வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (13/11/2018)

கடைசி தொடர்பு:19:50 (13/11/2018)

அசுரர்களை வென்று அமரர்களைக் காத்த செந்திலாண்டவர் - திருச்செந்தூர் கந்தசஷ்டி வைபவம்!

சூரபத்மனின் அகந்தையை ஒழித்து மயிலாகவும், சேவற்கொடியாகவும் முருகன் ஆட்கொள்ளும் விழாவாம் சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது

அசுரர்களை வென்று அமரர்களைக் காத்த செந்திலாண்டவர் - திருச்செந்தூர் கந்தசஷ்டி வைபவம்!

திருச்செந்தூரில் சூரபத்மனின் ஆணவம், கர்வம், அகந்தையை ஒழித்து மயிலாகவும் சேவற்கொடியாகவும் முருகப்பெருமான் ஆட்கொள்ளும் விழா கந்தசஷ்டித் திருவிழா. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கடற்கரையில் பக்தர்கள் குவிந்தனர்.  

கந்தசஷ்டி

முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடும், குருபரிகார ஸ்தலத்தில் முக்கியமானதுமான கோயில் திருச்செந்தூர்  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் ஆவணித் திருவிழா, மாசித்திருவிழா, தைப்பூசம், வைகாசி விசாகம் எனப் பல விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில், சூரபத்மனோடு முருகப் பெருமான் போர் புரிந்து அவனை ஆட்கொண்ட இடம் திருச்செந்தூர் என்பதால் இங்கு நடக்கும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. ஐப்பசி அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாள்கள் கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. 

இந்த ஆண்டு சஷ்டிவிழா கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தினமும் காலை சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு எழுந்தருள்வதும், பின்னர் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரத்துக்குப் பிறகு சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருக்கோயில் வளாகத்தில் தங்கி விரதம் கடைப்பிடித்து, சுவாமி ஜெயந்திநாதரை தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் 6-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெற்றது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

மதியம் 12 மணிக்கு யாகசாலை தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வேல்வகுப்பு, வீரவாள் வகுப்புப் பாடல்களுடன் சண்முகவிலாச மண்டபத்தைச் சேர்ந்து அங்கு தீபாராதனை நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகங்களும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

சம்ஹாரம்

மாலை 3.30 மணிக்கு சூரபத்மன், திருச்செந்தூர் சிவன் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் கிளம்பி ரதவீதிகளைச் சுற்றி வந்து, முருகப் பெருமானுடன் போர் புரிய கடற்கரைக்கு வந்தார். மாலை 4.30  மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சஷ்டி மண்டபத்தில் இருந்து எழுந்தருளி சாமரம் வீச, பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்புப் பாடல்கள் பாட, மேளதாளத்துடன் கடற்கரைக்குப் புறப்பட்டார். தொடர்ந்து, 6 முருக பக்தர்கள் கையில் வேல் ஏந்தியபடி முருகப்பெருமானைப் பின் தொடர்ந்து சென்றனர். சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரைக்கு வந்ததும், சூரசம்ஹார நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் சூரபத்மனின் மூத்த சகோதரன் கஜமுகன் முருகப்பெருமானுடன் போர் புரிந்தான். இடமிருந்து வலமாக மூன்று முறையும், வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி வந்தவுடன் முருகப் பெருமானிடமிருந்து வேல் எடுத்து கஜமுகாசுர சம்ஹாரம் நடைபெற்றது.

தொடர்ந்து, முருகப்பெருமான் தன் பாசறைக்குத் திரும்பினார். பின்னர் சூரபத்மனின் இளைய சகோதரன் சிங்கமுகாசுரனுடன் போரிட்டு ஜெயந்திநாத சுவாமி சம்ஹாரம் செய்தார். இறுதியாக சூரபத்மன் போருக்கு வந்தான். மாயையின் உதவியால் பல வடிவங்களில் முருகப் பெருமானுடன் போரிட்ட சூரபத்மன், தன் மாயா சக்தியின் காரணமாக ஒரு மரமாகி நின்றார். அவனுடைய மாயலீலையைத் தெரிந்துகொண்ட முருகப்பெருமான், தான் அம்பிகையிடம் பெற்ற சக்திவேலை ஏவி, மரமாகி நின்ற சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். பின்னர் அவனை சேவல் கொடியாகவும் மயில் வாகனமாகவும் ஆட்கொண்டார். சம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். 

அறுபடை

 

ஆனைமுகச் சூரனை ஒழிப்பது ஆணவத்தை ஒழிப்பதாகும். சிங்க முகச் சூரனை ஒழிப்பது கண்மத்தை ஒழிப்பதாகும். சூரபத்மனை ஒழிப்பது `நான்', 'எனது' என்ற அகங்காரத்தை ஒழிப்பதாகும் என்கிறார்கள் பக்தர்கள். சூரபத்மனை வெற்றி கொண்டதால் சுவாமிக்கு ஜெயந்திநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.  

சம்ஹாரம்

தொடர்ந்து, கடற்கரையில் அய்யா வைகுண்டபதி கோயில் அருகில் உள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அலங்கார தீபாரதனைக்குப் பின்னர், சுவாமி, உள்பிராகார மண்டபத்தைச் சுற்றி உலா வந்தார். இறுதியாக, 108 மகாதேவர்கள் சந்நிதி முன்பு சுவாமி ஜெயந்திநாதரின் திருவுருவம் தெரியும் கண்ணாடி பிம்பத்துக்கு `சாயாபிஷேகம்’ நடைபெற்றது.

நாளை, காலை 6 மணிக்கு தெய்வானை அம்பிகை தபசுக் காட்சிக்கு எழுந்தருளலும், மாலை 6 மணிக்கு தோள்மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களின் கந்த சஷ்டி கவசம், சண்முகார்ச்சனை, பஜனைப் பாடல்களின் குரல் திருச்செந்தூர் எங்கும் எதிரொலித்து பக்திப் பரவசத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. 

சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண தூத்துக்குடி மட்டுமல்லாமல், நெல்லை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். பாதுகாப்புப் பணிகளுக்காகத் தூத்துக்குடி மட்டுமல்லாமல் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 3,200 போலீஸார்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றம் மற்றும் திருட்டுச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் குற்றப்பிரிவு போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அறுபடை

பக்தர்களைக் கண்காணிக்கும் வகையில், நகரில் 10 இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள், 70 சிசிடிவி. கேமராக்கள், 10 எல்.இ.டி.-க்கள் ஆகியவை பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதியில் ரோந்து செல்லக்கூடிய இரண்டு ரோந்து வாகனங்கள் (ஏ.டி.வி) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்செந்தூருக்கு 185 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. கந்த சஷ்டி விழாவின் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்