வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (12/11/2018)

கடைசி தொடர்பு:16:45 (12/11/2018)

மயிலாடுதுறையில் கடைமுழுக்குத் தீர்த்தவாரி பெருவிழா!

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலாக்கட்டத்தில் வரும் 16-ம் தேதி கடைமுழுக்குத் தீர்த்தவாரி பெருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அரசை வலியுறுத்தியுள்ளனர்.

 தீர்த்தவாரி

விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் துணைத் தலைவர் வாஞ்சிநாதன் தமிழக அரசுக்கும் மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். 

``பல்லாயிரம் ஆண்டுகளாக மயிலாடுதுறையில் கடைமுழுக்குத் திருவிழா நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாகக் கடைமுழுக்கின்போது காவிரியில் நீர்வரத்து கிடையாது. தற்போது காவிரியில் அதிக நீர்வரத்து உள்ளதால் தற்போது நடைபெற உள்ள தீர்த்தவாரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடைமுமுக்கு நடைபெறும் இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் குப்பைகள் அதிகம் தேங்கிக்கிடக்கின்றன. 

மக்கள் பெருவாரியாகத் திரளும் இதுபோன்ற இடங்களில் குப்பைகள் தேங்கிக் கிடந்தால் அது பல்வேறு உடல் கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு காலை, மாலை இருவேளைகளிலும் குப்பைகளை அகற்ற வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமல்லாமல், காவிரியின் இரு கரைகளிலும் உள்ள மண்டபங்களில் உள்ள செடிகொடிகளை அகற்றி செப்பனிட வேண்டும். பெண் பக்தர்களின் வருகை அதிகமிருக்கும் என்பதால் அவர்கள் நீராடியதும் உடைகளை மாற்றுவதற்குப் போதுமான தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும். காவிரிக் கரையின் இருபுறங்களிலும் சாலையோரங்களிலும் காணப்படும் தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியதும் அவசியமாகிறது. பல ஆண்டுகளாக மூடப்பட்டு யாருக்கும் பயனில்லாமல் இருக்கும் திருஆபரண சாலையைத் திறக்க வேண்டும். இதன்மூலம் கூட்ட நெரிசலைத் தவிர்த்து பக்தர்கள் சுலபமாக பெரிய கடைவீதியிலிருந்து காவிரி துலாக்கட்டத்துக்கு வந்து செல்ல ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்.

 தீர்த்தவாரி

இந்தத் தீர்த்தவாரிக்கு வருகை தரும் பக்தர்களை காவல்துறையினர் கெடுபிடி செய்யாமல் கனிவான முறையில் கையாள வேண்டும். காவிரியின் வடபுறம் உள்ள கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரைக் கண்டறிந்து தடுக்க வேண்டும். புனித நீராட வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கட்டணங்களுடன்கூடிய பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும். கடைமுழுக்கு விழாவை அரசு விழாவாக அறிவித்து ஆன்மிகப் பட்டிமன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், காவிரி உற்சவத்தின்போது காவிரியில் தண்ணீர் குறையாமல் விடுவதற்கு பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.