வெளியிடப்பட்ட நேரம்: 09:22 (10/11/2018)

கடைசி தொடர்பு:09:52 (10/11/2018)

கார்த்திகை மாத ராசிபலன்கள்: துலாம் முதல் மீனம் வரை #Astrology

துலாம் முதல் மீனம் ராசி நேயர்களுக்க் கார்த்திகை மாதத்துக்கு உரிய ராசிபலன்கள், பரிகாரங்கள், கிரகநிலை, வழிபடவேண்டிய தெய்வம், வணங்க வேண்டிய கோயில்கள் பற்றிய தகவல்கள்..

கார்த்திகை மாத ராசிபலன்கள்: துலாம் முதல் மீனம் வரை #Astrology

மேஷம் முதல் கன்னி வரைக்கான ராசிபலன்கள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

துலாராசி அன்பர்களே!

2-ல் சூரியன், குரு; 1-ல் சுக்கிரன்; 1, 2-ல் புதன்; 3-ல் சனி; 5-ல் செவ்வாய்; 10-ல் ராகு; 4-ல் கேது உள்ளனர்.

துலாம் ராசிமாதம் முழுவதும் குரு, சனி, சுக்கிரன், மாதப் பிற்பகுதியில் புதன் சாதகமாக உள்ளனர். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். உங்கள் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடப்பார்கள். சிலருக்குப் பிள்ளைகள் வழியில் பொருள்வரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் இழுபறிக்குப் பிறகு சாதகமாக முடியும். குருபலத்தால்  திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  ஆனால், 4-ல் கேது இருப்பதால் தாயின்  உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் உதவியும் இருப்பதால், மிகவும் எளிதாகச் செய்து நிர்வாகத்தினரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும்.  அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். பங்குதாரர்களால் வியாபாரத்துக்குத் தேவையான பண உதவிக் கிடைக்கும். லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்குப் பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். 

மாணவ - மாணவியர்க்குப்  படிப்பில் இருந்த தேக்க நிலை மாதப் பிற்பகுதியில் மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

சாதகமான நாள்கள்: நவம்பர்: 18, 19, 20, 21, 27, 29, 30, டிசம்பர்: 1, 4, 5, 9, 10
சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 23, 24
அதிர்ஷ்ட எண்கள்: 2,4,7
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர், பெருமாள்

பரிகாரம்: விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்வதும் நன்மைகளைத் தரும்.

விருச்சிகராசி அன்பர்களே!

1-ல் சூரியன், குரு; 12-ல் சுக்கிரன்; 12, 1-ல் புதன்; 2-ல் சனி; 4-ல் செவ்வாய்; 9- ராகு; 3-ல் கேது உள்ளனர்.

விருச்சிகம் ராசிமாதம் முழுவதும் கேது, சுக்கிரன் ஆகியோர் மட்டுமே நன்மை செய்வார்கள். குருவின் பார்வை பலம் ஓரளவு நன்மை தருவதாகவே இருக்கும்.அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். பெண்களால் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும் என்றாலும் பாதிப்பு இருக்காது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக் கூடும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். 

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்குத் தடைப்பட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும்.

புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவ - மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். பொழுதுபோக்குகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும். 

சாதகமான நாள்கள்: நவம்பர்: 21, 22, 23, 24, 29, 30, டிசம்பர்: 1, 2, 3, 6, 11, 12
சந்திராஷ்டம நாள்கள்:நவம்பர்: 25, 26
அதிர்ஷ்ட எண்கள்: 3,7
வழிபடவேண்டிய தெய்வம்; தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர்

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்து, அனுமன் சாலீசா பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

தனுசுராசி அன்பர்களே! 

12-ல் சூரியன், குரு; 11-ல் சுக்கிரன்; 11, 12-ல் புதன்; 1-ல் சனி; 3-ல் செவ்வாய்; 8-ல் ராகு; 2-ல் கேது உள்ளனர்.

தனுசுமாதம் முழுவதும் சுக்கிரன், செவ்வாய், மாத முற்பகுதியில் புதன் ஆகியோரால் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

பிள்ளைகள் வழியில் பெருமைப்படத் தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், சூரியன், குரு, சனி, மற்றும் சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகு தியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்குப் பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. மாதப் பிற்பகுதியில் ஓரளவு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும்  வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் கிடைக்கும். புகழும் கௌரவமும் ஒருபடி உயரும். பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.

மாணவ - மாணவியர்க்குப் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கஷ்டப்பட்டுப் படித்தால் தான், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும்.உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சாதகமான நாள்கள்: நவம்பர்: 23, 24, 25, டிசம்பர்: 2, 3, 4, 5, 10, 13, 14, 15
சந்திராஷ்டம நாள்கள்:  நவம்பர்: 27, 28
அதிர்ஷ்ட எண்கள்: 2,3,7
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி, விநாயகர்

பரிகாரம்: விநாயகருக்கு வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் எண்ணெய்யில் தீபம் ஏற்றி, அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது. மேலும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதும் நன்மை தரும்.

மகரராசி அன்பர்களே!

11-ல் சூரியன், குரு; 10-ல் சுக்கிரன்; 10,11-ல் புதன்; 12- சனி; 2-ல் செவ்வாய்; 7-ல் ராகு; 1-ல் கேது உள்ளனர்.

மகரம்மாதம் முழுவதும் சூரியன், குரு, புதன், சுக்கிரன் ஆகியோர் பெருமளவு நற்பலன்களைத் தருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும்.  உங்கள் முயற்சிகளுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் படைப்புகளுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு மூத்த கலைஞர்களால் அனுகூலம் உண்டாகும். வதந்திகளைப் பொருட்படுத்தவேண்டாம்.

மாணவ - மாணவியர்க்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: நவம்பர்: 18, 19, 20, 25, 27, 28, டிசம்பர்: 4, 5, 6, 7, 11, 12 
சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 29, 30, டிசம்பர் 1
அதிர்ஷ்ட எண்கள்: 1,2,7
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், பைரவர்

பரிகாரம்: அஷ்டமி தினத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும், செவ்வாய்க் கிழமைகளில் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.


கும்பராசி அன்பர்களே! 

10-ல் சூரியன், குரு; 9-ல் சுக்கிரன்; 9, 10-ல் புதன்; 11-ல் சனி; 1-ல் செவ்வாய்; 6-ல் ராகு; 12-ல் கேது உள்ளனர்.

கும்ப ராசிமாதம் முழுவதும் சூரியன், சுக்கிரன், சனி, ராகு ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். வெளிவட்டா ரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சி யும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்குத் தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.
அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. 

தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். பிரபல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

மாணவ - மாணவியர்க்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: நவம்பர்: 21, 22, 27, 29, 30, டிசம்பர்: 1, 6, 7, 9, 10, 14, 15
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர்: 2, 3
அதிர்ஷ்ட எண்கள்: 2,5
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், துர்கை

பரிகாரம்: தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வது நல்லது.  

மீனராசி அன்பர்களே!

9-ல் சூரியன், குரு; 8-ல் சுக்கிரன்; 8, 9-ல் புதன்; 10-ல் சனி; 12-ல் செவ்வாய்; 5-ல் ராகு; 11-ல் கேது உள்ளனர்.

மீனம்மாதம் முழுவதும் குரு, சுக்கிரன், கேது ஆகியோரும் மாத முற்பகுதியில் புதனும் நன்மை செய்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும். பழுதான மின்சார, மின்னணு சாதனங்களை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நினைத்த வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஷேர் மூலம் பணம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. மாதப் பிற்பகுதியில் தாய்மாமன் வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. உணவு தொடர்பாக அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் ஆலோசனைகள் பாராட்டப்படும். சக ஊழியர்கள் கேட்கும் சந்தேகங்களைத் தீர்ப்பதுடன், அவர்களுடைய பணிகளில் உதவி செய்வீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்குப் பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். படைப்புகள் பாராட்டும் பரிசும் பெறும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

மாணவ - மாணவியர்க்குக் கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். நண்பர்களுடன் பழகுவதில் மிகவும் கவனம் தேவை.  சந்தேகங்களை அவ்வப் போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும். ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சாதகமான நாள்கள்: நவம்பர்: 18, 19, 20, 23, 24, 30 டிசம்பர்: 1, 2, 3, 10, 11, 12
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர்: 4, 5
அதிர்ஷ்ட எண்கள்: 5,7,9
வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன், தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செம்பருத்திமாலை அணிவித்து அர்ச்சனை செய்வதும், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதும் நன்மை தரும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.


டிரெண்டிங் @ விகடன்