களைகட்டிய சிக்கல் சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கும் திருவிழா! | Sikkal singaravelar temple gears up for Kandha shasti festival

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/11/2018)

கடைசி தொடர்பு:21:00 (08/11/2018)

களைகட்டிய சிக்கல் சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கும் திருவிழா!

Sikkali Temple

நாகை அருகே சிக்கல் நவநந்தீஸ்வரர் கோயிலில் அன்னையிடம் வேல் வாங்கும்போது சிங்காரவேலவரின் முகத்தில் வியர்வை சிந்தும் அற்புதக் காட்சிக் காணும் திருவிழா தொடங்கியது.  

Sikkali Temple

நாகை மாவட்டம் சிக்கலில் கி.பி. 4-ம் நூற்றாண்டில் கோச்செங்க சோழனால் கட்டப்பட்ட நவநந்தீஸ்வரர் என்ற பெயருடைய மாடக்கோயில் உள்ளது. இக்கோயிலில்தான் சிங்காரவேலவர், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரனைச் சம்ஹாரம் செய்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது. அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கியவுடன், சிங்காரவேலவர் முகத்தில் வியர்வை சிந்தும் அற்புதக் காட்சியை உலகில் வேறெங்கும் காணமுடியாது என்பர். ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழாவின்போது நடைபெறும் இந்த நிகழ்வைக் காண தமிழகம் முழுவதிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிப்பர்.  

எந்த வினையானாலும் கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பதே ஆன்றோர் வாக்கு. முருகனுக்குரிய விரதங்களில் மிக முக்கியமானதாகக் கூறப்படுவது கந்தசஷ்டி விரதமாகும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்த விரதமிருந்து வணங்கினால் முருகனே குழந்தையாக அவதரிப்பார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. அத்தகைய சிறப்புமிக்க கந்தசஷ்டி திருவிழா சிக்கல் நவநந்தீஸ்வரர் கோயிலில் நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மாலையில், அனுக்ஞை மற்றும் விக்னேஷ்வர பூஜைகள் நடைபெற்றது. 

முதல்நாள் திருவிழாவாக காப்புக் கட்டுதலும், இன்றிரவு அலங்காரத்துடன் சிங்காரவேலவர் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது.  தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெறும். முக்கியத் திருவிழாவாக 12-ம் தேதி காலை திருத்தேர் திருவிழாவும் மாலையில் சக்திவேல் வாங்குதல் மற்றும் சிங்காரவேலவர் முகத்திலிருந்து வியர்வை சிந்தும் காட்சியும் நடைபெறுகிறது. 14-ம் தேதி தெய்வானைத் திருக்கல்யாணமும் 15-ம் தேதி வள்ளித் திருக்கல்யாணமும் 16-ம் தேதி விடையாற்றியும் நடைபெறுகிறது. வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, புகழ், செல்வம், ஆரோக்கியம், ஆயுள் யாவும் கைகூடி வாழ்வில் நிம்மதி, சந்தோஷம், உற்சாகமடைய கந்தசஷ்டி நாளில் கந்தனை தரிசித்து அருள்பெற விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் விரிவாகச் செய்து வருகின்றனர்.