வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (10/11/2018)

கடைசி தொடர்பு:09:55 (10/11/2018)

கார்த்திகை மாத ராசிபலன்கள்: மேஷம் முதல் கன்னி வரை #Astrology

மேஷம் முதல் கன்னி ராசி நேயர்களுக்கு கார்த்திகை மாத ராசிபலன்கள், பரிகாரங்கள், கிரகநிலை, வழிபடவேண்டிய தெய்வம், வணங்க வேண்டிய கோயில்கள் பற்றிய தகவல்கள்..

கார்த்திகை மாத ராசிபலன்கள்: மேஷம் முதல் கன்னி வரை #Astrology

மேஷராசி அன்பர்களே! 

8-ல் சூரியன், குரு; 7-ல் சுக்கிரன்; 7, 8-ல் புதன்; 9-ல் சனி; 11-ல் செவ்வாய்; 4-ல் ராகு; 10-ல் கேது உள்ளனர்.

மேஷ ராசிமாதம் முழுவதும் செவ்வாய், மாதப் பிற்பகுதியில் புதன் ஆகியோர் மட்டுமே அனுகூலப் பலன்களைத் தருவார்கள். மற்றபடி சூரியன், குரு ஆகியோர்  சாதகமாக இல்லாத காரணத்தால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். அரசாங்கக் காரியங்கள் தாமதமாகவே முடியும். வழக்குகளால் மனதில் ஓர் அச்ச உணர்வு ஏற்படக்கூடும். ஆனால், செவ்வாய் அனுகூலமாக இருப்பதால், எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டுச் சரியாகும். மாதப் பிற்பகுதியில் புதன் சாதகமாக இருப்பதால், எடுத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில்  உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். ஆனால்,  உடல் நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்குத் தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். 
தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விட பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லைசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் சில தடைகள் ஏற்படக்கூடும்.

மாணவர்களுக்கு மாதப் பிற்பகுதியில்  படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் மிகச் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆனால், சக மாணவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.  அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: நவம்பர்: 21, 22, 25, 26, டிசம்பர்: 2, 3, 4, 5, 11, 12, 13, 14, 15
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர் 6, 7
அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், மகாலட்சுமி

பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும் சிறந்த பலன்களைத் தரும்.


ரிஷபராசி அன்பர்களே! 

7-ல் சூரியன், குரு; 6-ல் சுக்கிரன்; 6, 7-ல் புதன்; 8-ல் சனி; 10-ல் செவ்வாய்; 3-ல் ராகு; 9-ல் கேது உள்ளனர்.

ரிஷப ராசிமாதம் முழுவதும் குரு, செவ்வாய், ராகு சாதகமாக உள்ளனர். மாத முற்பகுதியில் புதனும் ஓரளவு நன்மை செய்வார். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ராகு சாதகமாக இருப்பதால், முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்குப் பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனால், பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு. ஆனால், மாதக் கடைசியில் அவர்களில் சிலரால் பிரச்னைகளும் ஏற்படலாம் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். கேதுவின் சஞ்சாரம் சரியாக இல்லாததால், உடல் நலன் அடிக்கடி பாதிக்கப்படக்கூடும். உடனுக்குடன் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. 

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 

தொழில், வியாபாரம் நன்றாகவே இருக்கும். போட்டிகள் குறையும். சக வியாபாரிகள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு வியாபார விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். ஆனால், அரசாங்க வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கவனமாகப் பயன் படுத்திக் கொள்வது அவசியம். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். கஷ்டப்பட்டுப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். 

சாதகமான நாள்கள்: நவம்பர்: 17, 18, 19, 20, 23, 24, 27, டிசம்பர்: 4, 5, 6, 7, 13, 14, 15
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர்: 8, 9, 10
அதிர்ஷ்ட எண்கள்:5,6
வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வெங்கடாசலபதி

பரிகாரம்: விஷ்ணுசஹஸ்ரநாமம் மற்றும் மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைத் தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்குத் துளசி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.


மிதுனராசி அன்பர்களே! 

6-ல் சூரியன், குரு; 5-ல் சுக்கிரன்; 5. 6-ல் புதன்; 7-ல் சனி; 9-ல் செவ்வாய்; 2-ல் ராகு; 8-ல் கேது உள்ளனர்.

மிதுன ராசிசூரியன், சுக்கிரன் மாதம் முழுவதும், மாதப் பிற்பகுதியில் புதனும் நற்பலன்களைத் தருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படச் சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆனாலும், சமாளித்துவிடுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும். 

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். படைப்புகள் பெரும் வரவேற்பு பெறும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். 

மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். கணவரின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சுயதொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

சாதகமான நாள்கள்: நவம்பர்: 18, 19, 20, 21, 22, 25, 29, 30, டிசம்பர்: 1, 6, 7, 8, 9, 10
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர்: 11, 12
அதிர்ஷ்ட எண்கள்:1,7,9
வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை, முருகப்பெருமான்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும், ஞாயிற்றுக்கிழமை களில் துர்கைக்கு அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.


கடகராசி அன்பர்களே!

5-ல் சூரியன், குரு; 4-ல் சுக்கிரன்; 4, 5-ல் புதன்; 6-ல் சனி; 8-ல் செவ்வாய்; 1-ல் ராகு; 7-ல் கேது உள்ளனர்.

கடக ராசிமாதம் முழுவதும் குரு, சனி, சுக்கிரன், மாத முற்பகுதியில் புதன் ஆகியோர் சாதகமாக உள்ளனர். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களால் நன்மைகள் நடக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்குப் பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.  ஆனால், செவ்வாய் 8-ல் இருப்பதால், உடல்நலனில் கவனம் தேவைப்படு கிறது. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.அவருடைய உடல் ஆரோக்கியமும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, உடனே சரியாகிவிடும்.  தாய்வழி உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். சிலருக்கு நீண்டநாளாகத் தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படும். உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசுவதன் மூலம் வாய்ப்புகளைப் பெறமுடியும். ஆண் கலைஞர்களுக்கு பெண் கலைஞர்களாலும், பெண் கலைஞர்களுக்கு ஆண் கலைஞர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும்.

மாணவ மாணவியர்க்குப் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். சிலருக்கு வெளியூர் புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சாதகமான நாள்கள்: நவம்பர்: 21, 22, 23, 24, 27, டிசம்பர்: 2, 3, 8, 9, 10, 11, 12
சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 17, டிசம்பர் 13, 14, 15
அதிர்ஷ்ட எண்கள்: 4,6
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை, மகாவிஷ்ணு

பரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், வியாழக்கிழமை களில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.


சிம்மராசி அன்பர்களே!

4-ல் சூரியன், குரு; 3-ல் சுக்கிரன்; 3, 4-ல் புதன்; 5-ல் சனி; 7-ல் செவ்வாய்; 12-ல் ராகு; 6-ல் கேது உள்ளனர்.

சிம்மம் மாதம் முழுவதும் சுக்கிரன், கேது, மாதப் பிற்பகுதியில் புதன் ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவிக் கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும்.

அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்படச் சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். அரசாங்க வகையில் கிடைக்கவேண்டிய அனுமதிகள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

மாணவ மாணவியர்க்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குச் சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.

சாதகமான நாள்கள்: நவம்பர்: 24, 25, 27, டிசம்பர்: 3, 4, 5, 6, 9, 10, 15
சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 18, 19, 20
அதிர்ஷ்ட எண்கள்:1,3,7
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான், ஆஞ்சநேயர்

பரிகாரம்: திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வதளத்தால் அர்ச்சனை செய்வதும், சிவஸ்துதிகளைப் பாராயணம் செய்வதும் நன்மை தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடவும்.


கன்னிராசி அன்பர்களே!

3-ல் சூரியன், குரு; 2-ல் சுக்கிரன்; 2, 3-ல் புதன்; 4-ல் சனி; 6-ல் செவ்வாய்; 11-ல் ராகு; 5-ல் கேது உள்ளனர்.

கன்னி ராசிமாதம் முழுவதும் சூரியன், சுக்கிரன், ராகு, மாத முற்பகுதியில் புதன் ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளைத் திட்டமிட்டபடி நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங் களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.  இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனை மாதமாக இந்த மாதம் அமையும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். புகழும், ரசிகர்களிடம் செல்வாக்கும் அதிகரிக்கும். 

மாணவ மாணவியர்க்கு, புதன் சாதகமாக இல்லாத காரணத்தால் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆனாலும், குருவின் பார்வை பலம் இருப்பதால், மனத் தெளிவு பெற்று ஓரளவு படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச்  செல்லும் பெண்களுக்குப் பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.

சாதகமான நாள்கள்: நவம்பர்: 18, 19, 20, 25,27, 28, டிசம்பர்: 2, 3, 6, 7, 14, 15
சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர்: 21, 22
அதிர்ஷ்ட எண்கள்: 1,7,9
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், விநாயகர்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் விநாயகருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

துலாம் முதல் மீனம் வரைக்கான ராசிபலன்கள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


டிரெண்டிங் @ விகடன்