வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (11/11/2018)

கடைசி தொடர்பு:10:35 (11/11/2018)

எந்தெந்த ராசிக்காரர்கள் திருமணப் பந்தத்தில் இணையலாம்- ஒரு ஜோதிட அலசல்! #Astrology

எந்தெந்த ராசிக்காரர்கள் திருமணப் பந்தத்தில் இணையலாம்- ஒரு ஜோதிட அலசல்! #Astrology

திருமணத்துக்குப் பின், பலரின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். கணவன் - மனைவி இருவரும் கருத்தொருமித்து அன்புடனும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வார்கள். ஆனால், சிலரின் வாழ்க்கையோ சதாகாலமும் கருத்துவேறுபாடும் சச்சரவுகளுமாக அமைந்துவிடுகிறது. கணவனும் மனைவியும் எதிரும் புதிருமாக இருந்து வீட்டையே நரகமாக்கிக் கொள்வார்கள். இதற்கு என்ன காரணம்?எந்தெந்த ராசிக்காரர்கள் திருமணப் பந்தத்தில் இணையலாம் என்பது பற்றி, ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.  

ராசி

ஒருவருக்கொருவர் காந்தம் போல் ஈர்த்துக்கொண்டு வாழ்வதற்கு, 'ராசிப் பொருத்தம்' மிகவும் முக்கியம். இதனால்தான் நம் முன்னோர்கள் 'மனப்பொருத்தம் இருந்தால், மற்ற பொருத்தம் தேவையில்லை' என்றார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்த மனப்பொருத்தத்துக்குக் காரணமாக இருப்பது ராசிப்பொருத்தம்தான். 

ஜோதிட ரீதியாகப் பார்த்தோம் என்றால், ஜாதகக் கட்டத்தின் 12 கட்டங்களும்  மேஷம் முதலாக மீனம் வரையில் இருக்கும் 12 ராசிகளைக் குறிக்கும். ஒவ்வோர் ராசிக்கும் ஒரு ராசி அதிபதி உண்டு.

கே.பி.வித்யாதரன்மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி செவ்வாய்.
ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி சுக்கிரன்.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி புதன்.
கடக ராசியின் அதிபதி சந்திரன். 
சிம்ம ராசியின் அதிபதி சூரியன்.
தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி குரு.
மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி சனி
ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு வீடு கிடையாது. 

ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு வகையான குணம் உண்டு. உதாரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் முன்கோபியாக இருப்பார்கள். அதனால் இவர்களை அனுசரித்துப்போகக்கூடிய வாழ்க்கைத்துணை அமைந்தால், அவர்கள் இணைபிரியாத தம்பதியாக இருப்பார்கள். 

மேஷ ராசி அதிபதி செவ்வாய்க்கு, கடக ராசி அதிபதியான சந்திரன், சிம்ம ராசி அதிபதியான சூரியன், தனுசு, மீன ராசிகளின்  அதிபதியான குரு ஆகிய கிரகங்கள் நட்பு கிரகங்கள். மேஷ ராசிக்காரர்களின் முன்கோபத்தை இவர்கள் அனுசரித்துப்போவார்கள். 'அவர் அப்படித்தான் கோபத்தில் கத்துவார். அப்புறம் கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தா குழந்தை மாதிரி அன்பா இருப்பார்' என்று சொல்லக் கேட்டிருப்போம். 
சந்திரனும், சூரியனும் செவ்வாய்க்கு நட்பு கிரகங்கள்.  இதனால் இந்த ராசிக்காரர்கள் அவர்களை எளிதாகப் புரிந்துகொள்வார்கள்.  தனுசு, மீனம் ஆகிய ராசிகளின் அதிபதியான குரு, விவேகி என்பதால் அவர்களும் அவரைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள் வார்கள்.
மிதுனம், கன்னி ராசிக்காரர்களுக்கு அதிபதி புதன். இந்த ராசிக்காரர்களுக்கு சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மம், சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபம், துலாம் ராசியினரை இணையாகச் சேர்க்கலாம்.

 

திருமணம்

தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி குரு. இந்த ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகளான மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்களாகப் பார்த்து மணமுடித்து வைத்தால் 'ராசிப் பொருத்தம்' நன்றாக இருக்கும். தம்பதியர் கருத்தொருமித்து இருப்பார்கள்.

ரிஷபம், துலாம் ராசிகளின் அதிபதி சுக்கிரன். இவருக்கு நட்பு கிரகமான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி, மிதுனம் ஆகிய ராசிகளும் மற்றொரு நட்பு கிரகமான சனியை அதிபதியாகக் கொண்ட மகரம், கும்ப ராசிக்காரர்கள் பொருத்தமானவர்களாக இருப்பார்கள். 

கடக ராசிக்கு அதிபதி சந்திரன். இவருக்கு நட்பு கிரகமான சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மம், புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம், சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ஆகிய ராசிக்காரர்கள் பொருத்தமானவர்களாக இருப்பார்கள்.

மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதி சனி. இவருக்கு நட்பு கிரகமான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி, மிதுன ராசிக்காரர்களையும் இன்னொரு நட்பு கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் பொருத்தமாக இருப்பார்கள்.

 

திருமணம்


இவையெல்லாம் மனப் பொருத்தம் இருக்கும் ராசிகளைப் பற்றிய தகவல்கள்தான். ஆனால், திருமணப் பொருத்தம் முழுமையாகப் பார்க்க மற்ற பொருத்தங்களையும் பார்க்கவேண்டும். கூடவே மணமகன், மணமகள் ஜாதகங்களின் யோக பாவங்களையும் தசா சந்திகளையும் பார்த்தே திருமணத்தை முடிவு செய்யவேண்டும்.

'எங்களுக்குத் திருமணமாகிவிட்டது. ஆனால், ராசிப்பொருத்தம் இல்லாததால் எங்களுக்குள் அடிக்கடி மனவருத்தங்கள் ஏற்படுகிறது என்று வருந்துபவர்கள், பரிகாரமாக திருநெல்வேலியில் இருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்மனைத் தரிசித்து வந்தால் தம்பதியினரின் மனக்கவலைகள் நீங்கும்'' எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்