வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (13/11/2018)

கடைசி தொடர்பு:11:07 (13/11/2018)

தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் செய்யலாமா... அரசியலமைப்புச் சட்டம் கூறுவது என்ன?

தனது செந்தமிழால் இறைவனைப் பாடிய சுந்தர மூர்த்தி நாயனாருக்கு எடுப்பித்த கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்வதுதானே சரியானதாக இருக்கும்...

தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் செய்யலாமா... அரசியலமைப்புச் சட்டம் கூறுவது என்ன?

`தம்பிரான் தோழர்' என ஈசனுக்கே தோழராக இருந்து பேறு பெற்றவர் சுந்தரமூர்த்தி நாயனார். `திருத்தொண்டத் தொகை' என்ற அற்புத நூலை எழுதி சிவனடியார்களான நாயன்மார்களை உலகறியச் செய்த அற்புதப் பெருமகனார் இவர். நம்பிஆரூரர் எனும் இயற்பெயர் கொண்ட சுந்தர மூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூர் கிராமம், உளுந்தூர்ப்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கிறது. திருநாவலூரில் சுந்தரமூர்த்தி நாயனார் அவதரித்த இல்லம் தற்போது இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் நம்பிஆரூரர் அவதரித்த திருஇல்லத்தைப் புதுப்பித்து தமிழ்மறை பாடி தமிழில் குடமுழுக்கு செய்திருக்கிறார்கள் தம்பிரான் தோழர் அறக்கட்டளையினர் மற்றும் சிவனடியார் திருக்கூட்டத்தினர். ஈசனுக்குச் செந்தமிழால் பாமாலை சூட்டிய தம்பிரான் தோழருக்கு, சிவனடியார்கள் அனைவரும் தெய்வத் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்து பெருமைப்படுத்தியிருக்கிறார்கள். இதற்குப் பாராட்டு குவிந்துகொண்டிருக்கும் வேளையில், ஆகம விதிமுறை மீறப்பட்டிருக்கிறது என்றும் ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது திருநாவலூர் தமிழ் குடமுழுக்கு.

கும்பாபிஷேகம்

நம்பிஆரூர் (சுந்தரமூர்த்தி சுவாமிகள்) திருஅவதாரம் செய்த இல்லத்தைப் புதுப்பித்து, தமிழில் குடமுழுக்கு செய்தவர்களில் ஒருவரான சிவனடியார் மோகன்ராஜ் இதுகுறித்துப் பேசினார். 

 ``இறைவனை வழிபடுவதற்கு எந்த மொழியும் தடையாக இருக்கக் கூடாது. அவரவர்க்கு, அவரவர் தாய் மொழியில் இறைவனை வழிபட உரிமை இருக்கிறது. வரையறைகளுக்கு அப்பாற்பட்டவன்தான் இறைவன். வரையறைக்குள் வருகிறவன் இறைவனாக இருக்க முடியாது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று அவரவர் தாய் மொழியில் வழிபட அனைவருக்கும் உரிமை இருக்கிறது. உலகிலேயே மூத்த மொழி தமிழ். தமிழ் போன்ற தொன்மையான, தெய்வத்தன்மை உடைய மொழி வேறெங்கும் இல்லை. இதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகளைக் காட்ட முடியும். சிவனடியார்களும், நாயன்மார்களும் தெய்வத் தமிழின் துணை கொண்டு ஏராளமான அற்புதங்களைச் செய்திருக்கிறார்கள். `தமிழுக்கு மந்திர ஆற்றல் இல்லை அதனால், தமிழில் குடமுழுக்கு செய்யக் கூடாது’ என்று கூறுகிறவர்களுக்கு இதுதான் என் பதில்... தமிழால் செய்ய முடியாத அற்புதத்தை வேறு எந்த மொழியாலும் செய்ய முடியாது. தெய்வத் தமிழ் மொழியைக் கேட்பதற்காகத்தான் இறைவனே பூலோகத்தில் பல்வேறு அற்புதங்களைச் செய்திருக்கிறார். 

சுந்தரரின் தமிழைக் கேட்பதற்காகத்தான் சென்னைக்கு அருகிலுள்ள கச்சூர் ஆலக்கோயில் எனுமிடத்தில் இறைவனே வீடு வீடாகச் சென்று பிட்சையெடுத்துக் கொண்டு வந்து சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விருந்திட்டார். சுந்தரமூர்த்தி நாயனாரின் தெய்வத் தமிழுக்குப் பெருமை சேர்க்கவே, இறைவனே பிட்சாண்டவராக வீடுவீடாகச் சென்று பிட்சை எடுத்தார். இல்லாவிடில் அவரே சுந்தரரின் பசியைத் தீர்த்திருக்கலாமே!

தமிழ்முறை கும்பாபிஷேகம்

திருஞானசம்பந்தர் மதுரையில் நெருப்பைப் பார்த்து, ``பையவே சென்று பாண்டியனைப் பற்றுக” என்று தெய்வத் தமிழில்தான் ஆணையிட்டார். அந்த நெருப்புதான் பாண்டியனை வெப்பு நோயாகப் பீடித்தது. தமிழைத் தவிர வேறு எந்த மொழிக்கும் `தெய்வம்’ என்ற அடைமொழி கிடையாது. தெய்வத் தன்மை நிரம்பிய மொழி தமிழ். நாம், யாரையும் இந்த மொழியில்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதில்லை. இறைவனை அனைத்து மொழிகளிலும் வழிபாடு செய்யலாம் என்பதே எங்களுடைய கருத்து. எனவே, மற்ற மொழிகளை விடவும் சிறந்த தமிழ் மொழியில் இறைவனை வழிபடுவதும், அவருக்குக் குடமுழுக்கு செய்வதும் எங்கள் உரிமை. 

தமிழில் வழிபட்டு, தமிழ் முறையில் குடமுழுக்கு செய்யும்போது `ஆகமம்’ என்பதை முன்னிறுத்தித் தடுக்கிறார்கள். ஆகமம் என்பது பதி, பசு, பாசம் ஆகியவற்றைப் பற்றி விளக்குவது. இறைவன், உயிர், உலகத்தின் உண்மைத் தன்மை ஆகியவற்றைப் பற்றிச் சொல்லக்கூடிய நூல்கள் அனைத்துமே ஆகம நூல்கள்தான். அப்படிப் பார்த்தால் பதி, பசு, பாசம் ஆகியவற்றை விவரிக்கும் சைவ சித்தாந்தமும்கூட தமிழில்தான் உள்ளது. ஆகமங்கள் வடமொழியில் இருப்பதால், அவர்கள் தமிழில் குடமுழுக்கு நடைபெறுவதை எதிர்க்கிறார்கள். ஆனால், நமக்குத் தமிழ் இருக்கிறது. தமிழின் தெய்வத்தன்மை இருக்கிறது. இதைக் கொண்டு வழிபாடு செய்து, குடமுழுக்கு நடத்துகிறோம். எங்கள் கடவுளுக்கு எங்கள் மொழியில் வழிபடுவதென்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்களுக்கு அளித்திருக்கும் அடிப்படை உரிமை. இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. இந்த வழக்கு நீதிமன்றம் சென்றபோது நீதியரசரும் இதே பதிலைத்தான் கூறியிருக்கிறார்.

நாங்கள் கோயிலாக வழிபடும் இந்த இல்லம் பாழடைந்து இருந்தது. இறைவனுக்குத் தொண்டுபுரிந்த சுந்தர மூர்த்தி நாயனாருக்கு அடியார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோயில் எடுத்து குடமுழுக்கு செய்ய ஏற்பாடு செய்தோம். குடமுழுக்குக்கு ஏற்பாடு செய்யும்போது அமைதியாக இருந்துவிட்டு கடைசி நேரத்தில் நீதிமன்றம் சென்று தடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால், நீதியரசர் `தேவாரம் பாடி தெய்வத்தமிழ் மொழியில் குடமுழுக்கு செய்வதற்குத் தடை விதிக்க முடியாது’ என்று கூறி அவர்களை அனுப்பி வைத்துவிட்டார். அவர்களின் செயல்கள் அனைத்திலும் உள்நோக்கம் இருக்கிறது.குடமுழுக்கு

நாங்கள் தமிழ் முறையில் குடமுழுக்கு செய்த பிறகு, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்கூட தினமும் காலையில் தண்ணீர் கொண்டு வந்து இறைவன் மீது ஊற்றி வணங்கிவிட்டுச் செல்கிறார்கள். இதுவே, ஆகம முறைப்படி செய்திருந்தால் குழந்தைகள் உள்ளே செல்ல அனுமதித்திருப்பார்களா? தனது செந்தமிழால் இறைவனைப் பாடிய சுந்தர மூர்த்தி நாயனாருக்கு எடுப்பித்த கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்வதுதானே சரியானதாக இருக்கும். அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். இது எந்த வகையில் தவறு” என்று ஆதங்கத்துடன் கேட்டார் மோகன்ராஜ்.

``கும்பாபிஷேகம் ஆகமப்படித்தான் செய்யவேண்டும்'' என்று தன் தரப்பு வாதத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பெரும்பேர்கண்டிகை ரவிச்சந்திர சிவாசார்யர். 

``தேவாரப் பாராயணம்  செய்தல், இறைவனுக்குத் தமிழ்மறை ஓதுதல் ஆகியவை காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாடுதான். ஆனால், கும்பாபிஷேகம் செய்வதென்பது தமிழ் நடைமுறை கிடையாது. கும்பாபிஷேகம் செய்யும் முறைகள் பற்றி ஆகம நூல்களில்தான் எழுதப்பட்டுள்ளன. ஆகம மந்திரங்களைக்கொண்டே கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். சுவாமிக்கு ஆத்மார்த்தமாகச் செய்வதற்குப் பெயர்தான் பூஜை. இதைத்தான் ஆத்மார்த்தம்... பரார்த்தம் என்று சுலோகங்கள் குறிப்பிடுகின்றன. ஆத்மார்த்தம் என்பது நமக்காக வேண்டிக்கொள்வது. பரார்த்தம் என்பது உலக நன்மைக்காக வேண்டிக்கொள்வது. கும்பாபிஷேகம், யாகங்கள், ஹோமங்கள் அனைத்தும் செய்வது லோகத்தின் க்ஷேமத்துக்காக மட்டுமே. இவர்கள் ஆகம விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், அதுவும் அமாவாசை தினத்தில் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள். கலியுகத்தின் அலங்கோலம்தான் இது. கலியுகத்தில் அனைத்துமே தவறாகத்தான் நடக்கும். 

இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் யார் வேண்டினாலும் அதை இறைவன் நிச்சயம் ஏற்றுக்கொள்வார். ஆனால், அதற்கென்று ஒரு வரைமுறை இருக்கிறது. தமிழில் குடமுழுக்கு செய்வதற்கு மந்திரங்களே இல்லை. பெரியவர்கள் இறைவனை இப்படித்தான் வழிபடவேண்டும், இப்படித்தான் குடமுழுக்கு செய்யவேண்டும் என்று வரைமுறைகளை வகுத்திருக்கிறார்கள். அதன்படிதான் அனைத்தையும் செய்ய வேண்டும். அதை யார் மீறினாலும் தவறுதான். குறுகிய கண்ணோட்டத்துடன் இவர்கள் செயல்படுகிறார்கள். இன்று இவர்கள் செய்திருக்கிறார்கள், நாளை இவர்களைத் தொடர்ந்து மற்றவர்களும் இதையே செய்வார்கள். இதுபோன்று ஆகம விதிமுறைகளை மீறிச் செயல்படும்போது அதனால் ஏற்படும் பின்விளைவுகளை நாம் அனைவரும்தான் எதிர்கொள்ளவேண்டும்” என்று தெரிவித்தார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்