து வந்த ஆகாசராஜனின் மகளாக அவதரித்த பத்மாவதியை, சீனிவாசப் பெருமாள் நாராயணவனம் என்னும் இடத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததும், சீனிவாசப் பெருமாள் பத்மாவதி தாயாருடன் திருமலைக்குப் புறப்படத் தயாரானார். ஆனால், `திருமணமான தம்பதிகள் ஆறு மாதத்துக்கு மலையேறக் கூடாது' என அகத்தியர் கூறிவிட்டார். 

மகரிஷியின் வார்த்தைக்கு மறுப்பேது. அகத்திய மகரிஷி கூறியபடி, பெருமாள் திருமலைக்குச் செல்லாமல், வழியிலேயே தங்கிவிட்டார். அப்படிப் பெருமாள் தாயாருடன் தங்கிய தலம்தான் சீனிவாசமங்காபுரம் என்பது ஐதீகம்.

பத்மாவதி தாயார்

இந்தத் திருத்தலத்தில் பெருமாள் மூன்று திருக்கோலங்களில் தரிசனம் அருள்கிறார். சீனிவாசப் பெருமாளாக நின்ற திருக்கோலத்திலும், லட்சுமி நாராயணராக அமர்ந்த கோலத்திலும், ஶ்ரீரங்கநாதரைப் போல் சயனக் கோலத்திலும் சேவை சாதிக்கிறார். திருமலையில் பெருமாளை நீண்டநேரம் தரிசிக்கமுடியாத குறையைப் போக்க விரும்புபவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து, தாங்கள் விரும்பும் அளவுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பெருமாளை தரிசித்து மகிழலாம். 

கபிலேஸ்வரர் ஆலயம்

திருமலைக்கு மலைப்படிக்கட்டுகள் வழியாகப் படியேறிச் செல்லும்போது, அலிப்பிரியிலிருந்து 1 கி.மீ தொலைவில் இருக்கிறது கபிலேஸ்வரர் கோயில். இங்குள்ள `கபில தீர்த்தம்' மிகவும் விசேஷமானது. கபில முனிவர் இங்கு தவம் செய்து சிவ பார்வதியின் அருளைப் பெற்றதால் அமையப்பெற்ற கோயில் இது. இங்கு கபிலேஸ்வரர், காமாட்சி அம்மன், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்குத் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.

கபிலத்தீர்த்தம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில்  

திருப்பதியிலிருந்து 5 கி.மீ தொலைவிலிருக்கிறது, திருச்சானூர். இதை அலர்மேலு மங்காபுரம் என்றும் அழைப்பார்கள். இங்குதான் பத்மாவதி தாயாரின் சந்நிதி இருக்கிறது. திருமலைக்குப் போவதற்கு முன்பாக, இவரைத் தரிசித்துவிட்டுப் பிறகுதான் வேங்கடேசப் பெருமாளை தரிசிப்பார்கள்.

இந்தத் திருக்கோயிலிலும் ஆண்டுதோறும் தாயார் பிறந்த மாதமான கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் சீரும் சிறப்புமாக நடைபெறும். இந்த 9 நாள்களும் திருமலையில் நடைபெறுவதைப் போன்றே சூரிய வாகனம், சந்திர வாகனம் என தினமும் தாயார் உலா வருவார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

இந்தத் திருக்கோயில்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

படங்கள்: திருமலை திருப்பதி தேவஸ்தானம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்