வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (14/11/2018)

கடைசி தொடர்பு:16:20 (14/11/2018)

திருச்செந்தூரில் முருகன் தெய்வானை திருக்கல்யாண வைபவம்!

ந்த சஷ்டி விழாவின் முக்கிய நாளாக இன்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. 

முருகன் திருமணம்

திருச்செந்தூரில் கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கந்த சஷ்டி விழா, அதன் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு கந்தன் கோயில்களில் கோலாகலமாக அரங்கேறியது. இதையடுத்து கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான முருகன் - தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று முருகன் கோயில்களில் நடைபெறவிருக்கிறது. 

திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கே திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பிறகு, காலை 5 மணியளவில் தெய்வானை அம்பாள் தபசுக் காட்சிக்குப் புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து இன்றைய முக்கிய நிகழ்வான முருகன் - தெய்வானை ஆகியோர் மாலை மாற்றிக்கொள்ளும் வைபவம் மாலை 6.30 மணியளவில் நடைபெறவிருக்கிறது. அதன் பிறகு இருவரும் ரத ஊர்வலம் வந்தபிறகு கோயில் மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. 

திருக்கல்யாணம் முடிந்த பிறகு அடுத்த மூன்று நாள்களும் முருகன் - தெய்வானை தம்பதிகள் திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்கள். கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளான 19-ம் தேதியன்று முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் முருகப் பெருமானைப் போற்றியும், போரில் வென்ற வேலவரின் வெப்பம் தணிக்கவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றிக் கொண்டாடுவார்கள்.  

ஞானசக்தியான முருகப்பெருமான், கிரியா சக்தியான தெய்வானையைத் தன்னுடன் இணைத்துக்கொள்ளும் தெய்வீக நிகழ்வே முருகன் - தெய்வானை திருமணம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க