வெளியிடப்பட்ட நேரம்: 13:22 (05/11/2018)

கடைசி தொடர்பு:13:22 (05/11/2018)

தீபாவளி தெரியும்... தமிழகத்தில் கொண்டாடப்படும் சின்ன தீபாவளி பற்றித் தெரியுமா?

தீபாவளி தெரியும்... தமிழகத்தில் கொண்டாடப்படும் சின்ன தீபாவளி பற்றித் தெரியுமா?

தீபாவளி பண்டிகையைப் பற்றியும், அதன் கொண்டாட்டத்தைப் பற்றியும் அனைவரும் அறிவோம். ஆனால் சின்ன தீபாவளி என்று ஒரு பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுவது பற்றி அறிவோமா? 

சின்னத் தீபாவளி

தீபாவளி என்பது நமக்கு ஒருநாள் கொண்டாட்டம்தான். ஆனால், வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை ஐந்துநாள்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஐந்துநாள் கொண்டாட்டத்தில் இரண்டு நாள்கள் தீபாவளி என்ற பெயரில் சின்ன தீபாவளி என்றும் பெரிய தீபாவளி என்றும் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் நாம் தீபாவளி கொண்டாடும் நாளில் அவர்கள் சின்ன தீபாவளி கொண்டாடுகிறார்கள். `நரக(நரகாசுரன்) சதுர்த்தசி' என்று அழைக்கப்படும் அன்றுதான், பகவான் கிருஷ்ணர் நரகாசுரனை சம்ஹாரம் செய்தார். அவன் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டுக்கொண்டபடி, அன்றைய தினம் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். மறுநாள் அமாவாசையன்று பெரிய தீபாவளி கொண்டாடப்படுகிறது.

வட மாநிலங்களில் இருப்பவர்களின் தீபாவளிப் பண்டிகை, ஐந்து நாள்கள் எப்படிக் கொண்டாடப்படுகிறது என்பதைப் பார்ப்போம். 

முதல்நாள் - தந்தேரஸ் எனப்படும் உலோகத் திருவிழா
இரண்டாவது நாள்: சின்ன தீபாவளி என்னும் நரகசதுர்த்தசி
மூன்றாவது நாள்: பெரிய தீபாவளி
நான்காவது நாள்: மில்னி எனப்படும் கோவர்த்தன பூஜை
ஐந்தாவது நாள்: பையா தோஜ் எனப்படும் சகோதரிகளைக் கொண்டாடும் திருவிழா.

தந்தேரஸ் எனப்படும் உலோகத் திருநாள் (5.11.18)

ஐந்து நாள்கள் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளின் முதல்நாள், `தந்தேரஸ்’ என்று வடமொழியில் அழைக்கப்படும் உலோகத் திருநாள். இந்த நாளில்தான் அனைவரும் கடைகளுக்குச் சென்று புத்தாடைகள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்குவார்கள். இன்றைய தினத்தில் வாங்கி பூஜை அறையில் வைத்து லட்சுமி தேவியை வணங்கி பூஜித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

தீபாவளி பட்டாசு

சின்ன தீபாவளி (6.11.2018)

தீபாவளி கொண்டாட்டத்தின் இரண்டாவது நாள் சோட்டா தீபாவளி என அழைக்கப்படும் சின்ன தீபாவளி. இந்த நாளில்தான் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த வெற்றித் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். அன்று காலையில் கங்கா ஸ்நானம் செய்து, முந்தின நாள் வாங்கிய ஆடை, ஆபரணங்களை அணிந்துகொண்டு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுகிறார்கள். அன்று சகல செல்வங்களையும் அருளும்  மகாலட்சுமிதேவி தங்கள் வீட்டுக்கு வருவாள் என்பது நம்பிக்கை. எனவே, மகாலட்சுமிதேவியை வரவேற்கும் விதமாக, வீடுகளிலும் தெருக்களிலும் தீபங்கள் ஏற்றி அலங்கரிப்பார்கள்.

தீபாவளி (7.11.18)

மூன்றாவது நாளான அமாவாசையன்று அவர்கள் பெரிய தீபாவளி கொண்டாடுகிறார்கள். தங்கள் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி தேவிக்கு அன்று மாலை சிறப்பான முறையில் பூஜை, வழிபாடுகள் செய்கிறார்கள். மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்களில் காளி தேவிக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

கோவர்த்தன பூஜை

கோவர்த்தன பூஜை (8.11.18)

நான்காவது நாள் பண்டிகை, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்து வருணன் மற்றும் இந்திரனின் செருக்கை அடக்கிய கிருஷ்ணரைப் போற்றும் வகையில் கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது. சில மாநிலங்களில் மகாவிஷ்ணு வாமனராக வந்து மகாபலிச் சக்கரவர்த்தியை வெற்றிகொண்ட தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இன்னும் சில மாநிலங்களில் ராவணனை சம்ஹாரம் செய்து ராமர் அயோத்திக்குத் திரும்பிய நாளாகவும் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் ராமபிரானுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்கிறார்கள். குஜராத்தில் இந்த நாளைத்தான் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். வியாபார நிறுவனங்களில் இன்றுதான் புதுக் கணக்குத் தொடங்குகிறார்கள்.

பையா தோஜ் (9.11.18) 

அனைத்து வீடுகளிலும் `சகோதரிகளைக் கொண்டாடும் நாள்’ இது. நாம் பொங்கல் சீர், தீபாவளி சீர் கொடுப்பதைப் போன்றே அங்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்குப் பரிசு கொடுத்து அசத்துவார்கள். ரக்ஷா பந்தனுக்கு இணையான நாள். ரக்ஷா பந்தனின்போது சகோதரிகள் தங்களுடைய சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி வாழ்த்து தெரிவிப்பார்கள். இன்று  சகோதரர்கள், சகோதரிகளுக்கு சிறப்பு செய்தும், பரிசுகளைக் கொடுத்தும் கொண்டாடுவார்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையே அன்பை வளர்க்கும் நாள் இன்று.

தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலத்து சகோதரர்கள் இந்த 5 நாள் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்! 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்