`திருச்செந்தூர் கோயிலில் அபிஷேகக் கட்டணம் உயர்வு!' - பக்தர்கள் அதிர்ச்சி | Tiruchendur temple pooja fare hike: devotees shocked

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (09/11/2018)

கடைசி தொடர்பு:20:20 (09/11/2018)

`திருச்செந்தூர் கோயிலில் அபிஷேகக் கட்டணம் உயர்வு!' - பக்தர்கள் அதிர்ச்சி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி  விழாவையொட்டி அபிஷேக தரிசனக் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருச்செந்தூர் கோயில்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நவம்பர் 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு  விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 5.30 மணிக்கு சுவாமி ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலை புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

12-ம் தேதி  வரை  தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். விழாவின் 6-ம் நாளான 13-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. வழக்கமாக இக்கோயிலில் தினமும்  காலை 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், பகல் 10.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், இரவு 7 மணி அர்த்தசாம அபிஷேகம் ஆகிய மூன்று காலங்களில் அபிஷேகம் நடைபெற்றுவருகிறது. இந்த நேரங்களில் இதுவரை அபிஷேக தரிசனக் கட்டணமாக ரூ.500, விஸ்வரூப தரிசனம், ஏகாந்த தரிசனக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட்டது. கந்தசஷ்டி விழா நடைபெறுவதால் விஸ்வரூப தரிசனத்துக்கு ரூ.2000 அபிஷேக தரிசனக்  கட்டணம் ரூ.3000,  விவிஐபி கட்டணம் ரூ.7500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல, மாதந்தோறும் நடக்கும் வளர்பிறை சஷ்டி, கிருத்திகை, மாதாந்திர வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களிலும் தரிசனக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வெளியூரிலிருந்து குடும்பத்துடன் வரும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.