வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (11/11/2018)

கடைசி தொடர்பு:12:12 (11/11/2018)

திருப்பதி திருமலை அன்னதானத்துக்குப் பங்களிப்பு செய்ய விருப்பமா? வழிமுறைகள் இதோ!

திருப்பதி திருமலை அன்னதானத்துக்குப் பங்களிப்பு செய்ய விருப்பமா? வழிமுறைகள் இதோ!

திருமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாளைத் தரிசிக்க வரிசையில் காத்திருக்கும்போதெல்லாம், சூடான பொங்கல், ரவை உப்புமா, சாம்பார் சாதம், பால் என திருப்பதி தேவஸ்தானம் சார்பாக அவ்வப்போது ஏதாவது ஒன்றை வழங்கிக்கொண்டே இருப்பார்கள். 

திருமலையில் சாமி தரிசனம் முடித்து, 'மகா துவாரம்' வழியாக வெளியே வந்து திரும்பியதும், பக்தர்கள் தேடிப்போகும் இடம் அன்னதானக் கூடம்தான். 'மாத்ருஶ்ரீ வெங்கமாம்பாள்' எனும் பெயரில் இயங்கும் இந்த அன்னதானக்கூடத்தில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் வரை உணவருந்தலாம். 

திருப்பதி

பசியோடு வரும் பக்தர்களுக்கு சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல்  மற்றும் துவையலுடன் உணவு வழங்குகிறார்கள். தேவையான அளவு சாப்பிடலாம். 

1985 - ம் ஆண்டு 2,000 பேர் சாப்பிடும் அளவில் தொடங்கப்பட்ட இந்த அன்னதானம் இன்று நாளொன்றுக்கு 60 ஆயிரம் பேர் வரை சாப்பிடும் அளவில் விரிவாக்கம் பெற்றுள்ளது.

'தானத்தில் சிறந்தது அன்னதானம்' என்பதால், பக்தர்கள்  இந்தத் திட்டத்தில் ஆர்வமுடன் பங்களிப்புச் செய்கிறார்கள். 

 உணவுத் தயாரிப்புக்காக நாள் ஒன்றுக்கு 26 லட்ச ரூபாய் செலவாகின்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கியளிக்கிறது. 

பக்தர்கள் பலரும் அன்னதான சேவைக்குப் பணமாகவும், பொருளாகவும், காய்கறிகளாகவும் வழங்கி வருகின்றனர்.

 

திருமலை

திருமலையில் மட்டுமில்லாமல் திருச்சானுர் பத்மாவதி தாயார் சந்நிதியிலும் இதேபோல மூன்றுவேளையும் அன்னதானம் வழங்கப்படுகின்றது. 'அன்னப்பிரசாத அறக்கட்டளை' நன்கொடை வழங்கும் வாய்ப்பை பொதுமக்களுக்கும் வழங்குகின்றது. 

காலைச் சிற்றுண்டிக்கு  6 லட்சம் ரூபாய், மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு தலா 10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நன்கொடையை, தனிநபராகவோ, நிறுவனத்தின் சார்பாகவோ, அறக்கட்டளையின் சார்பாகவோ வழங்கலாம். வழக்கமாக நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் சலுகைகள் இதற்கும் பொருந்தும்.

மேலும் தகவல்கள் பெற விரும்புபவர்கள், The Secretary & Deputy Executive Officer,  
(S.V. Anna PrasadamTrust) 
T.T.D. Administrative Building,  
K.T.Road, Tirupati-517 501. Andhra Pradesh / 
Phone: 0877 – 2264375, 2264237 
Website: www.tirumala.org; 
e-mail: svannadanamtrust@tirumala.org 
தி.தி.தேவஸ்தான நிர்வாகக் கட்டடம், கபிலத்தீர்த்தம் சாலை, திருப்பதி என்ற முகவரியிலோ, 0877-2264258, 2264375, 2264237 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். 

அன்னதானம் தவிர, திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு சமூக நலச் செயல்களையும் செய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கத்துடன் வேங்கடேஸ்வர பால மந்திரம் திட்ட அறக்கட்டளையை நிறுவியது. 

அன்னதானம்

இதனுடன் வேங்கடேஸ்வரா ஜல நிதி திட்டம், வேங்கடேஸ்வரா தகவல் தொழில்நுட்ப அறக்கட்டளை ஆகியவற்றை இணைத்து 'வேங்கடேஸ்வரா சர்வஸ்ரேய்ஸ்சு அறக்கட்டளை' உருவாக்கப்பட்டுள்ளது.  இவற்றின் வாயிலாக ஆதரவற்ற சிறுவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மனவளம் குன்றியவர்களின் காப்பகங்கள், மையங்கள் அமைத்தல், அவர்களின் பராமரிப்புக்கு நிதி வழங்குதல் போன்ற சேவைகளைச் செய்து வருகின்றது.

இந்த நலத்திட்டங்களுக்குக் குறைந்தபட்ச நன்கொடையாக 1,000 ரூபாய் பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் நன்கொடைகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டியில், இந்தத் திட்டங்களுக்கு நிதி உதவிகள் செய்யப்படும். 

இந்தத் திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள், The Executive Officer, Sri Venkateshwara Sarva Sreyas Trust, 
TTD, Tirupati-517501. வேங்கடேஸ்வரா சர்வஸ்ரேய்ஸ்சு அறக்கட்டளை, தி.தி.தேஸ்தானம், திருப்பதி எனும் பெயரில் காசோலையாகவோ (செக்), வரைவோலையாகவோ (டிராஃப்ட்) எடுத்து, The Executive Officer, Sri Venkateshwara Sarva Sreyas Trust, TTD, Tirupati-517501. எனும் முகவரிக்கு அனுப்பலாம். ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான நன்கொடைகள் திருமலை உண்டியலில் சேர்க்கப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்