வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (15/11/2018)

கடைசி தொடர்பு:15:35 (15/11/2018)

`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்!

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயில் துலா உற்சவப் பெருவிழா கடந்த வாரம் புதன்கிழமையன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கஜா புயல் வருகையால் காலையே தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயூரநாதர்

ஐப்பசி மாதத்தில் (துலா மாதம்) துலா உற்சவம் எனும் ஐதீக விழா நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்துக்கான விழா, நவம்பர் 7 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, நாள்தோறும் அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேக ஆராதனைகளும், சுவாமி அம்பாள் புறப்பாடும், துலாக்கட்ட காவிரியில் தீர்த்தம் கொடுத்து அருளும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், துலா உற்சவத்தின் எட்டாவது நாளாகிய இன்று மாலை மயூரநாதர் தேரோட்டம் நடைபெறும் என்றிருந்த நிலையில் தற்போது கஜா புயல் இன்று மாலை கடலூர் - பாம்பன் இடையே, நாகை அருகே கரையைக் கடக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து இன்று மாலை தேரோட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. 

அம்பலவாண தம்பிரான் சுவாமிகள்

இன்று மாலை தேரோட்டம் நடைபெறும் நேரத்தில் கஜா புயலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பக்தர்களும் பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பதால், இன்று காலையே `அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி' பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வடம் பிடித்து திருத்தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்திழுக்க திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆதீனம் கட்டளை விசாரணை அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாதசிவாசாரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.