வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (13/11/2018)

கடைசி தொடர்பு:16:20 (13/11/2018)

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு 7 கோடியில் அன்னதானக் கட்டடம்!

வேங்கடவன் அருளாட்சி செலுத்தும் திருமலையில், வேங்கடவனை தரிசிக்க வரும் பக்தர்கள் பசியால் வாடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், திருமலை தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் தினமும் 60,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. திருமலையைப் போலவே திருச்சானூர் அருள்மிகு பத்மாவதி தாயார் கோயிலிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 

திருச்சானூர்

கடந்த பல வருடங்களாகவே சிறிய கட்டடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக பக்தர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் கருத்தில் கொண்ட தேவஸ்தான நிர்வாகம், சுமார் 6.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பெரிய அளவில் அன்னதானக் கூடம் ஒன்றைக் கட்டியுள்ளது.

இந்தப் புதிய கட்டடத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுதாகர் யாதவ் திறந்து வைத்தார். விழாவுக்கு தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி பாஸ்கர் தலைமை தாங்கினார்.

பத்மாவதி தாயார்

அப்போது, அவர், ``பல வருடங்களாவே திருமலையில் அன்னதானம் நடைபெற்று வந்தது. என்றாலும் சிறிது காலம் தடைப்பட்டிருந்த அன்னதானம் 1985-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் தினமும் 2,000 பேருக்கு உணவு வழங்கும் விதமாக தொடங்கப்பட்ட அன்னதான திட்டம், தற்போது கூட்டம் மிகுந்த நாள்களில் 2 லட்சம் பேர் வரைக்கும் கூட அன்னதானம் வழங்கும் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

அன்னதானக்கூடம்

அன்னதான திட்டம் சிறப்பாக நடைபெற வேண்டுமென்பதற்காக 1,021 கோடி ரூபாய் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை மற்றும் பக்தர்கள் வழங்கும் நன்கொடையை வைத்து, இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. தினமும் 7,000 டன் காய்கறிகள் பக்தர்களால் நன்கொடையாக அளிக்கப்படுகிறது. 'தானத்தில் சிறந்தது அன்னதானம் அதுவே இந்து தர்மம்' என்பதை திருமலை திருப்பதி தேவஸ்தானம் முறையாகக் கடைப்பிடித்து வருகின்றது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் சந்நிதியில் தினமும் 5,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காகதான் புதிய அன்னதானபவன் கட்டப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க