வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (13/11/2018)

கடைசி தொடர்பு:15:00 (13/11/2018)

தாயாரிடம் வேல் பெற்ற சிங்காரவேலவர் - கோலாகலமாக நடைபெற்ற கந்தசஷ்டி திருவிழா!

நாகை மாவட்டம், சிக்கல் நவநந்தீஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சிங்காரவேலர் நேற்று (12.11.18) இரவு, தனது தாயாரான வேல்நெடுங்கண்ணியம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  இதைத் தொடர்ந்து இன்று (13.11.18) சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

கந்தசஷ்டி

இந்த  ஆலயத்தில்தான் முருகன் தன் அன்னையிடம் சக்திவேலைப் பெற்றதாகவும், பின்னர் அந்த சக்திவேலைக் கொண்டு திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாகவும் 'கந்தபுராணம்' கூறுகிறது. சிவாம்சத்தைத் தவிரத் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற வரத்தைச் சிவபெருமானிடம் பெற்றவன் சூரபத்மன். இதனால் அவன் தேவர்களையும், மக்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். சூரபத்மனை யாரும் அழிக்க முடியாத நிலையில் அவனை வதம் செய்ய, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு சுடர்களில் இருந்து ஷண்முகக் கடவுள் அவதாரம் செய்தார். பார்வதி தேவி தன் சக்திகளை ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கினார். அந்த வேலே சக்திவேல். சிக்கல் கோயிலில் தன் தாய் பார்வதி தேவியான 'வேல்நெடுங்கண்ணி' அம்மனிடம் அந்த சக்திவேலை முருகப்பெருமான் பெற்று, சிவனுக்குச் சமமான சக்தியை அடைந்து திருச்செந்தூரில் சூரபத்மனை சம்ஹாரம் செய்கிறார். இந்த வதத்தினால் முருகனுக்கு வீரகத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷத்தை நீக்க கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் தன் வேலை பூமியில் ஊன்றி சரவணப்பொய்கை என்ற குளத்தை ஏற்படுத்தினார். பின்பு அதில் நீராடி, சிவனை நோக்கி தவமிருந்து தன் மீதிருந்த வீரகத்தி தோஷத்தைப் போக்கிக் கொண்டார் என்று புராணங்கள் கூறுகின்றன.

கந்த சஷ்டி

நாகை மாவட்டம், சிக்கலில் அமைந்திருக்கும் ஆலயத்தில் கடந்த 7-ம் தேதி அன்று கந்தசஷ்டி திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா நடைபெறும் நாள்களில் பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதியுலா காட்சியும் எழுந்தருளுகிறார்.  இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு 8 மணியளவில் சிங்காரவேலர், தனது தாயார் வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனை தரிசனம் செய்தனர். இன்று (13.11.18) சிங்காரவேலர் ஆட்டுகிடா வாகனத்தில் சென்று சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் வரும் 15-ம் தேதி முருகன்-தெய்வானை திருக்கல்யாணமும், 16-ம் தேதி முருகன்-வள்ளி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.